

தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. எப்போதாவது வாங்கப்போகும் தங்கம், வெள்ளி விலையை விட, மக்களுக்கு மிக முக்கியமானது கச்சா எண்ணெய் விலை நிலவரம்தான்.
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தினால், தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, கச்சா எண்ணெய் விலை 50 சென்டுகள் அல்லது 0.73 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 68.9 டாலர்களாக இருந்தது, ஆனால் அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் விலை 58 சென்டுகள் அல்லது 0.92 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 63.79 டாலர்களாக உயர்ந்தது.
கடந்த நான்கு நாள்களில் மட்டும் இவ்விரண்டு விலைகளும் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு என்றும் கூறப்படுகிறது.
அணுசக்தி திட்டங்களை முற்றிலும் நிறுத்துமாறு அமெரிக்கா, ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இல்லையென்றால் ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க போர்க் கப்பல்கள் ஈரான் நோக்கி படையெடுத்து வருகின்றன. உலகம் முழுவதிலும், மிகப்பெரிய அளவில் பெட்ரோலியம் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நான்காவது பெரிய நாடாக ஈரான் உள்ளது. நாள் ஒன்றுக்கு ஈரானிலிருந்து மட்டும் 32 லட்சம் பேரல்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒருவேளை, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் நிலை ஏற்பட்டால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 72 டாலர்கள் வரை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் உயரும். இதனால் போக்குவரத்து செலவு அதிகரித்து, காய்கறி விலை முதல் அனைத்து விலைகளும் உயரும் அபாயம் ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.