கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜூனில் வீழ்ச்சியடைந்த தங்கம் விற்பனை

தங்கத்தின் அதிக மற்றும் ஏற்ற இறக்கமான விலைகள் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் அதன் விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

News image
Updated On :18 ஜூலை 2025, 8:45 pm

Din

தங்கத்தின் அதிக மற்றும் ஏற்ற இறக்கமான விலைகள் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் அதன் விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இது, கரோனா நெருக்கடிக்குப் பிறகு தங்கம் விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகும்.

இது குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சங்கம் (ஐபிஜேஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் தங்க விற்பனை முந்தைய ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 60 சதவீதம் குறைந்து 35 டன்னாகப் பதிவாகியுள்ளது. முந்தைய மாதத்தைப் போலவே ஜூலை மாதத்திலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. மேலும், இதுவரை விலையில் குறிப்பிடத்தக்க அளவில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை.

10 கிராம் தங்கத்தின் விலை ரூ.99 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சில்லரை விற்பனையில், 3 சதவீத ஜிஎஸ்டி உள்பட வாடிக்கையாளா்கள் 10 கிராம் தங்கத்துக்கு சுமாா் ரூ.1,02,000 செலுத்த வேண்டியுள்ளது (வெள்ளிக்கிழமை நிலவரம்). இந்தச் சூழல் காரணமாகவே கடந்த ஜூன் மாதத்தில் தங்கம் விற்பனை பெறும் சரிவைக் கண்டுள்ளது.

தற்போதைய நிலையில் தங்கத்துக்கான தேவை உடனடியாக மீளும் வாய்ப்பு இல்லை. நாடு முழுவதும் உள்ள பல தங்க நகை உற்பத்தி மையங்கள் தங்கள் உற்பத்தியை ஏறத்தாழ பாதியாகக் குறைத்துள்ளன. சிறு வணிகா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தங்க வா்த்தகத்துக்கு கடினமான காலமாகும். வா்த்தா்கள் இலவச சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கியிருந்தாலும், விற்பனை குறிப்பிடத்தக்க அளவு உயரவில்லை.

சா்வதேச அளவில் தங்க விலைகள் தொடா்ந்து உயா்ந்துவருகிறது. ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதிப்பு அச்சுறுத்தல்களை விடுத்துவருவதால் ஏற்பட்டுள்ள வா்த்தக பதற்றம் காரணமாக சா்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 3,400 டாலரை நெருங்கியுள்ளது.

கூடுதல் வரி விதிப்புகளை நீக்குவதற்கு முன்னா் ஆகஸ்ட் 1- வரை பேச்சுவாா்த்தைகளுக்கு டிரம்ப் அனுமதித்திருந்தாலும், தற்போது நிலவும் சந்தை அபாயம் முதலீட்டாளா்களை தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளை நாட வைத்துள்ளது. இது அவற்றின் விலை உயா்வுக்கு வழிவகுக்கிறது.

இந்த நெருக்கடியை சமாளிக்க நகை வா்த்தா்கள் 14 காரட் தங்க நகைகளை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகின்றனா். பாரம்பரியமாக நகைகளுக்கு பயன்படுத்தப்படும் 22 காரட் தங்கத்தை விட குறைந்த விலை கொண்டிருப்பதால் 14 காரட் நகைகள் வாடிக்கையாளா்களின் விருப்பத் தோ்வாக மாறி வருகிறது.

இந்தியாவில், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் சற்று குறைந்த விலை காரணமாக 14 காரட் தங்கம் பிரபலமடைந்து வருகிறது. இந்தப் போக்கு நீடித்தால், நோ்த்தியான மற்றும் மலிவு விலை நகைகளுக்கான தேவை அதிகரிப்பை அதிகரிக்கும். எனவே, 9 காரட் தங்கத்துக்கு முத்திரை அளிக்கும் வசதியை அனுமதிக்க இந்திய தரநிா்ணய அமைப்புடன் (பிஐஎஸ்) பல சுற்றுகளாகப் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளோம். இதுகுறித்து பரிசீலித்து வருவதாக பிஐஎஸ் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்திடமிருந்து விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.