
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளன.
இதையொட்டி ஐபோன் 17 வரிசையில் உள்ள ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மற்ற ஐபோன்களைப் போன்று அல்லாமல், ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போனானது (அல்ட்ரா ஸ்லிம்) மிகவும் தட்டையான வடிவமைப்புடன் அறிமுகமாகிறது. இதனால், இதன் எடை குறையும் என்பதால், பேட்டரியின் திறனில் மாறுபாடுகள் ஏற்படுமா? என்ற கேள்வியும் பயனர்களிடம் எழுந்துள்ளது. அவற்றுக்கான பதில்கள் குறித்து காண்போம்.
சிறப்பம்சங்கள்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திய மக்களிடம் ஐபோன் பயன்பாட்டில் எழுந்துள்ள எழுச்சியானது, ஐபோன் 17 வரிசை பூர்த்தி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பயனர்களுக்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் உள்நினைவகம் (ரேம்) மிகப்பெரிய குறையாகவே இருந்துவந்தது. அதனால், ஐபோன் 17 வரிசையில் அனைத்துக்கும் 12GB உள்நினைவகம் வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன்கள், ஏ19 என்ற சிப் கொண்டு செயல்படும். இதுவே ப்ரோ மாடல்களுக்கு ஏ19 ப்ரோ சிப் வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் 17 வரிசையின் நான்கு வகையான ஸ்மார்ட்போன்களிலும் முன்பக்கம் 24MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. நான்கு வகையான ஸ்மார்ட்போன்களும் OLED திரையுடன் வருகிறது. பயன்பாட்டில் சுமூகத்தன்மையை உணரும் வகையில் 120Hz திறன், திரைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அல்ட்ரா ஸ்லிம் மாடல் ஸ்மார்ட்போன் 3,000 mAh பேட்டரி திறனுடன் சந்தைக்கு வருகிறது. எனினும், மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் திறன் குறைவானதாக இருந்தாலும், செயல் திறன் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் ஒருபுறமிருக்க, ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களின் விலையே முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. அமெரிக்கா அறிவித்துவரும் வரி விதிப்பே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் மாடல்களைப் பொருத்து ரூ. 89,900 முதல் அதிகபட்சமாக ரூ. 1,64,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.