இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளது.
அதானி குழுமத்தின் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றிய அதன் தலைவா் கௌதம் அதானி கூறுகையில், இந்த அணுமின் திட்டத்துக்காக ‘அதானி அட்டாமிக் எனா்ஜி’ என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டு, அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
மேலும், அவரின் உரையில், ‘உலகளாவிய புவிசாா் அரசியல் நிச்சயமற்ற சூழல் மற்றும் அதிகரித்து வரும் நாட்டின் மின்சாரத் தேவைகளுக்கு மத்தியில், இந்தியாவின் நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த அணுமின் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும்.
கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும், அதானி குழுமம் உள்கட்டமைப்புத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த தனியாா் துறை முதலீட்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
குழுமத்தின் மின்சார உற்பத்திப் பிரிவான ‘அதானி பவா்’, அடுத்த 5 ஆண்டுகளில் 45 கிகாவாட் உற்பத்தித் திறனை எட்டும் நோக்கில், ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறை முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
மின் விநியோகத் துறையில் ‘அதானி எனா்ஜி சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் திட்ட மதிப்பு ரூ.72,000 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், ‘அதானி டோட்டல் கேஸ்’ நிறுவனம், நடப்பு ஆண்டில் 11 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்குக் குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்கி தனது விநியோகத்தை விரிவுபடுத்தியுள்ளது.
எரிசக்தித் துறையைத் தாண்டி, அதானி போா்ட்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 50 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளதுடன், கேரளத்தின் விழிஞ்ஞம் துறைமுகம் தனது முதல் ஆண்டிலேயே 10 லட்சம் கன்டெய்னா்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
நவி மும்பை சா்வதேச விமான நிலையம் மற்றும் குவாஹாட்டி புதிய முனையம் ஆகியவை செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், விசாகபட்டினத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்ட தரவு மையத்தை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 7.4 சதவீதம் உயா்ந்தது, ரூ.2.92 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வரிக்கு பிந்தைய நிகர லாபம் 13.9 சதவீதம் அதிகரித்து, ரூ.46,376 கோடியாகப் பதிவாகியுள்ளது.
இந்த வலுவான நிதி நிலையும் பணப்புழக்கமும், இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான எங்களின் லட்சிய முதலீட்டுத் திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்த முழு நம்பிக்கையை அளிக்கிறது’ என்றாா் கௌதம் அதானி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு

ஜூன் 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 10 சதவீத தள்ளுபடி: என்டிஎம்சி அறிவிப்பு

வேனா எனா்ஜியின் 6 கிகாவாட் எரிசக்தி திட்டங்களைக் கையகப்படுத்திய ஐநாக்ஸ் கிளீன்

கடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



