அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்- ஆறு
அவன் வேலைக்குச் சென்றிருந்தான். என்ன வேலை? சண்டை போடும் வேலை.


.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }அவன் வேலைக்குச் சென்றிருந்தான்.என்ன வேலை? சண்டை போடும் வேலை.
அன்றைய அரசன் ஒருவனுடைய படையில் இவன் கலந்து போரிடச் சென்றிருந்தான். அதற்காகத் தன் காதலியைப் பிரிந்து வந்திருந்தான்.
சண்டை பலமாக நடந்தது. அதில் எதிரிகள் அடி வாங்கி ஓடினார்கள். இவனுடைய படைக்கு வெற்றி.
அப்புறமென்ன? ஊருக்குத் திரும்பவேண்டியதுதானே? காதலியைச் சந்திக்கவேண்டியதுதானே?
அதை இவன் தீர்மானிக்க இயலாதே. போர் என்று அழைத்துவந்த அரசன்தானே ஊருக்குத் திரும்பும் நாளைச் சொல்லவேண்டும்!
அந்த அரசனோ போர் மயக்கத்தில் இருக்கிறான். ‘இது போதாது, இன்னும் போர் வேண்டும்’ என்கிறான். மேலும் மேலும் நாடுகளைப் பிடிக்கும் ஆசையில் இருக்கிறான்.
இதனால், அவனுடைய படையில் உள்ள வீரர்கள் வருந்துகிறார்கள். தங்கள் மனத்துக்குப் பிடித்தவர்களை என்றைக்குச் சந்திப்போமோ என்று ஏங்குகிறார்கள்.
இந்த நேரத்தில் மழைக்காலம் வந்துவிட்டது. இது அந்த இளைஞர்களை மேலும் பதற்றப்படுத்துகிறது.
காரணம், அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது ‘மழைக்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டு வந்திருந்தார்கள். இப்போது, மழைக்காலம் தொடங்கிவிட்டது. அங்கே காத்திருக்கும் காதலி என்ன நினைப்பாளோ! இத்தனை நாளாகக் காதலன் வந்துவிடுவான் என்று காத்திருந்தவள் இப்போது எப்படி வருந்துவாளோ!
இப்படி நினைத்த ஒரு காதலன் தன் நெஞ்சோடு பேசுகிறான்:
‘நெஞ்சே,
முன்பு, வெய்யில் தன் கைகளை நீட்டி ஊரில் இருக்கிற தண்ணீரையெல்லாம் குடித்தது. இதனால், நிலம் வறண்டு, பிளந்து கிடந்தது.
இப்போது, மழைப்பருவம். ஆங்காங்கே மழை பொழிந்து நிலம் அழகாகிவிட்டது. முல்லையும் செங்காந்தளும் இன்னும் பல மலர்களும் ஒன்றாக மலர்கின்றன.
இதனால், எங்கே பார்த்தாலும் பூக்களின் மணம் கமழ்கிறது. அதனால் மகிழ்ந்த வண்டுகள் எங்கும் பாடிக்கொண்டு திரிகின்றன. மலர்கள் அவற்றுக்கு உணவு தருகின்றன.
நம்முடைய அரசன், பெரிய வீரன். அவனுடைய படையில் வீரம் நிறைந்த யானைகள் உண்டு. அவை எதிரி நாட்டு மன்னர்களுடைய மதில் சுவரில் உள்ள கதவுகளைக் குத்தி உடைக்கும். அதனால், அவற்றின் தந்தங்களில் போட்டிருக்கிற பூண்கள் சிதைந்துபோகும்.
கட்டுத்தறியைப் பார்த்தால், அந்த யானைகள் அதைக் காலாலேயே முறித்துவிடும். அப்படிப்பட்ட கர்வமும் சிறப்பும் கொண்ட யானைகள் அவை.
நம் அரசனும் அப்படிதான். எத்தனை போர்களில் வென்றாலும், இன்னும் போர் செய்யும் ஆசை அவனுக்கு உண்டு. நாமும் அதைத்தான் விரும்புகிறோம்.
ஆனால் இப்போது, அரசனுக்குப் போர் ஆசை வேண்டாமே என்று தோன்றுகிறது. அவன் போரை நிறுத்திவிட்டு ஊர் திரும்பினால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கிறோம்.
காரணம், இது மழைக்காலம். ஊரிலிருந்து போருக்காகப் புறப்பட்டபோது, மழை பெய்யத் தொடங்கும்போது வந்துவிடுவதாக நம் காதலியிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம்.
