

மும்பை: கடந்த ஐந்து வர்த்தக தினங்களாக பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வந்த நிலையில் எரிசக்தி, வங்கி மற்றும் உலோகப் பங்குகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்றைய வர்த்தக முடிவில் உயர்ந்தன.
இருப்பினும், அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் இடைவிடாத வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால், சந்தையின் ஏற்றத்தை இது வெகுவாக தடுத்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 715.17 புள்ளிகள் சரிந்து 82,861.07 புள்ளிகளாகவும், நிஃப்டி 209.9 புள்ளிகள் சரிந்து 25,473.40 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்ந்து 83,878.17 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 106.95 புள்ளிகள் உயர்ந்து 25,790.25 புள்ளிகளாக நிலைபெற்றது.
உறவில் ஏற்பட்ட விரிசல்களை சரிசெய்யும் நோக்கில், பழுதடைந்த உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டவர், அமெரிக்காவிற்கு இந்தியாவைப் போல இன்றியமையாத நாடு வேறு எதுவும் இல்லை என்றும் ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக இரு தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக வலியுறுத்தியுள்ளார்.
தனது வருகை உரையில், செர்ஜியோ கோர், முக்கிய கனிமங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான 'பாக்ஸ் சிலிக்கா' எனப்படும் அமெரிக்க தலைமையிலான கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே அவர் வெளியிட்ட இந்தக் கருத்துக்கள், சமீப மாதங்களாக வரிகள் மற்றும் எச்1பி விசாக்கள் தொடர்பாக இந்தியா மீது அழுத்தம் கொடுத்து வரும் டிரம்ப் நிர்வாகத்தின் ஒரு வரவேற்கத்தக்க அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறதாக வர்தகர்கள் தெரிவித்தனர்.
அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, அமெரிக்கத் தூதர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து சாதகமான கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை மேம்பட்டதால், இந்தியச் சந்தை சரிவிலிருந்து மீண்டன.
சென்செக்ஸில் டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், டிரென்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் சிமென்ட், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையலும் மறுபுறம் இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
கடந்த ஐந்து வர்த்தக நாட்களில், பிஎஸ்இ குறியீடு 2,185.77 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 645.25 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,769.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,595.84 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்தன.
ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமான நிலையில் அமெரிக்கச் சந்தைகள் வெள்ளிக்கிழமை அன்று உயர்ந்து முடிவடைந்தன.
சர்வதேச பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.27% சரிந்து 63.17 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.