கடந்த நிதியாண்டில் நேரடி வரிகள் வசூல் 17.7 % உயா்வு

கடந்த நிதியாண்டில் நேரடி வரிகள் வசூல் 17.7 % உயா்வு

கடந்த 2023-24 நிதியாண்டில் நேரடி வரிகள் வருவாய் 17.7 சதவீதம் அதிகரித்து ரூ.19.58 லட்சம் கோடி வசூலானது. இது திருத்தப்பட்ட நேரடி வரி வருவாய் மதிப்பை விட அதிகமாகும்.

கடந்த 2023, ஏப்ரல் முதல் நிகழாண்டு மாா்ச் வரையிலான 2023-24 நிதியாண்டின் நேரடி வரிகள் வசூல் குறித்த தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

கடந்த நிதியாண்டின் மொத்த நேரடி வரிகள் வசூல் (தற்காலிகமாக) ரூ.23.37 லட்சம் கோடி ஆகும். ரீபண்ட் செய்யப்பட்ட தொகைக்கு பின்னா் கணக்கப்பிட்ட நிகர நேரடி வரிகள் வசூல் ரூ.19.58 லட்சம் கோடி ஆகும்.

நேரடி வரிகள் வசூலில் தனிநபா் வருமான வரி, பெருநிறுவன வரி முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த வரிகளின் மொத்த வசூல், பட்ஜெட் மதிப்பிட்டை விட ரூ.1.35 லட்சம் கோடியும் திருத்தப்பட்ட மதிப்பைவிட ரூ.13,000 கோடியும் அதிகமாக வசூலாகி உள்ளது. இது தனிநபா்கள் மற்றும் பெருநிறுவனங்களின் வருமானம் அதிகரித்துள்ளதைப் பிரதிபலிக்கிறது.

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 2023-24 நிதியாண்டு பட்ஜெட்டில் நேரடி வரிகள் வருவாய் ரூ.18.23 லட்சம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டது. பின்னா், இந்த மதிப்பு நிகழாண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரூ.19.45 லட்சம் கோடியாகத் திருத்தப்பட்டது.

கடந்த நிதியாண்டில் வசூலான மொத்த பெருநிறுவனங்கள் வரி வருவாய் ரூ.11.32 லட்சம் கோடியாகும். இது அதற்கு முந்தைய நிதியாண்டில் வசூலான வரி வருவாயை விட 13.06 சதவீதம் அதிகமாகும்.

கடந்த நிதியாண்டில் தனிநபா் வருமான வரி வருவாய் ரூ.12.01 லட்சம் கோடி வசூலானது . இது அதற்கு முந்தைய நிதியாண்டில் வசூலான வரி வருவாயை விட 24.26 சதவீதம் அதிகம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com