

கடன், நஷ்டம் போன்ற செய்திகளால் மட்டும் பிரபலமடைந்து வந்த தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தற்போது, தொடர்ச்சியான காலாண்டுகளில் லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்த நிறுவனம், சட்ட சிக்கலுடன் கடன் பிரச்னைகளிலும் சிக்கித் தவித்து வந்த நிலையில், 2025 - 2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.44.68 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும், ஆனால், 2024 - 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.97.85 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.125.57 கோடி லாபத்தையும், மூன்றாவது காலாண்டில் ரூ.42 கோடி நிகர லாபத்தையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த கடன் ரூ.584 கோடியாக இருந்தது.
நிறுவனம் பங்கு வெளியீடு மற்றும் கடன் மூலம் ரூ.9,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், அனில் அம்பானி நிறுவன குழுமம், பங்கு வெளியீடு மூலம் ரூ.6,000 கோடி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
எரிசக்தியை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய இந்திய நிறுவனங்களல் ரிலையன்ஸ் பவர் நிறுவனமும் ஒன்றாக உள்ளது. இதன் ஒட்டுமொத்த இயக்கத் திறன் 5,305 மெகாவாட். இதனுடன் சசன் பவர் நிறுவனத்தின் உற்பத்தி திறன் 3960 மெகாவாட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பொருளாதார சீரமைப்புப் பணிகளின் காரணமாக ரிலையன்ஸ் பவர் நிறுவனம், ஆண்டுதோறும் இழப்பைக் குறைத்து, தற்போது லாபக் கணக்கை எழுதத் தொடங்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.