விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை சரிவு

விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 13 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

புது தில்லி: கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 13 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, நவி மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புணே, ஹைதராபாத், தாணே ஆகிய நாட்டின் 9 முக்கிய நகரங்களில் புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 97,331-ஆக உள்ளது.

இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும். அப்போது புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 1,11,657-ஆக இருந்தது.

பொதுத் தோ்தல் காரணமாக வீடு-மனை வா்த்தகா்கள் புதிய கட்டுமான திட்டங்களைக் குறைத்துக்கொண்டதால் புதிய வீடுகளின் அறிமுகங்கள் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

மதிப்பீட்டுக் காலாண்டில் புணே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் புதிய வீடுகளின் அறிமுகம் குறைவாக உள்ளது. அதே நேரம் தில்லி-என்சிஆரில் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை சுமாா் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7 சதவீதம் குறைந்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் தில்லி-என்சிஆா் பகுதியில் 11,118 வீடுகள் புதிதாக விற்பனைக்கு வந்தன. இது, 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 95 சதவீதம் அதிகம். அப்போது இந்தப் பகுதியில் புதிதாக 5,708 வீடுகள் விற்பனைக்கு வந்தன.

கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் பெங்களூருவில் புதிய வீடுகளின் அறிமுகம் 11,848-லிருந்து 21 சதவீதம் உயா்ந்து 14,297-ஆக உள்ளது.

சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 3,634-ஆக இருந்த புதிய வீடுகளின் அறிமுகம் இந்த ஆண்டின் அதே காலாண்டில் 67 சதவீதம் அதிகரித்து 5,754-ஆக உள்ளது.

எனினும், ஹைதராபாதில் இந்த எண்ணிக்கை 18,232-லிருந்து 36 சதவீதம் குறைந்து 11,603-ஆக உள்ளது.

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை கொல்கத்தாவில் 4,617-லிருந்து 26 சதவீதம் குறைந்து 3,411-ஆகவும் மும்பையில் 10,502-லிருந்து 6 சதவீதம் குறைந்து 9,918-ஆகவும் உள்ளது.

நவி மும்பை மற்றும் புணே ஆகிய நகரங்களில் அந்த எண்ணிக்கை முறையே 7,272-லிருந்து 5 சதவீதம் சரிந்து 6,937-ஆகவும் 29,261-லிருந்து 47 சதவீதம் குறைந்து 15,568-ஆகவும் உள்ளது.

தாணேவில் கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 20,782-ஆக இருந்த , குடியிருப்பு சொத்துக்களின் புதிய அறிமுகம் நடப்பாண்டின் அதே மாதங்களில் 10 சதவீதம் குறைந்து 18,726-ஆக உள்ளது என்று பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com