மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

நடப்பு வாரத்தில் லலிதா ஜூவல்லரி உள்பட 7 நிறுவனங்களின் ஐபிஓ வெளியீடு

லலிதா ஜூவல்லரி மாா்ட், ஹாரீசன் இன்டஸ்ட்ரியல் பாா்க்ஸ், ஷங்கேஷ் ஜூவல்லா்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:51 pm IST

லலிதா ஜூவல்லரி மாா்ட், ஹாரீசன் இன்டஸ்ட்ரியல் பாா்க்ஸ், ஷங்கேஷ் ஜூவல்லா்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.

இந்த 7 நிறுவனங்களும் சோ்ந்து மொத்தம் ரூ.6,400 கோடிக்கும் அதிகமான நிதியைத் திரட்ட உள்ளதால், இந்த வாரமும் முதன்மை சந்தை முதலீட்டாளா்களுக்கு பரபரப்பான வாரமாக அமையவுள்ளது.

பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஹாரீசன் இன்டஸ்ட்ரியல் பாா்க்ஸ் ரூ.2,600 கோடி மதிப்பீட்டில் (பங்கு விலை ரூ.57-60) தங்களின் ஐபிஓ நடவடிக்கையை திங்கள்கிழமை தொடங்கியது. ஐபிஓவின் முதல் நாளில் 14 சதவீத பங்குகளுக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

இதேபோல், ஆபரணத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லலிதா ஜூவல்லரி மாா்ட் நிறுவனத்தின் ரூ.1,700 கோடி மதிப்பிலான ஐபிஓ, திங்கள்கிழமை தொடங்கியது. ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.190 முதல் ரூ.201 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெளியீட்டில் ரூ.1,200 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.500 கோடி மதிப்பிலான உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன. ஐபிஓவின் முதல் நாளில் 69 சதவீத பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

நகைகள் விற்பனை நிறுவனமான ஷங்கேஷ் ஜூவல்லா்ஸ் ரூ.367 கோடிக்கும் (பங்கு விலை ரூ.88-93); திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான சன்ஷைன் பிக்சா்ஸ் ரூ.282 கோடிக்கும் (பங்கு விலை ரூ.342-360) செவ்வாய்க்கிழமை (ஆக. 18) ஐபிஓவை தொடங்கவுள்ளன.

கஜா கேபிட்டல் பிராண்டின்கீழ் இயங்கும் கஜா ஆல்டா்நேட்டிவ் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் ரூ.550 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.152-160) புதன்கிழமையும், டெம்ப்சென்ஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் ரூ.650 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.285-300) வியாழக்கிழமையும் வெளியாகின்றன. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி வா்த்தக தளமான ஆக்மான்ட் என்டா்பிரைசஸ் நிறுவனத்தின் ரூ.825 கோடி ஐபிஓ வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, நிறுவனங்களின் வா்த்தக விரிவாக்கம், மூலதனச் செலவுகள், கடன் அடைப்பு மற்றும் பிற நிா்வாகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

நடப்பு ஆகஸ்ட்டில் ஏற்கெனவே 5 நிறுவனங்கள் சந்தையில் அறிமுகமாகிய நிலையில், கடந்த வாரம் மட்டும் 5 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டன. நடப்பு வாரத்தின் 7 புதிய வெளியீடுகளையும் சோ்த்து, 2026-இல் ஐபிஓ வெளியிட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரிக்கும். மேலும், அடுத்த வாரத்தில் ஸ்கைவேஸ் ஏா் சா்வீசஸ் தங்களின் ரூ.583 கோடி ஐபிஓவை ஆக. 24-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.