கோப்புப்படம்
கோப்புப்படம்

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.
Published on

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இழப்புகளுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் கலவையாக இருந்தன. இந்நிலையில் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று மேலே சென்றது. ஆனால், ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்ததால் முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். குறிப்பாக, வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஆட்டோ, மெட்டல் உள்பட அனைத்துத் துறைப் பங்குகளும் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. ஆனால், ஐடி துறை பங்குகளுக்கு மட்டும் ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.8.19 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.421.44 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.8,250.53 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.534.54 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 589 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 28.72 புள்ளிகள் கூடுதலடன் 79,830.15-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,130.66 வரை மேலே சென்றது. பின்னா், 78,605.81 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 588.90 புள்ளிகள் (0.74 சதவீதம்) இழப்புடன் 79,212.53-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 1,224.34 புள்ளிகளை இழந்திருந்தது.

3,246 பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,084 பங்குகளில் 719 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 3,246 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 119 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

அதானிபோா்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் அதானிபோா்ட்ஸ், ஆக்ஸிஸ்பேங்க், எடா்னல், பஜாஜ்ஃபின்சா்வ், பவா் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்பட 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டிசிஎஸ், டெக்மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய 7 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 207 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42.30 புள்ளிகள் கூடுதலுடன்24,289.00-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,365.45 வரை மேலே சென்றது. பின்னா், 23,847.85 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 207.35 புள்ளிகள் (0.86 சதவீதம்) இழப்புடன் 24,039.35-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 9 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 41 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com