

மத்திய இடைக்கால பட்ஜெட் நாளான வியாழக்கிழமை பங்குச்சந்தை தடுமாற்றம் கண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து பங்குச்சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், பட்ஜெட்டில் பெரிய அளவிலான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதற்கிடையே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வரும் மார்ச் மாதத்தில் வட்டி விகிதங்களை குறைக்காது என்று சுட்டிக்காட்டியதும் சந்தை உணர்வுகளும் தணிந்தன. பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தாலும், ஃபார்மா, ரியால்ட்டி, மெட்டல் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு சந்தை நிலையற்ற தன்மையில் இருந்ததால், இறுதியில் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.36 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.379.42 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை ரூ. 1,660.72 லட்சம் கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,542.93 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தடுமாற்றம்: காலையில் 246.67 புள்ளிகள் கூடுதலுடன் 71,998.78-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 72,151.02 வரை மேலே சென்றது. பின்னர், 71,574.89 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 106.81 புள்ளிகள் (0.15 சதவீதம்) குறைந்து 71,645.30-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான
3,942 பங்குகளில் 1,813 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,028 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 101 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
21 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் மாருதி, பவர்கிரிட், ஆக்ஸிஸ் வங்கி, என்டிபிசி, டிசிஎஸ் உள்பட 9 பங்குகள் மட்டுமே விலை உயர்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம் எல் அண்ட் டி, அல்ட்ராடெக் சிமென்ட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே உள்பட 21 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
நிஃப்டி 28 புள்ளிகள் சரிவு:
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 54.98 புள்ளிகள் கூடுதலுடன் 21,780.65-இல் தொடங்கி அதிகபட்சமாக 21,832.95 வரை மேலே சென்றது. பின்னர், 21,658.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 28.25 புள்ளிகளை (0.13 சதவீதம்) இழந்த 21,697.45-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள்ஆதாயம் பெற்றன.
31 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.