

மும்பை: சரிவுடன் தொடங்கிய சந்தை, விற்பனை அழுத்தம் உள்ளிட்டவையால் நிஃப்டி குறியீடு அக்டோபர் 6, 2025-க்குப் பிறகு முதல் முறையாக வர்த்தக நேரத்தின் இடையே 25,000 புள்ளிக்குக் கீழே சென்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால், இன்றையை குறைந்தபட்ச நிலையிலிருந்து சற்றே மீண்டு, நிஃப்டி 25,100-க்கு மேல் சென்று, 3வது நாளாக இழப்புகளுடன் முடிவடைந்தன.
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனமாக இருப்பதாலும், வங்கி மற்றும் நுகர்வோர் பங்குகளில் ஏற்பட்ட விற்பனையால் பங்குச் சந்தைகளில் அழுத்தம் மேலோங்கியது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,056.02 புள்ளிகள் சரிந்து 81,124.45 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 270.84 சரிந்து 81,909.63 புள்ளிகளாகவும், நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 25,157.50ஆக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஐசிஐசிஐ வங்கி, டிரென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, லார்சன் & டூப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் எடர்னல், அல்ட்ராடெக் சிமென்ட், இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாயக்கிழமை) ரூ.2,938.33 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,665.69 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில், ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு சரிந்த நிலையில், தென் கொரியா கோஸ்பி குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹாங் செங் குறியீடும் உயர்ந்தன.
ஐரோப்பாவில் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ஒன்றுக்கு 1% குறைந்து 64.27 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.