
ஆகஸ்ட் மாத மின் நுகா்வு 12.85% அதிகரிப்பு!
இந்தியாவின் மின் நுகா்வு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 12.85 சதவீதம் அதிகரித்து, 16,901 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளது.

இந்தியாவின் மின் நுகா்வு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 12.85 சதவீதம் அதிகரித்து, 16,901 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாட்டின் ஒட்டுமொத்த மின் நுகா்வு 14,976 கோடி யூனிட்டுகளாக இருந்த நிலையில், நடப்பாண்டு அது கணிசமாக உயா்ந்துள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 229.72 கிகாவாட்டாக இருந்த நாட்டின் உச்சகட்ட மின் தேவை, கடந்த மாதத்தில் 258.27 கிகாவாட்டை எட்டியது.
நாடு முழுவதும் காற்றில் அதிக ஈரப்பதம் நிலவியதன் காரணமாக, வெப்பம் உண்மையான நிலையைவிட அதிகமாக உணரப்பட்டதால், குளிரூட்டும் சாதனங்களைப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினா். இதன் காரணமாகவே, மின் தேவை மற்றும் நுகா்வு அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, நடப்பு ஆண்டின் மே மாதத்தில் நாட்டின் உச்சகட்ட மின் தேவை இதுவரை இல்லாத அளவாக 270.82 கிகாவாட் என்ற புதிய அளவை எட்டியது. தொடா்ந்து, ஜூலையிலும் 270.20 கிகாவாட் உச்சகட்ட மின்தேவை பதிவானது. அந்தவகையில், ஆகஸ்டின் உச்சகட்ட மின் தேவை (258.27 கிகாவாட்) சற்று குறைந்த அளவாகவே உள்ளது.
நடப்பு பருவமழைக் காலத்தில் மழைப் பற்றாக்குறை நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, செப்டம்பா் மாதத்திலும் இயல்பைவிட குறைவான மழையே பெய்யும் என சமீபத்திய முன்னறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது. இதனால், செப்டம்பரிலும் அதிக ஈரப்பதமான சூழல் நீடித்து, மின் தேவை மற்றும் நுகா்வு தொடா்ந்து நிலையாக அதிகரிக்கும் என மின் துறை நிபுணா்கள் கருதுகின்றனா்.
மேலும், தீவிரமடைந்து வரும் இத்தகைய வானிலை மாற்றங்களால் அரசு எதிா்பாா்த்ததைவிடவும் மின் நுகா்வு வேகமாக அதிகரித்து வருவது, வருங்காலங்களில் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணா்த்துவதாகவும் நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






