எழில்மிகு யானை மலை!

மதுரை நகருக்கு வடக்கே எட்டு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது யானை மலை.

மதுரை நகருக்கு வடக்கே எட்டு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது யானை மலை. இம்மலை சற்றே தொலைவிலிருந்து பார்த்தால், ஒரு கம்பீரமான யானை படுத்திருப்பது போன்று தோற்றமளிக்கும். எனவேதான் யானை மலை என்கிற பெயர் ஆதிகாலத்திலேயே சூட்டப்பட்டிருந்தது. நெடுந் தொலைவுக்கு நீண்டு கிடக்கும் இம்மலை, முருகனின் படைவீடான திருப்பரங்குன்றம், பழனி ஆகிய குன்றுகளைப் போன்று உயர்ந்தோங்கி நிற்கிறது. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டிலேயே இங்கு மக்கள் வசித்தனர். அப்போது இவ்விடத்தில், சமண மதம் பரவியிருந்தது.

யானை மலையின் உச்சியில், குகை தளம் உள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள சமணர் கல் படுகைகள் இன்றளவும் புதியதாய், பளபளப்போடு கூடிய மெருகுடன் காணப்படுகிறது. குகைக்குள் குளிர்ச்சியாகவே எந்நேரமும் இருக்கிறது. குகைத் தளத்தின் முன்பாக, கி.பி. ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பாதாமி கல்வெட்டு, "பளிச்'செனக் காணப்படுகின்றது. அதில்,

 ""இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன்

 அத்துவாயி அரிட்ட காயிபன்''

 - என்கிற இரண்டு வரி வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. "இவ' என்பது "இபம்' என்கிற வடமொழிச் சொல்லின் மறு வடிவம். இதன் பொருள் "யானை' என்பதாகும். குன்றம் என்றால் மலை. ஆக, கல்வெட்டு, "யானை மலை' என்பதை "இவகுன்றம்' எனச் சொல்கிறது. "பா' என்றால் படுக்கை. மொத்தத்தில், "தங்குவதற்கான கற்படுக்கை' என்பதுதான் கல்வெட்டு உரைக்கும் பொருள்.

இதில், தங்கியிருந்த துறவியார் இருவரும் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர்கள். ஏரி எனும் ஊரைச் சேர்ந்த ஆரிதன் என்பது ஒரு துறவியின் பெயர். அத்துவாயி அரிட்ட காயிபன் என்ற மற்றொரு துறவி, சிறந்த நூல்களின் பொருட்களை எடுத்துரைப்பதில் வல்லவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செழித்துக்கிடந்த இப்பகுதியில், சமணத் துறவியர் இருவர் மலை உச்சியில் கற்படுக்கை அமைத்து தவம் மேற்கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது.

குன்றின் மேற்குப் புறம் இன்னுமொரு இயற்கையான குகைத் தளம் இருக்கிறது. சீராக படிகளை தற்போது அமைத்திருப்பதால், குகைத் தளம் வரையும் மிக எளிதாக சென்று வரலாம். இந்த குகைத் தளத்தின் முகப்பில் பல எழில் மிக்க சமண சிற்பங்களும் கல்வெட்டுகளும் புதுமையாக காட்சியளிக்கின்றன. இதன் காலம் கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டு ஆகும். இங்கு காணப்படும் படைப்புச் சிற்பங்கள் மகாவீரர், பார்சுவ நாதர், பாகுபலி, அம்பிகா, ஆகியவை ஆகும்.

சிற்பங்களின் மீது சுதை பூசி, அற்புதமான வண்ணங்களும் கண்கவர் விதத்தில் தீட்டப்பட்டுள்ளன. காலம் ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும், தற்போது சற்றே நிறம் மங்கிக் காணப்படுகின்றன.

சிற்பங்களின் கீழ் தமிழ், கிரந்தம், வட்டெழுத்து ஆகிய எழுத்துக்களில் கல்வெட்டுக்கள் உள்ளன.

