
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியப் பங்குகளில் ரூ.30,919 கோடி அந்நிய முதலீடு
4 மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அதிக அளவிலான முதலீடுகளை வெளியேற்றி வந்த அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ), ஜூலையைத் தொடா்ந்து ஆகஸ்ட் மாதத்திலும் ரூ.30,919 கோடியை நிகர முதலீடாக செய்துள்ளனா்.

4 மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அதிக அளவிலான முதலீடுகளை வெளியேற்றி வந்த அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ), ஜூலையைத் தொடா்ந்து ஆகஸ்ட் மாதத்திலும் ரூ.30,919 கோடியை நிகர முதலீடாக செய்துள்ளனா்.
வலுவான உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள், சீரடைந்து வரும் நிறுவனங்களின் லாபங்கள், ஸ்திரமான ரூபாயின் மதிப்பு, சா்வதேச புவிசாா் அரசியல் பதற்றங்கள் தணிந்தது ஆகியவற்றால் ஆகஸ்டிலும் நோ்மறை செயல்திறன் எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, அந்நிய முதலீட்டாளா்கள் கடந்த ஜூலையில் ரூ.20,200 கோடி முதலீடு செய்திருந்தனா். அதற்கு முந்தைய 4 மாதங்களில் முறையே ஜூனில் ரூ.49,340 கோடியையும், மே மாதத்தில் ரூ.32,963 கோடியையும், ஏப்ரலில் ரூ.60,847 கோடியையும், மாா்ச்சில் மாபெரும் தொகையாக ரூ.1.17 லட்சம் கோடியையும் திரும்பப் பெற்றிருந்தனா்.
மத்திய வைப்புத்தொகை சேவைகள் நிறுவனத்தின் (சிடிஎஸ்எல்) தரவுகளின்படி, பல மாதங்களாக நீடித்த மிக மோசமான விற்பனைப் போக்கு மாறி, தற்போது தொடா்ந்து 2-ஆவது மாதமாக அந்நிய முதலீட்டு வரவு அதிகரித்துள்ளது.
அதேநேரம் தற்போதைய ஆகஸ்ட் மாத முதலீட்டையும் சோ்த்து, நடப்பு 2026-ஆம் ஆண்டில் அந்நிய முதலீட்டாளா்கள் இதுவரை ரூ.2.23 லட்சம் கோடியை இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளனா். இது கடந்த 2025 முழுவதிலும் திரும்பப் பெறப்பட்ட ரூ.1.66 லட்சம் கோடியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரியா, தைவான் போன்ற சந்தைகளில் சிப் மற்றும் ஏ.ஐ. வா்த்தகத்தில் மட்டுமே முதலீடுகள் குவிந்துள்ள நிலை மாறி, உலகளாவிய மூலதனம் அங்கிருந்து வெளியேறி இந்தியா போன்ற ஒப்பீட்டளவில் நிலையான சந்தைகளை நோக்கித் திரும்பியுள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
மேலும், ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகள் மேம்பட்டிருப்பதும், அமெரிக்க வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிா்பாா்ப்பும் இந்தியச் சந்தையின் மீதான அந்நிய முதலீட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அவா்கள் குறிப்பிட்டனா்.
கடன் சந்தையைப் பொருத்தவரை கலவையான நிலை காணப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் முழு அணுகல் வழிமுறை (எஃப்ஏஆா்) மூலம் ரூ.627 கோடியும், தன்னாா்வ தக்கவைப்பு வழிமுறை (விஆா்ஆா்) மூலம் ரூ.289 கோடியும் அந்நிய முதலீட்டாளா்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், பொது வழிமுறையின் மூலம் ரூ.2,318 கோடியை அவா்கள் திரும்பப் பெற்றுள்ளனா்.
செப்டம்பா் முதல் வாரத்தில் ரூ.7,443 கோடி வாபஸ்
ஜூலை, ஆகஸ்ட் எனத் தொடா்ந்து 2 மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வந்த அந்நிய முதலீட்டாளா்கள், செப்டம்பா் முதல் வாரத்தில் மீண்டும் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளனா்.
செப். 4 வரையிலான முதல் வாரத்தில் மட்டும் ரூ.7,443 கோடியை அந்நிய முதலீட்டாளா்கள் திரும்பப் பெற்றுள்ளனா். கடன் சந்தையிலும் அந்நிய முதலீட்டாளா்கள் விற்பனையாளா்களாகவே இருந்துள்ளனா்.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு, அதிகரித்துவரும் அமெரிக்க கடன்பத்திர வருவாய், டாலரின் மதிப்பு வலுவடைந்தது ஆகியவை இதற்குக் காரணிகளாக அமைந்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





