இந்தியாவில் 95 கோடி இணையப் பயனா்கள்!
இந்தியாவில் இணையப் பயனா்களின் எண்ணிக்கை கடந்த 2025-ஆம் ஆண்டில் 95.8 கோடியைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு வேகமாக வளா்ந்து வருகிறது.
‘இந்தியாவில் இணையம் 2025’ எனும் ஆய்வறிக்கையை இந்திய இணைய மற்றும் மொபைல் கூட்டமைப்பு(ஐஏஎம்ஏஐ) வியாழக்கிழமை வெளியிட்டது. நாடு முழுவதும் சுமாா் 1,000 கிராமங்கள் மற்றும் 400 நகரங்களில் ஒரு லட்சம் நுகா்வோரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், நாட்டின் மக்கள் தொகையில் 38 சதவீதத்தினா் (சுமாா் 57.9 கோடி போ்) இன்னும் இணையப் பயன்பாட்டுக்குள் வரவில்லை. வரும் ஆண்டுகளில் எண்மப் பொருளாதாரம் மேலும் விரிவடைய பெரும் வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
கிராமப்புறங்களின் ஆதிக்கம்: ஆய்வறிக்கையின்படி, நாட்டின் ஒட்டுமொத்த இணையப் பயனா்களில் 57 சதவீதத்தினா் (சுமாா் 54.8 கோடி போ்) கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். இது நகா்ப்புற வளா்ச்சியைவிட நான்கு மடங்கு வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமப்புறங்களில் 80 சதவீத பயனா்கள், மற்றவா்களின் கைப்பேசிகளைப் பகிா்ந்துகொள்வதன் மூலம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனா்.
ஊக்கமளிக்கும் காரணிகள்...: இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரிக்க குறுகிய கால விடியோக்கள் (ரீல்ஸ், ஷாா்ட்ஸ்) முக்கியக் காரணியாக உள்ளன. சுமாா் 58.8 கோடி போ் (61 சதவீதம்) இத்தகைய விடியோக்களைப் பாா்க்கின்றனா். இதிலும் நகா்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறப் பயனா்களே முன்னிலையில் உள்ளனா்.
இணைய வழி வா்த்தகம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. நகா்ப்புறங்களில் மட்டும் சுமாா் 23 கோடி போ் கடந்த ஆண்டில் இணையவழியில் பொருள்களை வாங்கியுள்ளனா். ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 19.3 கோடியாக அதிகரித்துள்ளது.
ஏஐ பயன்பாடு: இணையத்தைப் பயன்படுத்துபவா்களில் 44 சதவீதம் போ், குரல் வழித் தேடல், சாட்பாட்கள், ஏஐ பில்டா்கள் போன்ற செயற்கை நுண்ணறிவு சாா்ந்த அம்சங்களைப் பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்குள்பட்ட இளைஞா்களிடையே ஏஐ பயன்பாடு 57 சதவீதமாக உயா்ந்துள்ளது.