இந்த இடம் பல நூற்றாண்டுகளாக "யானை மலை' என்கிற பெயராலேயே அழைக்கப்பட்டு வந்த நிலை கி.பி. 770-ஆம் ஆண்டு மாறிப்போனது. அந்த காலகட்டத்தில் முற்காலப் பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்பவன் மதுரை மன்னனாக ஆட்சி செய்துவந்தான். அவனது பிரதான அமைச்சராக பொறுப்பு வகித்த மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவன், யானை மலையின் வடமேற்குப் பக்கமாக நரசிங்கப் பெருமாளுக்கு குடைவரைக் கோவில் ஒன்றைக் கட்டத் தீர்மானித்து பூர்வாங்க வேலைகளைத் துவக்கினான். ஆனால் துரதிருஷ்டவசமாக, கோவில் திருப்பணி வேலைகள் முழுமை பெறும் முன்னரே, நோய்வாய்ப்பட்டு மாண்டு போனான். அவனுக்குப் பின்னால், அவனது தம்பி மந்திரி பதவி ஏற்றான். அவனது பெயர் பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்பதாகும். இவனே கோயில் திருப்பணிகளை செம்மையாக முடித்து, குடமுழுக்கும் செய்துவைத்தான். இதனைத் தொடர்ந்து, இவ்வூருக்கு "நரசிங்க மங்கலம்' என பெயரையும் சூட்டினான். ஆண்டுதோறும், மாசி பெüர்ணமி நாளில் கஜேந்திர மோட்சத் திருவிழா இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலின் உள்ளே நுழைகையில், இடப்புறமாக அழகிய பொற்றாமரைக் குளம் கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ணம் ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி தளும்பிய வண்ணம் காட்சியளிக்கிறது.

இக் குடைவரைக் கோயில் வளாகத்தில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் ஏராளமாய்க் காணப்படுகின்றன. முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் பல திருப்பணிகளை இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர்.

பிற்காலப் பாண்டிய மன்னரின் கல்வெட்டில் இம்மலையை "திரு ஆனை மலை' என்று குறிக்கப்பட்டுள்ளது. விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவ ராயர் காலத்திய கல்வெட்டில், சமஸ்கிருதத்தில் இம்மலையை "கஜகிரி' என்று குறிப்பிட்டுள்ளனர். தற்காலத்தில் இத்தலத்தை பரிகாரத் தலமாக மக்கள் பெரிதும் போற்றி வணங்கி வருகின்றனர். இக்கோயில், மேற்குத் திசை பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மலையிலேயே முருகப் பெருமானுக்கும் ஒரு குடைவரைக் கோயில் அமைத்திருந்தனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில், வட்டக் குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்த நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர் என்பவர் இக்குடைவரைக் கோயிலை புதுப்பித்த செய்தியை தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டு கூறுகிறது.

தற்போது, குன்றின் தென்புறம் ஈஸ்வரன் கோயில் ஒன்றினை மலைமேல், சிறிது உயரத்தில் அமைத்து, நித்ய பூசைகளைச் செய்துவருகின்றனர்.

மனதுக்கும் உடலுக்கும் நலமளிக்கும் வண்ணம் நூற்றாண்டுகள் இருபது கடந்தும், இன்றும் அன்றலர்ந்த செந்தாமரை போல் எழிலுடன் சரித்திரச் சான்றுகளுடன் திகழும் யானை மலையை, சுற்றுலாத்தலமாக மாற்றி வசதிகளைச் செய்துத் தருவதன் மூலம், மதுரைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் இடமாக "யானை மலை' வெகுவிரைவில் மாறிவிடும் என்பது உறுதி.

நில வளம், நீர் வளம், மலை வளம் என இப்பகுதி சிறந்த விளங்குகிற காரணத்தால் சிறியோர் முதல் பெரியவர்கள் வரை யானை மலையைக் கண்டு பேரின்பம் பெறுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com