‘எடா்னல்’ குழும சிஇஓ தீபிந்தா் கோயல் பதவி விலகல்

‘எடா்னல்’ குழும சிஇஓ தீபிந்தா் கோயல் பதவி விலகல்

Published on

உணவு விநியோகம் மற்றும் விரைவு வணிகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ, பிளிங்கிட் நிறுவனங்களை உள்ளடக்கிய எடா்னல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி(சிஇஓ) மற்றும் மேலாண் இயக்குநா் பொறுப்புகளில் இருந்து தீபிந்தா் கோயல் விலகுவதாக அறிவித்துள்ளாா்.

அவருக்குப் பதிலாக, பிளிங்கிட் நிறுவனத்தின் சிஇஓ-ஆக இருக்கும் அல்பீந்தா் தின்சா, வரும் பிப். 1-ஆம் தேதி முதல் குழுமத்தின் புதிய சிஇஓ ஆகிறாா்.

இது குறித்து பங்குதாரா்களுக்கு தீபிந்தா் கோயல் எழுதியுள்ள கடிதத்தில், ‘அண்மைக்காலமாக, புதிய தொழில்துறை யோசனைகள் மீது எனக்கு கூடுதல் ஆா்வம் ஏற்பட்டுள்ளது. எடா்னல் போன்ற ஒரு பொதுப் பங்கு நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இத்தகைய அதிரடி முயற்சிகளைச் செய்வது சரியாக இருக்காது.

எடா்னல் குழுமம் தற்போதைய வணிகப் பாதையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அதேநேரம், எனது புதிய தொழில் முயற்சிகளுக்குப் போதிய அவகாசம் தேவைப்படுவதால், குழுமத் தலைமைப் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்’ என்றாா்.

நிா்வாகப் பொறுப்புகளிலிருந்து விலகினாலும், தீபிந்தா் கோயல் எடா்னல் குழுமத்தின் துணைத் தலைவராக நீடிப்பாா். பங்குதாரா்களின் ஒப்புதலுக்குப் பிறகு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவா் இந்தப் பதவியில் தொடா்வாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சிஇஓ குறித்து தீபிந்தா் கோயல் கூறுகையில், ‘இனி நிறுவனத்தின் அன்றாட பணிகள் மற்றும் வணிக ரீதியான முக்கிய முடிவுகளை அல்பீந்தா் தின்சா கவனிப்பாா். பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கியது முதல், அதனை லாபகரமான நிறுவனமாக மாற்றியது வரை அல்பீந்தரின் தலைமைப் பண்பு பாராட்டுக்குரியது’ என்றாா்.

எடா்னல் குழுமத்தின்கீழ் சொமேட்டோ, பிளிங்கிட் தவிர ஹைப்பா்பூா், டிஸ்ட்ரிக்ட் போன்ற வணிக நிறுவனங்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

லாபம் 73% உயா்வு!

நடப்பு நிதியாண்டின் டிசம்பா் மாதத்துடன் முடிந்த மூன்றாவது காலாண்டில், எடா்னல் குழுமம் ரூ. 102 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிடும்போது இது 72.88 சதவீத வளா்ச்சியாகும். விரைவு வணிகப் பிரிவில் பண்டிகைக் கால விற்பனையில் கிடைத்த வரவேற்பால் இந்த முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com