
புது தில்லி: பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த மே மாதம் 13 மாதங்களில் குறைவான நிலையை எட்டி ரூ.19,013 கோடியாக சரிந்தது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மே மாதத்தில் பங்கு முதலீட்டுத் திட்டங்களில் திரும்பப் பெறப்பட்ட முதலீட்டைவிட கூடுதல் முதலீடு ரூ.19,013 கோடியாக உள்ளது. முந்தைய ஏப்ரல் மாதத்தில் இது ரூ.24,269 கோடியாக இருந்தது. இதனால், மாதாந்திர அடிப்படையில் 22 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களிடையே அந்த வகை முதலீட்டுத் திட்டங்களின் மீதான நம்பிக்கை தொடர்ந்து உள்ளதைக் காட்டும் வகையில், மே மாதம் பங்கு சார்ந்த திட்டங்களில் 51-ஆவது தொடர் மாதமாக நிகர வரவு பதிவாகியுள்ளது. இருப்பினும், பெரு, நடுத்தர மற்றும் சிறு நிறுவன பங்கு நிதிகளில் முதலீடு குறைந்துள்ளது.
முறைசார் முதலீட்டுத் திட்டங்களின் (எஸ்ஐபி) பங்களிப்பு வலுவாக உள்ளதால், அந்தப் பிரிவில் மே மாதத்தில் புதிய சாதனையாக ரூ.26,688 கோடி வரவு பதிவாகியுள்ளது, இது ஏப்ரலில் இருந்த ரூ.26,632 கோடியைவிட அதிகம்.
ஒட்டுமொத்தமாக, அனைத்து வகை பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு ரூ.29,000 கோடியாக குறைந்துள்ளது; இது முந்தைய மாதத்தில் ரூ.2.77 லட்சம் கோடியாக இருந்தது.
துறை நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்தின் அளவு மே மாதத்தில் ரூ.72.2 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது; இது ஏப்ரல் இறுதியில் ரூ.70 லட்சம் கோடியாக இருந்தது. மேலும், பங்கு சார்ந்த நிதிகளின் முதலீடு ஏப்ரல் 2024-இல் ரூ.18,917 கோடியாக இருந்ததைவிட குறைவான நிலையில் உள்ளது.
பங்கு நிதிகளில் மார்ச் மாதத்தில் ரூ.25,082 கோடி, பிப்ரவரி மாதத்தில் ரூ.29,303 கோடி, ஜனவரி மாதத்தில் ரூ.39,688 கோடி மற்றும் டிசம்பர் மாதத்தில் ரூ.41,156 கோடி முதலீடு பதிவாகியிருந்தது. இந்த சரிவுக்கு மே 2025-இல் பங்குச் சந்தை செயல்பாடு மற்றும் முதலீட்டாளர்களின் லாப பதிவு காரணமாக இருக்கலாம்.
உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் பணவீக்கம் காரணமாக சில முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டது முதலீட்டு வரத்தைக்
குறைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.