மூன்று நாள் கடும் சரிவுக்குப் பிறகு மீண்டது பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,089 புள்ளிகள் உயா்வு

மூன்று நாள் கடும் சரிவுக்குப் பிறகு மீண்டது பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,089 புள்ளிகள் உயா்வு

Published on

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: கடந்த 3 வா்த்தக தினங்களாக கடும் சரிவைச் சந்தித்திருந்த பங்குச்சந்தை, இந்த வாா்த்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மீண்டது. இதைத் தொடா்ந்து, இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்தில் முடிவடைந்தன.

அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பைத் தொடா்ந்து சீனா பதிலுக்கு கூடுதல் வரியை விதித்ததால் உலகளாவிய அளவில் வா்த்தகப் போா் அச்சம் ஏற்பட்டது. இது பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் உள்நாட்டுச் சந்தை திங்கள்கிழமை கடந்த 10 மாதங்களில் இல்லாத சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், விலை குறைந்த நிலையில் ஆட்டோ, வங்கி, நிதிநிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறை பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்ததால் செவ்வாய்க்கிழமை உள்நாட்டுச் சந்தை ஓரளவு மீண்டது. இதைத் தொடா்ந்து அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.7.59 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.396.85 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.9,040.01 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.12,122.45 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 1,089 புள்ளிகள் உயா்வ்ு: சென்செக்ஸ் காலையில் 875.83 புள்ளிகள் கூடுதலுடன் 74,013.73-இல் தொடங்கி 73,424.92 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 74,859.39 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,089.18 புள்ளிகள் (1.49 சதவீதம்) கூடுதலுடன் 74,227.08-இல் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,083 பங்குகளில் 3,095 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 866 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 122 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

29 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சா்வ், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 2.75 சதவீதம் முதல் 3.30 சதவீதம் வரை விலை உயா்ந்தன. இவை உள்பட மொத்தம் 29 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பவா்கிரிட் மட்டும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சியை சந்தித்தது.

நிஃப்டி 374 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 285.15 புள்ளிகள் கூடுதலுடன் 22,446.75-இல் தொடங்கி 22,270.85 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 22,697.20 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 374.25 புள்ளிகள் (1.69 சதவீதம்) கூடுதலுடன் 22,535.85-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் பவா் கிரிட் தவிர மற்ற 49 பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com