ஆகவே, அவள் மழைக்காகக் காத்திருப்பாள். மழை வந்ததும், நாம் வருகிறோமா என்று பார்ப்பாள். வரவில்லை என்றதும் ஏமாந்துபோவாள். ‘அவன் வருவதாகச் சொன்ன நேரம் வந்துவிட்டது, ஆனால் அவன் இன்னும் வரவில்லையே, அவனுக்கு என்ன ஆயிற்றோ’ என்று எண்ணி ஏங்குவாள். அவளுடைய கண்களில் கண்ணீர் பிறக்கும்.

அந்த அழகியின் கண்களில் கண்ணீர் வரலாமா? போரை நிறுத்திவிட்டு நாம் கிளம்பிச் சென்றால், அவள் துன்பத்தை மறந்து பழையபடி அழகியாகிவிடுவாளே!’
அகநானூறில் மதுரை தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார் எழுதிய பாடல் இது:
‘கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதுஅறத் தெறுதலிற் பயம்கரந்து மாறி
விடுவாய்ப்பட்ட வியன்கண் மாநிலம்
காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலில்
பொறிவரி இனவண்டு ஆர்ப்பப் பலவுடன்
நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற
வெறியேன்றன்றே வீகமழ் கானம்
’எவன்கொல் மற்றுஅவர் நிலை!’ என மயங்கி
இகுபனி உறைக்கும் கண்ணொடு இனைபுஆங்கு
இன்னாது உறைவி தொல்நலம் பெறூஉம்
இது நற்காலம், கண்டிசின் பகைவர்
மதில்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பில்
கந்துகால் ஒசிக்கும் யானை
வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே!’
போருக்காகச் செல்கிறவர்கள் இப்படி அரசன் முகம் பார்த்துக் காத்திருக்கிறார்கள். பணம் சம்பாதிக்கச் செல்கிறவர்கள்?
அவர்கள் எந்த அரசனையும் எதிர்பார்க்க வேண்டியதில்லையே. வேலையைச் செய்துவிட்டுச் சட்டென்று ஊருக்குத் திரும்பிவிடலாமே!
அட, அதெல்லாம் எதற்கு? ஊரிலேயே இருந்துவிடலாமே! காதலியோடு இருப்பதுதானே முக்கியம்!
அது உண்மைதான். ஆனால், கையில் பணம் இருந்தால்தானே மற்றவர்கள் கொஞ்சமாவது மதிப்பார்கள்? அதனால்தான் காதலர்கள் தயங்குகிறார்கள்.
அவர்களுடைய ஒரு மனம், காதலியைப் பிரிந்து சென்று பணம் சேர்க்கச் சொல்கிறது. ‘அப்பதான் அந்தப் பணத்தை வெச்சு நீ பெரிய ஆளாகலாம், அவ வீட்ல உரிமையோட கேட்டு அவளைக் கல்யாணம் செஞ்சுக்கலாம்’ என்கிறது.
இன்னொரு மனம், ‘பொருளா முக்கியம்? அவளோட இங்கயே இருந்துடலாமே’ என்கிறது. இந்த இரண்டையும் யோசித்து அவர்கள் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள், ‘இப்போதைக்கு அவளைப் பிரிஞ்சு போறதுதான் புத்திசாலித்தனம். அவளுக்காகதானே போறேன்!’
இதை அவள் ஏற்கவேண்டுமே!
காதலி எக்காரணம் கொண்டும் காதலனைப் பிரிய விரும்புவதில்லை. ‘நீ இங்கேயே இருந்துடு’ என்றுதான் சொல்கிறாள்.
காதலனுக்கும் அவளிடம் நேருக்கு நேர் விஷயத்தைச் சொல்ல மனம் இல்லை. ஆகவே, தோழியை அழைக்கிறான், ‘என் சார்பா நீ கொஞ்சம் அவகிட்ட பேசறியா?’ என்று கேட்கிறான்.
‘முயற்சி செய்யறேன்’ என்கிறாள் தோழி. காதலியிடம் சென்று பேசுகிறாள்.
பிறகு, காதலன் ஆவலுடன் கேட்கிறான், ‘என்னாச்சு? விஷயத்தைச் சொன்னியா?’
‘அவளுக்கு ஏற்கெனவே நீ ஊருக்குப்போற விஷயம் தெரிஞ்சிருக்கு’ என்கிறாள் தோழி.
‘அப்படியா? யார் சொன்னாங்க?’
‘அது தெரியலை. ஆனா, அவ ரொம்ப வருத்தத்துல இருக்கா?’
‘அப்படியா!’
‘ஆமா, இனிமே நீ அவளை விட்டுட்டுக் கிளம்பறதைப்பத்தி யோசிக்காதே’ என்கிறாள் தோழி. ‘அவ கூந்தலைப் பாரு, வண்டுகள் வந்து தேன் குடிக்கிறமாதிரி மலர்கள் நிறைஞ்ச தலைமுடி, மாந்தளிர்மாதிரி மேனி, தேர்ந்தெடுத்து அணிஞ்ச நகைங்க, குவளை மலர்மாதிரி கண்கள்... ஆனா, அதுலேர்ந்து இப்ப கண்ணீர்த்துளிகள்தான் விழுந்து அவ மார்பை நனைச்சுகிட்டிருக்கு.’
