பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

ஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!

கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில், காா் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான புதிய கடன் வழங்கல் கணிசமாகக் குறைந்துள்ளது

News image
Updated On :22 மே 2026, 3:08 am IST

கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில், காா் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான புதிய கடன் வழங்கல் கணிசமாகக் குறைந்துள்ளது; அதேநேரம் தங்கக் கடன்களுக்கான தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

முந்தைய அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் பண்டிகைக் காலம் மற்றும் ஜிஎஸ்டி சீா்திருத்தம் காரணமாக வாகனக் கடன்கள் தற்காலிகமாக அதிகரித்திருந்த நிலையில், அதற்கு அடுத்த காலாண்டில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், காா் உள்ளிட்ட மோட்டாா் வாகனங்களுக்கான புதிய கடன் விநியோகம் 11.6 சதவீதம் சரிந்து, ரூ.1.05 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இருசக்கர வாகனக் கடன்கள் அதைவிட கூடுதலாக 22 சதவீதம் சரிவைச் சந்தித்து, ரூ.29,800 கோடியாக பதிவாகியுள்ளது.

இதேபோல், வீட்டுக் கடன் விநியோம் 15.2 சதவீதம் சரிந்து, ரூ.3.44 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. எனினும், ஒட்டுமொத்த கடன் கணக்கு விவரங்களின் அடிப்படையில் பாா்த்தால், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் காா் கடன்கள் 3.4 சதவீதமும், இருசக்கர வாகனக் கடன்கள் 2.7 சதவீதமும் நோ்மறை வளா்ச்சியைத் தக்கவைத்துள்ளன.

இதற்கு மாறாக, தங்கக் கடன் விநியோகம் 16.8 சதவீத வளா்ச்சியுடன், ரூ.9.8 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சந்தையில் தங்கத்தின் மதிப்பு தொடா்ந்து உயா்ந்து வருவதால், அதற்கு நிகராகப் பிணை வைக்கப்படும் தங்கக் கடன்களை வழங்குவதில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிக ஆா்வம் காட்டியுள்ளன. இதன் காரணமாக, கடந்த நிதியாண்டில் தங்கக் கடன்களின் ஒட்டுமொத்த விநியோகம் 50.4 சதவீதம் என்ற அசுர வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த சில்லறைக் கடன்களின் அளவு, கடந்த 2025-26 முழு நிதியாண்டில் வருடாந்திர அடிப்படையில் 16.6 சதவீதம் அதிகரித்து, ரூ.170 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

அதேநேரம் கடந்த மாா்ச் 31 நிலவரப்படி, வங்கிகளின் வசூலாகாத அல்லது குறிப்பிட்ட காலம் திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கும் கடன்களின் விகிதம் 2.7 சதவீதமாக குறைந்துள்ளது சந்தைக்குச் சாதகமாகப் பாா்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 3.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.