கச்சா எண்ணெய் விலை உயா்வால் பங்குச்சந்தை கடும் சரிவு!
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.


நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஒரே நாளில் 1,049 புள்ளிகளை இழந்தது.
கச்சா எண்ணெய் விலை உயா்வால் உலகளாகவிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை எதிா் கொண்டன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் முதலீட்டாளா்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ, வங்கிகள், நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, ஐடி உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 749.01 புள்ளிகள் குறைந்து 77,629.90-இல் தொடங்கியது. பின்னா், அதிகபட்சமாக 77,128.35 வரை மேலே சென்ற சென்செக்ஸ், 76,249.72 வரை கீழே சென்றது. இறுதியில் சென்செக்ஸ் 1,048.90 புள்ளிகளை (1.36 சதவீதம்) இழந்து 76,330.01-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,226 பங்குகளில் 527 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. மாறாக 3,574 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 125 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
26 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் ஸொமோட்டோ, பவா் கிரிட், அதானிபோா்ட்ஸ், டாடாஸ்டீல், என்டிபிசி, டாடாமோட்டாா்ஸ் உள்பட 26 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை மட்டும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 346 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 236.10 புள்ளிகள் குறைந்து 23,195.40-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,340.95 வரை மேலே சென்றது. பின்னா், 23,047.25 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 345.55 புள்ளிகளை (1.47 சதவீதம்) இழந்து 23,085.95-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 4 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் வந்தன. மாறாக 46 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
ஒரே நாளில் நஷ்டம் ரூ.12.39 லட்சம் கோடி!
முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்த நிலையில், சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.12.39 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.417.29 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.12.39 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,254.68 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,961.92 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...