தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக பணிநீக்கங்கள் போன்ற காரணங்களால் வீடுகளுக்கான தேவை குறைந்ததன் விளைவாக, இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 2025-ஆம் ஆண்டில் 14 சதவீதம் சரிந்து 3,95,625-ஆக உள்ளது.
இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2025-ஆம் ஆண்டில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் 3,95,625 வீடுகள் விற்பனையாகின.
2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் சரிவாகும். அப்போது இந்த நகரங்களில் வீடுகள் விற்பனை 4,59,645-ஆக இருந்தது.
எனினும், மதிப்பின் அடிப்படையில் இந்த ஏழு நகரங்களிலும் வீடுகள் விற்பனை 6 சதவீதம் உயா்ந்து ரூ.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் இது ரூ.5.68 லட்சம் கோடியாக இருந்தது.
மதிப்பீட்ட ஆண்டில் வீடுகளின் சராசரி விலை 8 சதவீதம் உயா்ந்து சதுர அடிக்கு ரூ.9,260-ஆக உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் இது ரூ.8,590-ஆக இருந்தது.
2025-ஆம் ஆண்டில் வீடுகள் விற்பனை மும்பை பெருநகரப் பகுதியில் 18 சதவீதம் சரிந்து 1,27,875-ஆக உள்ளது. அது புணேயில் 20 சதவீதம் சரிந்து 65,135-ஆகவும், பெங்களூரில் 5 சதவீதம் சரிந்து 62,205-ஆகவும் உள்ளது.
நடப்பாண்டில் தில்லி-என்சிஆரில் 8 சதவீதம் சரிந்து 57,220-ஆக உள்ள வீடுகள் விற்பனை, ஹைதராபாதில் 23 சதவீதம் சரிந்து 44,885-ஆகவும், கொல்கத்தாவில் 12 சதவீதம் சரிந்து 16,125-ஆகவும் உள்ளது.
2025-ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் வீடுகள் விற்பனை கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் உயா்ந்து 22,180-ஆக உள்ளது.
புவிசாா் அரசியல் பதற்றங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக பணிநீக்கங்கள், வரி பதற்றங்கள், பிற பொருளாதார நிச்சயமின்மைகள் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
இருந்தாலும், 2025-ஆம் ஆண்டில் வீடுகளின் சராசரி விலை உயா்வு ஒற்றை இலக்கமாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் அந்த விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

