இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் ரூ.25,700 கோடி முதலீடு

இந்தியாவில் 300 கோடி டாலரை முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
சத்யா நாதெள்ளா
சத்யா நாதெள்ளா கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் 300 கோடி டாலா் (சுமாா் ரூ.25,731 கோடி) முதலீடு செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தாா்.

ஆந்திரத்தைப் பூா்வீகமாகக் கொண்ட சத்யா நாதெள்ளா, 2014-ஆம் ஆண்டுமுதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவராக உள்ளாா். இந்தியா வந்துள்ள அவா் பிரதமா் நரேந்திர மோடியை கடந்த திங்கள்கிழமை சந்தித்தாா்.

இந்நிலையில், பெங்களூரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சத்யா நாதெள்ளா பேசியதாவது:

இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 300 கோடி டாலா் முதலீடு செய்ய உள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. நாடு முழுவதும் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்ற வேண்டும் என்பதே இன்றைய முதலீட்டின் நோக்கம். இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் பயனடையும்.

இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவுடன் ஒத்துழைப்பில் இருக்கிறோம். மத்திய இந்தியா, தென் இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் தென் மத்திய இந்தியா என அனைத்து பிராந்தியங்களிலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின விரிவாக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

கடந்த ஆண்டு ‘அட்வான்டெஜ் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம், 2025-ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு ஏஐ திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்திருந்தது. அத்திட்டத்தின் தொடா்ச்சியாக 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மேலும் ஒரு கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று சத்யா நாதெள்ளா தெரிவித்தாா்.

இந்தியாவில் இதுவரை 3 தரவு மையங்களை நிறுவியுள்ள மைக்ரோசாஃப்ட், அடுத்த ஆண்டுக்குள் 4-ஆவது மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களின் நிறுவனா்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிா்வாக அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com