இங்கே இருப்பதா? அங்கே போவதா?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. ஆனால் யார் எந்த அணி என்பது இன்னும் தெளிவாகவில்லை. 2006-ல் ஆண்டில் இருந்த தெளிவு இப்போது இல்லை. காங்கிரஸ், திமுகவை விவாகரத்து செய்துவ


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. ஆனால் யார் எந்த அணி என்பது இன்னும் தெளிவாகவில்லை. 2006-ல் ஆண்டில் இருந்த தெளிவு இப்போது இல்லை.
காங்கிரஸ், திமுகவை விவாகரத்து செய்துவிட்டு அதிமுகவின் கரம் பிடிக்குமா அல்லது தொடர்ந்து திமுகவுடனேயே குடித்தனம் நடத்துமா என்பதைப் பொறுத்துதான் தமிழகத்தில் கூட்டணி குழந்தைகள் பிறக்கும்.
2001-ல் அதிமுக அணியில் இருந்த காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரி கட்சிகள் 2003-ம் ஆண்டிலேயே திமுக தலைமையில் அணி வகுத்துவிட்டன. அதன் விளைவாகத்தான் 2004 மக்களவைத் தேர்தலில் திமுக அணி தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அணிக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.
அதே வேகம் 2006 சட்டப்பேரவைத் தேர்தல் வரையிலும் திமுக அணியில் நீடித்தது. தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனாலும், திமுக அணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன்பிறகு வெவ்வேறு காரணங்களால் பா.ம.க.வும், இடதுசாரிகளும் அணி மாறிவிட்டன.
இருந்தாலும் எதிரணியில் இருக்கும் அதிமுக, எந்தக் கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம் என்பதில் இன்னும் தெளிவில்லாமல் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இப்போதிருந்தே கூட்டுப் போராட்டங்கள் நடத்தினால்தான் தேர்தலின் போது தொண்டர்களிடையே இணக்கம் ஏற்படும், மக்களின் ஆதரவையும் பெற முடியும் என்று இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் வலியுறுத்திய போதிலும், அதிமுக தரப்பில் இருந்து இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை.
திமுக அணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்து வரும் என்ற நம்பிக்கையில், மற்ற கட்சிகளோடு தேர்தல் அணுகுமுறை பற்றி பேசுவதைத் தள்ளிப்போட்டு வருகிறார் ஜெயலலிதா என்று அதிமுக முன்னணி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ. ராசாவை நீக்குவதால், மத்திய ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால், தேவைப்படும் ஆதரவைப் பெற்றுத் தர தாம் தயாராக இருப்பதாக ஜெயலலிதா முன்வந்து அறிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சி இதற்கு உடனே தனது அதிருப்தியைத் தெரிவித்தது.
ஒருவேளை அதிமுக அணியில் காங்கிரஸ் சேர்ந்தால், இடதுசாரிகள் அங்கிருக்க முடியாது என்பதால், அக் கட்சிகளும் தேர்தல் ஆலோசனை பற்றி ஜெயலலிதாவிடம் பேசுவதை தள்ளிப்போட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா கொடநாடு சென்ற போதே, அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், மற்ற தோழமைக் கட்சியினரும் கேட்டிருந்தனர். ஜெயலலிதா சென்னை திரும்பி 2 வாரங்கள் ஆகிவிட்ட பிறகும் அதுபோன்ற சந்திப்புகள் ஏதும் நடக்கவில்லை. இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குமாறு தோழமைக் கட்சிகளும் வலியுறுத்தவில்லை என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இனியும் தாமதம் செய்யாமல், எந்தெந்தக் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கப் போகிறோம் என்பதை ஜெயலலிதா தெளிவுபடுத்தினால்தான், இருக்கிற சில மாத இடைவெளியில் அரசின் குறைகளைப் பிரசாரம் செய்து எதிரணிக்கு வலுச் சேர்க்க முடியும் என்று இடதுசாரிகளும், மதிமுகவினரும் கூறுகின்றனர்.
திமுக அணியில் இருந்து காங்கிரஸ் விலகிச் செல்லாது என்று நம்பப்பட்டாலும் இந்தக் கூட்டணி தேர்தலை வரை நீடிக்குமா என்பதில் இன்றுவரை உறுதி இல்லை.
திமுக அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்று கடந்த வாரம் சேலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் உறுதி செய்கின்றன. பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் வீரபாண்டி ஆறுமுகம். சேலம் மாவட்டத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த 3 பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் அவரைச் சந்தித்துப் பேசினர்.
எனவே திமுக அணியில் பா.ம.க. சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதிமுக அணியில் தேமுதிக சேரப் போகிறது என்று பரவலாகப் பேசப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக இரு தரப்பிலும் தலைவர்கள் யாரும் இதுதொடர்பாக சந்தித்துப் பேசவில்லை என்று தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்திய இலவசத் திட்டங்கள், இலவச ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீடு போன்ற திட்டங்களால் கிடைத்துள்ள நற்பெயர் என்ற பலத்தை நம்பி திமுக அணி தைரியமாக இருக்கிறது. ஆனால் 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று ஸ்டாலின் மற்றும் அழகிரி தரப்பினர் அச்சம் தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது.
2 ஜி அலைக்கற்றை ஊழல் புகாரைத்தான் பெரும் பலமாக நம்புகிறது அதிமுக அணி. ஆனால், இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தீவிர பிரசாரம் செய்ய அதிமுக அணியில் தீவிர அணுகுமுறைகள் எதுவும் இல்லை என்று தோழமைக் கட்சியினர் மட்டுமின்றி அதிமுகவினரும் கூட கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...