1982ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பேலஸ் ஆன் வீல்ஸ் என்ற ஆடம்பர சுற்றுலா ரயில், அதன் பெயருக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது.
இந்த ரயில் மூலமாக தில்லியில் இருந்து கிளம்பி 7 நாட்கள் வட இந்தியாவின் மிக முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, தில்லியில் வந்து இறங்கும் வகையில் சுற்றுலா பயண திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரண்மனையைப் போன்ற அலங்காரத்துடனும், இந்திய பாரம்பரிய, கலாச்சாரத்தை பறைசாற்றும் அழகோடும் திகழ்கிறது இந்த பேலஸ் ஆன் வீல்ஸ் ரயில்.
தற்போது இந்த ரயில் மீட்டர் கேஜ்ஜாக மாற்றப்பட்டு, குளிர்சாசன வசதியோடு புதிய பரிமாணத்துடன் அழகிய அரண்மனையாக தண்டவாளங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
உணவு விடுதி, நூலகம், சலூன் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திகழ்கிறது இந்த ரயில்.
7 இரவுகளைக் கொண்ட இந்த ரயில் சுற்றுலாவில் குறைந்தது 4 இரவுகளுக்காவது உங்களது சுற்றுலா பயணம் இருக்க வேண்டும். செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் இந்த ரயில் சுற்றுலா ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இரவு புது தில்லியில் இருந்து துவங்குகிறது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் இந்த ரயில் சுற்றுலா சேவை இயக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் இருந்து துவங்கி, ஜெய்ப்பூரில் உள்ள ஹவா மகால் அரண்மனை, ஜந்தர் மந்தர் - ஆஸ்ட்ரானமிகல் கூடம், விலையுயர்ந்த கற்களை அறுத்து பாலிஷ் போடும் சர்வதேச கூடம், ஆம்பர் கோட்டை, ஜெய் மந்திர், ரந்தம்போர் புலிகள் சரணாலயம், ரந்தம்போர் கோட்டை, மிகப்பெரிய 3 ஏரிகள், ஜோமர் பாரோய், ஜோகி மகால், பாதாம் தாலாப், சிட்டோகார் கோட்டை, ராஜஸ்தானில் பல்வேறு சுற்றுலா தலங்கள், ஜோத்புர், பரத்புர், ஆக்ரா உட்பட ஏராளமான சுற்றுலா தலங்களை இந்த பேலன் ஆன் வீல்ஸ் சுற்றுலா ரயில் மூலமாகக் கண்டு களிக்கலாம்.
இந்த ரயிலோடு நமது பயணம் முடிவடையாமல், ரயிலில் இருந்து சுற்றுலா தலங்களுக்குச் செல்ல சிறப்பு வாகனங்களும், ஆங்காங்கே உணவு சாப்பிட நட்சத்திர ஓட்டல்களும் நமக்காக பதிவு செய்யப்பட்டு வசதியாக வைக்கப்பட்டிருக்கும்.
ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம், காலையில் டி, காலை உணவு, மதிய உணவு, மாலை நேர டீ, இரவு உணவு, ரயிலில் இருந்து சுற்றுலா தலத்துக்குச் செல்வதற்கான வாகனங்களுக்கான கட்டணம், சுற்றுலாதலங்களுக்கான நுழைவுக் கட்டணம், குதிரைச் சவாரி, யானை சவாரி போன்ற சிறப்பு சவாரிகளுக்கான கட்டணம் ஆகியவை சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலா திட்டத்துக்கு முன்பதிவு செய்யும் போது 20 சதவீத தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயணம் நாளுக்கு 65 நாட்களுக்கு முன்பாக மீதித் தொகையை செலுத்திவிட வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள palaceonwheelsindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








