தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆளுக்கொரு பாடம்!

விஸ்வரூபம் எடுத்துள்ளார் நிதீஷ். அவரது வெற்றி பிகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:48 pm

மு.சந்திரசேகரன்

விஸ்வரூபம் எடுத்துள்ளார் நிதீஷ். அவரது வெற்றி பிகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் பிகாரில் நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி? என எல்லா கட்சிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

 அதேவேளையில், இந்த வெற்றியை எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஏற்ற வகையில் பொருத்திப் பார்க்கின்றன. ஆனால் எல்லோருக்குமே படிப்பினையாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

 ÷நிதீஷ்குமார் தலைமையிலான அரசு செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள்தான் அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என திமுக தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தில் செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களால் மறுபடியும் தங்களுக்குதான் வெற்றி கிடைக்கும் என்று கூறிக் கொள்வதற்காக இந்த அம்சத்தை மட்டும் திமுக தரப்பில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 ÷நிதீஷ்குமாரின் வளர்ச்சித் திட்டங்கள் என்பதில், இலவசம், மானிய அடிப்படையிலான திட்டங்கள் என்பதைவிட, அடிப்படைக் கட்டுமான வளர்ச்சிப் பணிகள்தான் அதிகம். இதை மற்ற ஆளும் கட்சிகள் கவனத்தில் கொள்வது அவசியம்.

 ÷கிராமப்புறங்களில் கல்வி, மருத்துவம், சாலை வசதிகள்- இதுவே மக்களுக்கு மனநிறைவைத் தந்திருக்கிறது. சட்டம், ஒழுங்கு நிலை வெகுவாக முன்னேறி, எல்லோரும் தைரியமாக வெளியில் போக முடியும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. பிகார் வரலாற்றில் மிக அமைதியாக நடந்த தேர்தல் இது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியே பாராட்டியுள்ளார்.

 எதிரணியில், லாலு பிரசாத் வீழ்ச்சிக்கு, வாரிசு அரசியலே காரணம், குடும்ப அரசியலுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவு என்றும் கருத்துக் கூறப்பட்டுள்ளது. லாலுவின் ஆரம்ப கால அரசியலை நினைவுகூர்ந்த பா.ஜ.க. தலைவர் ரவிசங்கர் பிரசாத், சமூக சமத்துவத்தில் ஆர்வம் உள்ளவர் லாலு. ஆனால் அவருடைய குடும்பத்தினரின் தலையீடு வந்த பிறகுதான் இப்படியாகிவிட்டார் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

 ÷முதல்வர் பதவியில் தாம் தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது தன் மனைவி ராப்ரி தேவியை லாலுபிரசாத் முதல்வராக்கினார். அதன் பிறகு வந்த தேர்தல்களில் அவருடைய ராஷ்டிரீய ஜனதா தளம் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வந்திருப்பதைக் காண முடிகிறது என்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

 ÷தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், பா.ம.க. உள்பட முன்னணியில் உள்ள கட்சிகள் பலவற்றிலும் வாரிசுகள்தான் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளாக பேசப்படுகிறார்கள். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வாரிசுகள் இல்லாத அரசியலை காண்பது அரிது என்றாகிவிட்டது.

 ÷குடும்ப அரசியல், வாரிசு அரசியலால்தான் லாலு தோற்றிருக்கிறார், எனவே தமிழகத்திற்கு இது நல்ல பாடம் என்ற கருத்தை அதிமுக தரப்பினர் முன்வைக்கிறார்கள்.

 ÷லாலுவைப் போல தாங்களும் பிற்பட்ட மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறிவரும் அரசியல் கட்சிகள், நிதீஷ்குமாரின் வெற்றி பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

 ÷ஜாதியை முன்வைத்து நடந்த பிரசாரங்கள் எடுபடவில்லை என்பதையும் பிகார் முடிவுகள் காட்டியுள்ளன. அதேபோல மதம் என்ற அம்சமும் தேர்தல் முடிவை நிர்ணயிக்கவில்லை. முஸ்லிம்களின் கோட்டை என கருதப்பட்ட 49 தொகுதிகளில் 40-க்கும் மேலான தொகுதிகளில் நிதீஷ் கூட்டணிதான் வென்றுள்ளது. யாதவ மக்கள் அதிகம் உள்ளதாகக் கருதப்படும் 38 தொகுதிகளில் 30-க்கும் மேல் நிதீஷ் அணிக்கு சென்றுவிட்டன. தலித், மகாதலித் என சமுதாயத்தின் எல்லா பிரிவு மக்களும் நிதீஷ் அணியைத்தான் ஆதரித்திருக்கிறார்கள்.

 ÷இவ்வளவுக்கும் மாநிலத்தில் தனிநபர் வருமானம் பெரிதாக உயர்ந்துவிடவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியும் வகையில் வளர்ச்சிப் பணிகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வெற்றிக்கான தாரக மந்திரமாகப் பேசப்படுகிறது.

 ÷2005 தேர்தலில் லாலு கூட்டணிக்கு எதிரான வாக்கு என்ற அடிப்படையில் நிதீஷ் அணி வென்றது. இப்போது இந்த அரசு தொடர வேண்டும் என்ற ஆதரவு வாக்குகளின் அடிப்படையில் வெற்றி கிடைத்திருக்கிறது.

 ÷படித்தவர்கள் அதிகம் இல்லாத மாநிலம், மிகவும் பின்தங்கிய மாநிலம் என்றெல்லாம் பேசப்பட்ட பிகாரின் வாக்காளர்கள் இந்தியாவின் வாக்காளர்களுக்கு நல்ல முன்னுதாரணத்தைக் காட்டியிருக்கிறார்கள். ஜாதி, மதம் என்று பேசுவோரை எல்லாம் விரட்டிவிட்டு, உண்மையான வளர்ச்சி என்பதை மட்டுமே மனதில் கொண்டு வாக்களியுங்கள் என்று உணர்த்தியிருக்கிறார்கள்.

 ÷பிகார் தேர்தல் முடிவு எல்லா தரப்பினருக்குமே ஒவ்வொரு பாடத்தை தருவதாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதைத் தள்ளிவிடாமல், எல்லா அம்சங்களையும் எடுத்துக் கொண்டு, ஜாதி, மதத்தை முன்னிறுத்தாத தேர்தல், வளர்ச்சிப் பாதை அரசியல் என்பதில் கவனம் செலுத்துவது மக்களுக்கு பயன் தருவதாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.