யாரைத் தோற்கடிக்கப்போகிறார் விஜயகாந்த்?
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் பெரிய கட்சிகள் தயங்கிக் கொண்டிருக்க தேமுதிக தலைவர் விஜய்காந்த் தைரியமாக களம் இறங்கிவிட்டார். தேர்தலுக்கு


தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் பெரிய கட்சிகள் தயங்கிக் கொண்டிருக்க தேமுதிக தலைவர் விஜய்காந்த் தைரியமாக களம் இறங்கிவிட்டார்.
தேர்தலுக்கு கட்சியை தயார் செய்வதற்காக கட்சியின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) சேலத்தில் நடக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளின் அணி சேர்க்கையில் இந்த மாநாடு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகளில் ஒரு முறை சட்டப்பேரவை பொதுத் தேர்தலையும், ஒரு முறை மக்களவை பொதுத் தேர்தலையும் இந்தக் கட்சி தனித்தே சந்தித்துள்ளது. இடையில் நடந்த இடைத்தேர்தல்களிலும் தனித்துதான் போட்டியிட்டது.
இடைத்தேர்தல்களில் இக் கட்சியால் தனது பலத்தை அதிகம் காட்ட முடியாமல் போனாலும், இக் கட்சிக்கு வாக்கு வங்கி அதிகரித்து வருவதை சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது அரசியல் கட்சிகளுக்கும், ஏன் அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கும் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுமார் 11 சதவீத வாக்குகள் இக் கட்சிக்கு உள்ளது. அதுவும் தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலும் இந்த வாக்கு வங்கி இருப்பது அதன் பலம்.
இரண்டு அணிகளுக்கும் மாற்றாக தனக்கு ஒரு முறை வாய்ப்பு தருமாறு கடந்த தேர்தலின் போது விஜயகாந்த் பிரசாரம் செய்தார். தொகுதிகளில் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றார்.
இதுவரை ஆட்சி, அதிகாரம் எதிலும் இருந்திராத கட்சி என்பதால், ஊழல் போன்ற குற்றச்சாட்டு எதுவும் தே.மு.தி.க. மீது இல்லை. இருந்தாலும் கட்சியில் குடும்பத்தினரின் ஆதிக்கம் இருப்பது தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மற்ற கட்சிகளில் மட்டும் இப்படி இல்லையா என்று கேள்வி எழுப்பினால், அந்தக் கட்சிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று மக்கள் கேட்பார்களே என்கின்றனர் தொண்டர்கள்.
இந்த முறையும் விஜயகாந்த் தனித்தே தேர்தலைச் சந்திக்கப் போகிறாரா என்பதுதான் தொண்டர்கள் மத்தியில் இப்போதுள்ள கேள்வி.
தனித்து சந்தித்தால் மறுபடியும் வாக்கு வங்கி வேண்டுமானால் சற்று அதிகரிக்குமே தவிர, பதவிகளைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியுமா என்பது குறித்து தொண்டர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
ஆனால் விஜயகாந்த் தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் திமுக அணியினரின் விருப்பமாக இருக்கிறது. அதேநேரத்தில் அப்படி அவரைத் தனித்து விட்டுவிடாமல் தங்கள் அணியில் சேர வைக்க வேண்டும் என அதிமுகவில் சில தலைவர்கள் முயற்சி செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
விஜயகாந்தும்கூட திமுக - காங்கிரஸ் அணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் தமது நோக்கம் என்று சமீப காலமாகப் பேசி வருகிறார். அந்த அணியைத் தோற்கடிக்க வேண்டுமானால், அதிமுக அணியில் சேருவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என்கின்றனர் அதிமுக தலைவர்கள்.
இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எந்த அளவுக்கு இடம் கொடுப்பார் என்பதும் தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சிக்காக காத்திருப்பதால் தான், அவர் ஏற்கெனவே தமது அணியில் உள்ள இடதுசாரிகள் மற்றும் ம.தி.மு.க. கட்சிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தாமல் உள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறது.
இந் நிலையில் கடந்த மாத இறுதியில் நடந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தேர்தல் கூட்டணி பற்றி பேச்சு நடந்து வருவதாகவும், சில நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் தேர்தல் கூட்டணி பற்றி சேலம் மாநாட்டில் அறிவிப்பு வெளியாகும். குறிப்பாக இந்த முறை தனித்துப் போட்டி என்று முடிவு எடுக்காமல் கூட்டணியில்தான் சேருவார் என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
திமுக- காங்கிரஸ் அணியை தோற்கடிப்பதே நோக்கம் என்று விஜயகாந்த் கூறி வருவதும் கூட்டணியில் சேரலாம் என்பதை மனதில் வைத்துதான் என்றே தொண்டர்கள் கருதுகிறார்கள்.
சேலம் மாநாட்டின் முடிவைப் பொருத்து தமிழகத்தில் அரசியல் அணி சேர்க்கை நடவடிக்கைகள் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...