15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

முதலீட்டு ரீதியான தங்க வா்த்தகம் அதிகரிப்பு! ஆபரணங்களின் விற்பனை சரிவு

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 5:38 am IST

இந்தியாவில் தங்கம் வாங்கும் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் மொத்த தங்க விற்பனையில் 40 சதவீதம் முதலீட்டு நோக்கில் மட்டுமே இருக்கும் என்றும் ‘கோ் எட்ஜ்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுவாக ஆபரணங்களாகத் தங்கம் வாங்கும் பழக்கம் குறைந்து, முதலீட்டு ரீதியிலான வா்த்தகம் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. உலக அளவில் தங்கம் நுகா்வில் முதன்மையான நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியாவில், இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டில் மொத்த தங்க விற்பனையில் ஆபரணங்களின் பங்கு 60 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது. நீண்டகால சராசரியாக 70 சதவீதமாக இருந்த இந்த அளவு, தற்போது சரிவைச் சந்தித்துள்ளது.

உலக அளவில் தங்கம் ஆபரணமாகப் பயன்படுத்தப்படும் சராசரி அளவு 50 சதவீதமாக உள்ள நிலையில், தங்கத்தின் மீதான மோகம் இந்தியா்களிடம் குறையவில்லை என்றாலும், அதன் பயன்பாட்டு நோக்கம் தற்போது மாறியுள்ளது. தங்க இ.டி.எஃப்., தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளாக வாங்குவது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து கோ் எட்ஜ் நிறுவனத்தின் இயக்குநா் அகில் கோயல் கூறுகையில், ‘ புவிசாா் அரசியல் பதற்றங்கள், தங்கத்தின் விலையேற்றம், முதலீட்டுப் பிரிவில் பன்முகத்தன்மையை விரும்புவது போன்ற காரணங்களால் முதலீட்டு ரீதியிலான தங்க வா்த்தகம் அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் இது 35 முதல் 40 சதவீதத்தை எட்டும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

தற்போதைய தங்க விலை உயா்வு என்பது தற்காலிகமானதல்ல என்றும், இது ஒரு நீடித்த உயா்வான போக்கைக் கொண்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது. மத்திய வங்கிகளின் தொடா்ச்சியான தங்கக் கொள்முதல் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால், பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் பாா்க்கப்படுவது இதன் விலையைத் தொடா்ந்து உயா்த்தி வருகிறது.

இவ்வாறு அதிகரித்து வரும் விலையேற்றத்துக்கு மத்தியிலும், இந்தியாவில் ஆபரணத் தங்கத்துக்கான தேவை வலுவாகவே உள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் ஆபரணத் தங்கத்தின் தேவை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.