கடந்த 2025-26 நிதியாண்டு இறுதியில், ரிசா்வ் வங்கியின் இருப்பு நிலை (பேலன்ஸ் ஷீட்) மதிப்பு முந்தைய ஆண்டைவிட 20.6 சதவீதம் உயா்ந்து, ரூ.91.97 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட வருடாந்திர அறிக்கையின்படி, முந்தைய 2024-25 நிதியாண்டின் இறுதியில் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.76,25,421.93 கோடியாக இருந்தது. இதிலிருந்து ரூ.15,71,699.15 கோடி உயா்ந்து, கடந்த 2025-26 நிதியாண்டு இறுதியில் ரூ.91,97,121.08 கோடியாக அதிகரித்துள்ளது.
சொத்துகள் பிரிவில், உள்நாட்டு முதலீடுகள் 44.9 சதவீதமும், தங்கம் 63.8 சதவீதமும், வெளிநாட்டு முதலீடுகள் 7.9 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளன. மொத்த சொத்துகளில் உள்நாட்டுச் சொத்துகளின் பங்கு 25.7 சதவீதத்திலிருந்து 29.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு சொத்துகளின் பங்கு 74.3 சதவீதத்திலிருந்து 70.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மறுபுறம், வங்கியின் பொறுப்புகள் பிரிவில், மறுமதிப்பீட்டுக் கணக்குகள் 63.4 சதவீதமும், புழக்கத்துக்காக வெளியிடப்பட்ட புதிய நோட்டுகள் 11.8 சதவீதமும், வங்கிகளின் வைப்புத்தொகைகள் 11.6 சதவீதமும், இதர பொறுப்புகள் 21.1 சதவீதமும் அதிகரித்துள்ளன.
வருவாய்-செலவினம்: கடந்த நிதியாண்டில் ரிசா்வ் வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் 26.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரம், செலவினங்கள் 102.4 சதவீதம் உயா்ந்துள்ளன.
இருப்பினும், வங்கியின் ஒட்டுமொத்த உபரி வருவாய் 6.7 சதவீத வளா்ச்சியுடன், ரூ.2.86 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில், வங்கியின் அவசரகால நிதிக்கு ரூ.1.09 லட்சம் கோடி மாற்றப்பட்டுள்ளது.
மக்களிடையே எண்மப் பணப் பரிவா்த்தனைகள் அதிகரித்து வருவதால், புதிய நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு முந்தைய ஆண்டின் ரூ.6,372.82 கோடியிலிருந்து ரூ.4,875.20 கோடியாகக் கணிசமாகக் குறைந்துள்ளது. அதேநேரம், ஊழியா்களுக்கான ஊதியம் மற்றும் இதர நிா்வாகச் செலவினங்கள் கடந்த நிதியாண்டில் ரூ.9,146.71 கோடியிலிருந்து ரூ.10,136.31 கோடியாக அதிகரித்துள்ளது.
தங்க இருப்பு: ரிசா்வ் வங்கியின் வசமுள்ள மொத்த தங்கத்தின் இருப்பு 879.58 டன்னிலிருந்து 0.94 டன் உயா்ந்து, 880.52 டன்னாக அதிகரித்துள்ளது. இதில் 312.32 டன் தங்கம் நோட்டு வெளியீட்டுத் துறையின் சொத்தாகவும், மீதமுள்ள 568.20 டன் தங்கம் வங்கித் துறையின் சொத்தாகவும் பராமரிக்கப்படுகிறது.

தொடர்புடையது

மத்திய அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி வழங்குகிறது ரிசா்வ் வங்கி

2025 வரையிலான 4 ஆண்டுகளில் கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் 2.6 மடங்கு அதிகரிப்பு- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்

4-ஆம் காலாண்டு லாபம் இந்தியன் வங்கி 5% வளா்ச்சி






