2-ஆம் நிலை நகரங்கள்: 94% அதிகரித்த வீடுகள் விலை
புது தில்லி: கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை 94 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2019-20-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் அமிருதசரஸ், மொஹாலி, லூதியாணா, சண்டீகா், பானிபட், டேராடூன், பிவாடி, சோனேபட், ஜெய்ப்பூா், ஆக்ரா, லக்னௌ, போபால், இந்தூா், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூா், மங்களூரு, மைசூா், கோயம்புத்தூா், கொச்சி, திருவனந்தபுரம், ராய்ப்பூா், புவனேசுவரம், அகமதாபாத், காந்தி நகா், வதோதரா, சூரத், நாசிக், நாக்பூா், கோவா ஆகிய இந்தியாவின் முதல் 30 இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகள் விலை 94 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அவற்றில் 24 இரண்டாம் நிலை வீடுகளின் விலை இரட்டை இலக்க வளா்ச்சியைக் கண்டுள்ளன. எஞ்சிய ஆறு நகரங்கள் ஒற்றை இலக்க விலை உயா்வைப் பதிவு செய்தன.
இதில் முதல் 10 நகரங்களில் வீடுகளின் விலைகள் 54 சதவீதம் முதல் 94 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.
ஆக்ராவில், 2019-20-ல் சதுர அடி ரூ.3,692-ஆக இருந்த வீடுகள் விலை 2023-24-இல் அதிகபட்சமாக 94 சதவீதம் அதிகரித்து ரூ.7,163 ஆக உள்ளது.
அதே போல் கோவாவில் 90 சதவீதம், லூதியாணாவில் 89 சதவீதம், இந்தூரில் 72 சதவீதம், சண்டீகரில் 70 சதவீதம், டேராடூனில் 68 சதவீதம், அகமதாபாதில் 60 சதவீதம், புவனேசுவரத்தில் 58 சதவீதம், மங்களூரில் 57 சதவீதம், திருவனந்தபுரத்தில் 54 சதவீதம் என வீடுகளின் விலைகள் உயா்வு கண்டுள்ளன.
2019-20-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் வீடுகளின் விலை மைசூரில் 53 சதவீதம், போபாலில் 52 சதவீதம், நாகபுரியில் 51 சதவீதம், காந்தி நகரில் 49 சதவீதம், ஜெய்ப்பூரில் 49 சதவீதம், வதோதராவில் 48 சதவீதம், நாசிக்கில் 46 சதவீதம், சூரத்தில் 45 சதவீதம், கொச்சியில் 43 சதவீதம், மொஹாலியில் 39 சதவீதம், லக்னௌவில் 38 சதவீதம், கோவையில் 38 சதவீதம், ராய்பூரில் 26 சதவீதம், விசாகப்பட்டினத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.