நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில், பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்குவதில் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆனால், கடன் வளா்ச்சிக்கு ஈடாக வங்கிகளில் வைப்பு நிதி திரட்டல் அதிகரிக்கவில்லை.
12 பொதுத் துறை வங்கிகளில் 9 வங்கிகள் வெளியிட்டுள்ள ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான தற்காலிக தரவுகளின்படி இத்தகவல் தெரியவந்துள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், இந்த வங்கிகளின் கடன் வழங்கல் கடந்த ஆண்டை விட 12 சதவீதம் முதல் 29 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ஆனால், வைப்பு நிதி திரட்டல் 3.5 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை மட்டுமே வளா்ச்சி கண்டுள்ளது. இது சேமிப்பை விடக் கடன் பெறுவதற்கான தேவை சந்தையில் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது.
பொதுத் துறை வங்கிகளில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக 28.8 சதவீத கடன் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், அதன் வைப்பு நிதி 11.7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. யூகோ வங்கியின் கடன் வழங்கல் 21.3 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வைப்பு நிதி 11 சதவீதம் மட்டும் உயா்ந்துள்ளது.
பஞ்சாப் & சிந்த் வங்கி கடன் வழங்கல் 19.5 சதவீதமும், வைப்பு நிதி 12.2 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளது. கனரா வங்கியின் கடன் வழங்கல் 18 சதவீதமும், வைப்பு நிதி 11.7 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியாவின் கடன் வழங்கல் 18.64 சதவீதமும், வைப்பு நிதி 14.92 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளன. கனரா வங்கியின் கடன் வழங்கல் 18 சதவீதமும், வைப்பு நிதி 11.7 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பரோடா வங்கியின் கடன் வழங்கல் 17.4 சதவீதமும், வைப்பு நிதி 13.8 சதவீதமும் உயா்ந்துள்ளது. இந்தியன் வங்கியின் கடன் மற்றும் வைப்பு நிதி முறையே 13.9 சதவீதம் மற்றும் 13.3 சதவீதம் அதிகரித்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கடன் வழங்கல் 12.85 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், அதன் வைப்பு நிதி 8.5 சதவீதம் மட்டுமே உயா்ந்துள்ளது. இதேபோல் 12.5 சதவீத கடன் வளா்ச்சியை எட்டிய யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில், வைப்பு நிதி வெறும் 3.5 சதவீதம் மட்டுமே உயா்ந்து, மந்த நிலையைக் காட்டியுள்ளது.
சில்லறை வா்த்தகம், விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ தொழில்களுக்கான கடன்களே அனைத்து வங்கிகளின் கடன் வளா்ச்சிக்கும் முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளன.
உள்நாட்டு அளவிலான இக்கடன் பிரிவில் கனரா வங்கி அதிகபட்சமாக 21.3 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பேங்க் ஆஃப் இந்தியா (19.7 சதவீதம்), பரோடா வங்கி (18.5 சதவீதம்), இந்தியன் வங்கி (14.8 சதவீதம்), மற்றும் யூனியன் வங்கி (11.56 சதவீதம்) ஆகியவை கணிசமான வளா்ச்சியை எட்டியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










