வர்த்தகப் போர் அச்சம்: 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சந்தைகள் சரிவு!

சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளாகவும், நிஃப்டி 742.85 புள்ளிகள் சரிந்து 22,161.60 புள்ளிகளாக நிலைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு மற்றும் சீனாவின் பதிலடி ஆகியவற்றைத் தொடர்ந்து உலகளாவிய சந்தைகள் இன்று சரிந்து முடிந்தன.

பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் பலரும் தங்களின் லாபத்தை வெளியே எடுத்து வந்ததால், சென்செக்ஸ் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளில் முடிந்தது முதலீட்டாளர்களுக்கு பதற்றத்தை உருவாக்கியது.

அமெரிக்க வரிவிதிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து பிற நாடுகளின் பதிலடி காரணமாக சந்தை சரிந்தது. இது உலக அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அச்சத்தையும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 71,449.94 என்ற புள்ளிகளில் தொடங்கி வர்த்தகமான நிலையில் சுமார் 4,000 புள்ளிகள் சரிந்தது.

நண்பகல் 12.10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 3,014.98 புள்ளிகள் சரிந்து 72,349.70 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 971.60 புள்ளிகள் குறைந்து 21,932.85 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளாகவும், நிஃப்டி 742.85 புள்ளிகள் சரிந்து 22,161.60 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் தவிர சென்செக்ஸ் பட்டியலில் உள்ள அனைத்தும் பங்குகளும் சரிந்து முடிவடைந்தது. அதிகபட்சமாக டாடா ஸ்டீல் 7.33 சதவிகிதமும், லார்சன் & டூப்ரோ 5.78 சதவிகிதமும் சரிந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள டாடா மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

நிஃப்டி-யில் டிரென்ட், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும், சோமேட்டோ மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சற்று உயர்ந்தும் முடிந்தது.

பிஎஸ்இ-யில் ஸ்மால்கேப் குறியீடு 4.13 சதவிகிதமும், மிட்கேப் குறியீடு 3.46 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.

சீமென்ஸ், ஜிண்டால் சா, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, தெர்மேக்ஸ், ஸ்வான் எனர்ஜி, நால்கோ, இன்டலக்ட் டிசைன், சோபா, இந்துஸ்தான் காப்பர், சம்மான் கேப்பிட்டல், பாரத் ஃபோர்ஜ், டிஎல்எஃப், கோத்ரேஜ் பிராப்பர்டீஸ், இந்தியாமார்ட் இன்டர்மெஷ், ஸ்டெர்லிங் வில்சன், டிபிஓ டெக், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் உள்ளிட்ட 770 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார சரிவைப் பதிவு செய்தது.

ஆசிய சந்தைகளில் ஹாங்காங் 13 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தும், டோக்கியோவின் நிக்கேய் 225 கிட்டத்தட்ட 8 சதவிகிதமும், ஷாங்காய் குறியீடு 7 சதவிகிதத்திற்கும் மேலாகவும், தென் கொரியாவின் கோஸ்பி 5 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்து முடிந்தது.

ஐரோப்பிய சந்தைகளும் இன்று கடும் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகி கிட்டத்தட்ட 6 சதவிகிதம் வரை சரிவுடன் முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் கடந்த (வெள்ளிக்கிழமை) அன்று கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில் எஸ்அண்ட்பி - 500, 5.97 சதவிகிதமும், நாஸ்டாக் 5.82 சதவிகிதமும், டவ் 5.50 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.

கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் விதிக்கப்பட்ட மார்ச் 23, 2020 அன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 13 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கடந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதியன்று, சென்செக்ஸ் 4,389.73 புள்ளிகள் சரிந்து 72,079.05 ஆக இருந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 6,234.35 புள்ளிகள் சரிந்து 70,234.43 புள்ளிகளாக முடிந்தது. அதே வேளையில் நிஃப்டி 1,379.40 புள்ளிகள் சரிந்து 21,884.50 ஆக முடிவடைந்தது. வர்த்தக முடிவில் நிஃப்டி 1,982.45 புள்ளிகள் சரிந்து 21,281.45 புள்ளிகளாக இருந்தது.

இன்று மும்பை பங்கு சந்தையானது மலை போல சரிந்து முடிந்த நிலையில், மெட்டல் 6.22 சதவிகிதமும், ரியாலிட்டி 5.69 சதவிகிதமும், பொருட்கள் 4.68 சதவிகிதமும், தொழில்துறை 4.57 சதவிகிதமும், நுகர்வோர் விருப்புரிமை 3.79 சதவிகிதமும், ஆட்டோ 3.77 சதவிகிதமும், வங்கி 3.37 சதவிகிதமும், ஐடி 2.92 சதவிகிதமும், டெக் 2.85 சதவிகிதமும், பிஎஸ்இ ஃபோகஸ்டு ஐடி 2.63 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த (வெள்ளிக்கிழமை) அன்று ரூ.3,483.98 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை 3.61 சதவிகிதம் குறைந்து பீப்பாய் ஒன்று 63.21அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: அமுல் வருவாய் ரூ.1 லட்சம் கோடியை எட்டும்: மேத்தா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com