/

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். சென்னையில் இருந்து 75 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2013, 5:22 pm IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். சென்னையில் இருந்து 75 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது.

பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளுக்கு இனப் பெருக்கம் செய்வதற்கான மிகச் சிறந்த இடமாக வேடந்தாங்கல் திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மிகப் பழமையான பறவைகள் சரணாலயம் என்றும் இதனைக் கூறலாம்.

1700ஆம் ஆண்டுகளில் இவ்விடம், பறவைகளை வேட்டையாடுவதற்கு ஏற்ற இடமாக இருந்துள்ளது. அதனால், இவ்விடத்தை வேடர்கள் தங்கிய இடமாக அழைத்துள்ளனர். அதுதான் பின்னாளில் மருவி வேடந்தாங்கல் என்று ஆனது. வேடந்தாங்கலைச் சுற்றி உள்ள மக்களின் முயற்சியாலும், சமூக ஆர்வலர்களின் முயற்சியின் பலனாகவும், 1858ஆம் ஆண்டு செங்கல்பட்டு ஆட்சியரின் உத்தரவுப்படி இவ்விடம் பறவைகளின் சரணாலயமாக மாறியது.

சுற்றி அமைந்துள்ள மரங்களும், அதற்கு நடுவில் ஏரியும், பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையாக அமைந்திருந்ததால், ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இங்கு சீசன் காலத்தில் வருகின்றன.

பொதுவாக எப்போதும் மூடப்பட்டிருக்கும் இந்த சரணாலயம், பறவைகள் வரும் சீசன் காலத்தில் மட்டுமே திறந்திருக்கும். நவம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்ல உகந்த காலமாகும்.இந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் குளிரான கால நிலை இருக்கும். அதில் இருந்து தப்பிக்கவே, பறவைகள் இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு வந்து  இனப்பெருக்கம் செய்கின்றன.

பின்டெய்ல், கார்கனே, கிரே வாக்டெய்ல் என பல்வேறு வகையான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

இங்கு வரும் பறவைகள், அங்குள்ள மரங்களில் அழகான கூடுகள் அமைத்து, அதில் முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அவை கடல் கடந்து செல்லும் அளவுக்கு தயாராகும் போது, பறவைகள் குஞ்சுகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றன.

இந்த மிகப்பெரிய இனப்பெருக்க நடவடிக்கைகளை காண வேண்டும் என்றால், அதற்கு உகந்த இடமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைக் கூறலாம்.

இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்க, அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

பறவைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்தல் போன்ற விஷயங்களிலும் கிராம மக்கள் ஒற்றுமையோடு ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேடந்தாங்கல் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை அமைதியான பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், ஒரு தொலைநோக்கிக் கருவி அமைக்கப்பட்டுள்ளது. மிக உயரமான களங்கரை விளக்கம் போன்ற கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கிக் கருவி மூலமாக, அங்குள்ள பறவைகளை வெகு அருகாமையில் பார்க்கும் வசதி கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.