‘அது புரியுது. நானும்தானே அவளைப் பிரிஞ்சு வருத்தப்படுவேன், எல்லாம் எங்க நல்லதுக்காகதானே!’
‘நீ போற பாலை நிலம் சாதாரணமானதா? அங்கே ஆறலைக் கள்வர்கள் இருப்பாங்களாமே! மூங்கில்ல செஞ்ச அம்புகளை வில்லுல வெச்சுத் தாக்கிப் போறவங்க வர்றவங்களையெல்லாம் தாக்குவாங்களாமே!’
‘பணம் வேணும்ன்னா கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேணும்!’
‘இதுவா கொஞ்சம் கஷ்டம்? இத்தனை பயமுறுத்தற ஒரு நிலத்தைத் தாண்டிப்போய் வெறும் பணத்தைச் சம்பாதிக்கப்போறியா? அல்லது, இங்கேயே இருந்து இவளோட அன்பை அனுபவிக்கப்போறியா? நீயே தீர்மானிச்சுக்கோ!’
மதுரைப் புல்லங்கண்ணனார் எழுதிய இந்த அழகான பாடல், அகநானூறில் உள்ளது:
‘வினைவயின் பிரிதல் யாவது வணர்சுரி
வடியாப் பித்தை வன்கண் ஆடவர்
அடியமை பகழி ஆர வாங்கி
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப்
படுமுடை நசைஇப் வாழ்க்கைச் செஞ்செவி
எருவைச் சேவல் ஈண்டு கிளை பயிரும்
வெருவரு கானம் நீந்திப் பொருள்புரிந்து
இறப்ப எண்ணினிர் என்பது சிறப்பக்
கேட்டனள்கொல்லோ தானே தோட்டுஆழ்பு
சுரும்புண ஒலிவரும் இரும்பல் கூந்தல்
அம்மா மேனி ஆயிழைக் குறுமகள்
சுணங்குசூழ் ஆகத்து அணங்கென உருத்த
நல்வரல் இளமுலை நனையப்
பல்லிதழ் உண்கண் பரந்தன பனியே!’
பணத்தின் பின்னே செல்வதா, அல்லது அன்பைப் பார்ப்பதா என்கிற குழப்பம் எல்லாத் தலைமுறைகளிலும் உண்டு. தினசரி வாழ்க்கைக்குப் பணம் தேவை, அதேசமயம் அன்பான மனிதர்கள் இல்லாதபோது அந்தப் பணத்தால் என்ன நிம்மதி கிடைத்துவிடும்... இவற்றில் எது முக்கியம் என்று எப்படித் தீர்மானிப்பது?
ஒரு நாட்டுப்புறக் காதல் ஜோடி. அவர்களுக்கும் இதே பிரச்னைதான். காதலன் சம்பாதிப்பதற்காக வெளியூர் செல்ல நினைக்கிறான். அதை அவளிடம் எப்படிக் கேட்பது என்று தெரியாமல் தவிக்கிறான்.
இதைப் புரிந்துகொண்ட அவள் பாடுகிறாள்:
‘போயிடட்டா என்று சொல்லி
என்னை வந்து கேளாதே,
போயிடடா என்று சொல்லப்
பொருந்தாதே என்மனசு!’
ஆக, வெளியூர் செல்லாமல் அங்கேயே அவள் அருகிலேயே இருக்கவேண்டுமா? அப்புறம் எப்படிப் பணம் சம்பாதிப்பது? நல்லபடியாக வாழ்க்கை நடத்துவது?
கோழி முதலில் வந்ததா, அல்லது முட்டை முதலில் வந்ததா என்பதுமாதிரி கேள்விதான் இது. ‘இருப்பதை வைத்து வாழலாம்’ என்பது ஓரளவுக்குதான் சரிப்படும். அதற்குமேல் ‘கொஞ்சம் சம்பாதிச்சிருக்கலாமே’ என்று யோசிக்கும்போது அதற்கான வயது இல்லாமல் போய்விட்டால்?
அதற்காகச் சம்பாதிக்கும் சக்கரத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பதும் ஆகாது, காதலுக்காக ஏழ்மையில் வாடுவதும் ஆகாது, இரண்டுக்கும் இடையிலான பாதையைத்தான் காதலர்கள் எப்போதும் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் ஏற்படும் குழப்பங்கள்தான் இவை, ஒருவிதத்தில் காதலைச் சுவாரஸ்யமாக்குபவை!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...