

மும்பை: உலகளாவிய வர்த்தக பதற்றங்கள், கலவையான காலாண்டு முடிவுகள், பலவீனமான உலகளாவிய அறிகுறிகள், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு, முதலீட்டாளர்களின் பரவலான விற்பனை மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால் இன்றைய வர்த்தகத்தில் கடுமையான விற்பனை ஏற்பட்டு, முக்கிய குறியீடுகளான பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் தலா 1 சதவீதத்திற்கும் மேல் சரிந்து, வர்த்தக நேரத்தின் இடையே நிஃப்டி 25,200 புள்ளிக்கு கீழே சென்றது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1065.78 புள்ளிகள் சரிந்து 82,180.47 புள்ளிகளாகவும், நிஃப்டி 353 புள்ளிகள் சரிந்து 25,232.50 ஆக நிலைபெற்றது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2% மேல் சரிந்து, முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றம் உருவாக்கியது.
நிஃப்டி-யில் எடர்னல், பஜாஜ் ஃபைனான்ஸ், கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசஸ், ஜியோ ஃபைனான்சியல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், டாக்டர் ரெட்டிஸ் லேப் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்தன.
இன்றைய சந்தை சரிவில், பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் சுமார் ரூ.10 லட்சம் கோடி சரிந்து ரூ.465.68 லட்சம் கோடியிலிருந்து ரூ.455.72 லட்சம் கோடியாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், விற்பனை அழுத்தம் அதிகமாக இருந்ததால், அனைத்துத் துறைசார் குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன. ரியல்டி குறியீடு 5% சரிந்தன. அதே சமயம் ஆட்டோ, ஐடி, மீடியா, மெட்டல், பொதுத்துறை வங்கிகள், பார்மா, ஆயில் & கேஸ், நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட துறைகள் 1.5 முதல் 2.5% சரிந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், 3வது காலாண்டு மதிப்பீடுகளைத் தவறவிட்டதால் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் பங்குகள் 4% சரிந்தன. ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி தலைமை நிதி அதிகாரி ராஜினாமா செய்ததால் நிறுவனத்தின் பங்குகள் 8% சரிந்தன. ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகளின் வருவாய் மற்றும் வெள்ளி விலை உயர்வால் நிறுவனத்தின் பங்குகள் 3% உயர்ந்தன.
4.35 கோடி ஆதித்யா பிர்லா ஃபேஷன் பங்குகள் கைமாறியதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகள் 6% சரிந்தன. எல்டிஐ மைண்ட்ரீ பங்குகள் 3வது காலாண்டு லாபம் 11% சரிந்ததால் அதன் பங்குகள் 7% சரிந்தன. தீபக் நைட்ரைட் அதன் துணை நிறுவனமான தஹேஜில் ஹைட்ரஜன் ஆலையைத் தொடங்கியதால் அதன் பங்குகள் 4% உயர்ந்தன.
ஆதித்யா பிர்லா ஃபேஷன், ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட், கோத்ரெஜ் பிராபர்டீஸ், பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், லோதா டெவலப்பர், ஜீ என்டர்டெயின்மென்ட், ரிலாக்ஸோ ஃபுட்வேர், நெட்வொர்க் 18, தேஜாஸ் நெட்வொர்க்ஸ், என்சிசி, ஆக்சன் கன்ஸ்ட்ரக்ஷன், ஐனாக்ஸ் விண்ட், இந்தியன் ஹோட்டல்ஸ், ஜோதி லேப்ஸ், கான்கார்ட் பயோடெக் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வார குறைந்த விலையை எட்டியது.
சர்வதேச பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, 0.09% உயர்ந்து, பேரல் ஒன்றுக்கு 63.91 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.