

வழக்கமாகவே, பலரும் அதிகமாக துணி எடுக்கவும் செல்போன் உள்ளிட்ட பொருள்களை வாங்கவும் அதிகம் செலவிடுவதாக நினைத்திருக்கலாம். அது உண்மையில்லை. சாப்பாட்டுக்காகத்தான் அதிகம் செலவிடப்படுகிறது.
அதாவது, யுபிஐ பணப்பரிவர்த்தனையின் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில் மக்கள் நினைத்திருந்ததற்கு நேர்மாறாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இளம் தலைமுறையினரின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், அவர்களது நிதி மேலாண்மைக்கான தாளம் புரிபடும் என்று கூறப்படுகிறது.
அதாவது,நகரம் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த 30 வயதுக்குள்பட்டவர்களின் பணப்பரிமாற்ற விவரங்களின்படி, இளைஞர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகவும், ஒரு மாதத்தில் இது கிட்டத்தட்ட 200 பணப்பரிவர்த்தனை என்ற அளவை தொடுவகதாகவும் கூறப்படுகிறது.
புத்தகம், நொறுக்கித் தீனி வாங்க, போக்குவரத்துக்கு, பல்வேறு கட்டணங்களை செலுத்த என இது நீள்கிறது. ஆனால், இந்த தொகைகள் எல்லாம் சிறு சிறு தொகைகளாகும். அதாவது 75 சதவிகிதத் தொகை பெரும்பாலும் ரூ.200க்குள்தான் இருக்கின்றன. இது நாள்தோறும் தேவையான மளிகை, நண்பர்களுக்கு விருந்தளிப்பது எனவும் தொடர்கிறது.
அதாவது, இளம் தலைமுறையினரிடையே நள்ளிரவு முதல் காலை 6 மணி வரையிலான பணப்பரிவர்த்தனைகள் அதிகமாக உள்ளன. அதுவும் பெரும்பாலும் உணவுக்கான ஆர்டர்களுக்கு செலவிடுவதுதான்.
காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மளிகைப் பொருள்கள் வாங்க செலவிடப்படுகிறது.
பெரு நகரங்களில் காலை 6 - 11 மணி வரையில் மளிகைப் பொருள்களுக்கான ஆர்டர்கள் அதிகம் பதிவாகின்றன. அதாவது, முன்கூட்டியே திட்டமிட்டு பொருள்களை வாங்கி வைத்திருப்பது, அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று தேவையான பொருள்களை வாங்குவது போன்ற பழக்கங்கள் ஓழிந்து, டிஜிட்டல் முறையில் பொருள்களை வாங்கும் பழக்கம் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது.
வெள்ளிக்கிழமையா சொல்லவே வேண்டாம்!
வார இறுதி என்றால், உழைக்கும் வர்க்கத்துக்கு சனிக்கிழமை என்றால், மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைதான். அதாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7 - 8 மணி வரை அதிகமான பணப்பரிவர்த்தனைகள் நிகழ்கின்றனவாம். அதாவது வாரம் முழுக்க வேலை செய்துவிட்டு, இளம்தலைமறை சம்பாதித்த தொகையை இந்த ஒரு மணி நேரத்தில் செலவிடுவதாகவும் கூறலாம்.
இதன்படி பார்த்தால், இளம்தலைமுறை துணி மற்றும் கேட்ஜட்களை விடவும், உணவுக்காகவே அதிகம் செலவிடுகிறது என்பதை அறிய முடிகிறது.
பெருநகரங்களைத் தொடர்ந்து இரண்டு மற்றும் நான்காம் நிலை நகரங்கள் கூட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வேகமாக மாறி வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, அதிக டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் நிகழும் நகரங்களின் வரிசையில் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
சம்பாதிப்பதை செலவிடுவதில் சுதந்திரமாக இருக்கும் இளம்தலைமுறையினர், முந்தைய தலைமுறையைப் போல அல்லாமல், கடன் வாங்குவதில் சற்றுத் தெளிவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, தங்கள் வங்கிக் கணக்குகளில் இருக்கும் நிரந்தர வைப்புத் தொகையை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான கிரெடிட் அட்டைகளையே பெரும்பாலும் பயன்படுத்துவதாகவும், இதனால், எதிர்பாராத மோசமான கடன்களில் இவர்கள் சிக்குவது தவிர்க்கப்படுவதர்கவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.