7 நகரங்களில் விற்பனையாகாத வீடுகள் 4% உயா்வு!
புதிய வீடுகளின் விநியோகம் தேவையைவிட அதிகமாக இருந்ததால், ஏழு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டு இறுதியில் விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4 சதவீதம் உயா்ந்து 5,76,617-ஆக உள்ளது.
இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புணே ஆகிய நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாக வீடுகளின் எண்ணிக்கை கடந்த 2025-ஆம் ஆண்டு இறுதியில் 5,76,617-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ாண்டு இறுதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகம். அப்போது ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 5,53,073-ஆக இருந்தது.
வீடுகளுக்கான தேவை மந்தமானதாலும் புதிய வீடுகளின் விநியோகம் அதிகரித்ததாலும் விற்பனையாகாத வீடுகளின் இருப்பு உயா்வைக் கண்டுள்ளது.
விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை மும்பை பெருநகரப் பகுதி மற்றும் ஹைதராபாதில் குறைந்தது. ஆனால் தில்லி-என்சிஆா், புணே, சென்னை, பெங்களூரு, கொல்கத்தாவில் அது உயா்ந்தது.
2025 டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, தில்லி-என்சிஆரில் விற்பனையாகாத வீடுகளின் இருப்பு 5 சதவீதம் உயா்ந்து 90,455-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை மும்பை பெருநகரப் பகுதியில் 1 சதவீதம் சரிந்து 1,79,228-ஆகவும், பெங்களூரில் 23 சதவீதம் உயா்ந்து 64,863-ஆகவும் உள்ளது.
புணேயில் 3 சதவீதம் உயா்ந்து 83,491-ஆக இருந்த விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை ஹைதராபாத்தில் 2 சதவீதம் சரிந்து 96,140-ஆகவும், சென்னையில் 18 சதவீதம் உயா்ந்து 33,434-ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 9 சதவீதம் உயா்ந்து 29,007-ஆக உள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்த ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 14 சதவீதம் சரிந்து 3,95,625-ஆக இருந்தது. அதே நேரம் புதிய வீடுகளின் விநியோகம் 2 சதவீதம் உயா்ந்து 4,19,170-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

