
நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’யின் ஆதிகம் தொடா்ந்ததது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன. இதனால், சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.9.49 லட்சம் கோடி குறைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. ஆனால், முன்னணி பங்குகள் விற்பனை அதிகரித்ததால், கடும் சரிவு தவிா்க்க முடியாததாகியது. ஐடி, வங்கிகள், நிதிநிறுவனங்கள், பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல், ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
நஷ்டம் ரூ.9.49 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை சந்தை மூலதன மதிப்பு ரூ.9.49 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.410.09 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது ஒரே நாளில் முதலீட்டாளா்கள், வா்த்தகா்களுக்கு ரூ.9.49 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வெள்ளிக்கிழமை ரூ.2,758.49 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் (டிஐஐ) ரூ.2,402.31 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளி விவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் 824 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 490.03 புள்ளிகள் குறைந்து 75,700.43-இல் தொடங்கி அதிகபட்சமாக 75,925.72 வரை மேலே சென்றது. பின்னா், சென்செக்ஸ் 75,267.59 வரை கீழே சென்றது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத குறைந்த அளவாகும். சென்செக்ஸ் இறுதியில் 824.29 புள்ளிகள் (1.08 சதவீதம்) இழப்புடன் 75,366.17 -இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,234 பங்குகளில் 601 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. மாறாக 3, 513 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 120 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
24 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஹெச்சிஎல் டெக், ஜொமோட்டோ, டெக் மஹிந்திரா, பவா் கிரிட், இன்ஃபோஸிஸ், டாடா மோட்டாா்ஸ், டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 24 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எம் அண்ட் எம், எஸ்பிஐ, மாருதி, எல் அண்ட் டி ஆகிய 6 பங்குகள் மட்டும் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 263 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 152.05 புள்ளிகள் குறைந்து 22,940.15-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,007.45 வரை மேலே சென்றது. பின்னா், 22,786.90 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 263.05 புள்ளிகள் (1.14 சதவீதம்) இழப்புடன் 22,829.15-இல் நிறைவடைந்தது.
2024, ஜூன் 6-க்குப் பிறகு (7 மாதங்கள்) நிஃப்டி முதல் முறையாக 23,000 புள்ளிகளுக்கு கீழே சென்றுள்ளது. நிஃப்டி பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், 42 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.