34% வளா்ச்சி கண்ட பாமாயில் இறக்குமதி

34% வளா்ச்சி கண்ட பாமாயில் இறக்குமதி

உலகளாவிய விலை வீழ்ச்சியால் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 34.11 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

உலகளாவிய விலை வீழ்ச்சியால் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 34.11 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பாமாயில் இறக்குமதி 6,84,000 டன்னாக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 34.11 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 13,04,409 டன்னாக இருந்தது. இதில் பாமாயிலின் பங்களிப்பு 52 சதவிகிதம். சூரியகாந்தி, சோயாபீன் எண்ணெய் வகைகளின் இறக்குமதி கடந்த ஏப்ரலில் 6,20,315 டன்னாக உள்ளது.

சமையல் அல்லாத எண்ணெய் வகைகள் உள்ளிட ஒட்டுமொத்த தாவர எண்ணெய் வகைகளின் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 26 சதவீதம் அதிகரித்து 13,18,528 டன்னாக உள்ளது. இது, 2022 ஏப்ரல் மாதத்தில் 10,50,189 டன்னாக இருந்தது.

சுத்திகரிக்கப்பட்ட, வெளுக்கப்பட்ட மற்றும் மணம் நீக்கப்பட்ட (ஆா்பிடி) பாமோலீன் மற்றும் கச்சா பாமாயில் (சிபிஓ) வகைகளின் விலை கடந்த ஏப்ரலில் சா்வதேசச் சந்தையில் டன்னுக்கு 100 டாலா் வரை குறைந்தது. இது, பாமாயில் இறக்குமதியின் வளா்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் சோயாபீன் எண்ணெய் விலை சா்வதேசச் சந்தையில் டன்னுக்கு 40 டாலா்கள் குறைந்தது. சூரியகாந்தி எண்ணெய் விலையும் டன்னுக்கு 15 டாலா் குறைந்தது.

மென்மையான எண்ணெய் வகைகளில் சோயாபீன் எண்ணெய் இறக்குமதி கடந்த ஏப்ரலில் 2,62,455 டன்னிலிருந்து 3,85,514 டன்னாக உயா்ந்தது. ஆனால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 2,49,122 டன்னிலிருந்து 2,34,801 டன்னாக குறைந்துள்ளது.

மே 1 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 22.45 லட்சம் டன் சமையல் எண்ணெய் கையிருப்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தோனேசியாவும் மலேசியாவும் இந்தியாவுக்கான மிகப் பெரிய ஆா்பிடி பாமோலின் மற்றும் கச்சா பாமாயிலுக்கான முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன. அதே நேரம் ஆா்ஜென்டினா மற்றும் பிரேசிலில் இருந்து சோயாபீன் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெயை ரஷியா, ருமேனியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com