அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்- ஏழு

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அங்கே குளிக்கச் சில பெண்கள் சென்றிருந்தார்கள். ஆபத்து உள்ளது என்றாலும், துணிந்து ஆற்றில்
Published on
Updated on
6 min read

ற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அங்கே குளிக்கச் சில பெண்கள் சென்றிருந்தார்கள். ஆபத்து உள்ளது என்றாலும், துணிந்து ஆற்றில் இறங்கினார்கள். ஒருவரை ஒருவர் கேலி செய்து சிரித்தபடி மகிழ்ச்சியாக நீராடினார்கள்.

திடீரென்று, அங்கே ஒரு சத்தம் கேட்டது. ஒருத்தி மட்டும் அலறியபடி தண்ணீரில் மூழ்கிவிட்டாள்.

அவளோடு குளித்துக்கொண்டிருந்த பெண்கள் பதறிப்போனார்கள். ‘காப்பாத்துங்க, காப்பாத்துங்க’ என்று கத்தினார்கள். யாருக்கும் உள்ளே குதித்துக் காப்பாற்றுகின்ற தைரியம் இல்லை.

அப்போது, அங்கே ஓர் இளைஞன் வந்தான். அவன் புன்னை மலர்மாலை சூடியிருந்தான். ஒருத்தி உள்ளே விழுந்துவிட்டாள் என்பதைக் கேட்டவுடன், வெள்ளத்தை நினைத்துக் கொஞ்சமும் பயப்படாமல் சட்டென்று தாவினான். அவளைத் தேடினான்.

சில நிமிடங்களில், அவன் அவளைக் கண்டுபிடித்துவிட்டான். மெல்ல அணைத்தபடி அவளைக் கரைக்குக் கொண்டுவந்தான். சில முதலுதவிகளைச் செய்து காப்பாற்றினான்.

அப்பறமென்ன? ஆபத்திலிருந்து தன்னைக் காத்தவன்மீது அந்தப் பெண்ணுக்குக் காதல் வரும்தானே?

காதல் வந்தது, அவர்கள் ஒன்றாகப் பழக ஆரம்பித்தார்கள்.

இதைப் பார்த்த அந்தப் பெண்ணின் தோழிக்குச் சிறு சந்தேகம். இவன் யாரோ, எந்த நாட்டைச் சேர்ந்தவனோ, இவனோடு இவள் இப்படிப் பழகுவது நல்ல விஷயம்தானா என்று யோசித்தாள்.

விசாரித்தபோது, அவன் ஒரு பெரிய மலை நாட்டின் தலைவன், பண்புள்ள இளைஞன் என்று தெரியவந்தது. தன் தோழி நல்ல இணையைதான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்று அவள் எண்ணிக்கொண்டாள்.

சில நாள் கழித்து, காதலியின் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.

காதலி அதிர்ந்தாள். தன் காதல் விஷயத்தை எப்படிப் பெற்றோரிடம் சொல்வது என்று திகைத்தாள்.

இப்போது, தோழி அவளுக்கு உதவ முன்வந்தாள். தன்னுடைய தாயிடம் சென்று விஷயத்தைச் சொன்னாள், ‘அம்மா, என் சிநேகிதி இருக்காளே, அவ ஒருத்தனைக் காதலிக்கிறா!’

‘என்னடி இப்படிச் சொல்றே?’ என்று அதிர்கிறாள் தோழியின் தாய்

‘கவலைப்படாதேம்மா, என் தோழி ரொம்ப நல்லவ. தப்பான பாதையில நடக்கமாட்டா. அவ மழை பெய்ன்னு சொன்னா மேகம் பொழியும்!’

‘அது சரி, யார் அந்தப் பையன்? எப்படிப்பட்டவன்?’

‘அவனோட மலை நாட்டுல தினை வயலெல்லாம் இருக்கும்மா, அதுல போட்ட அகில் புகை மேலே போய் நிலாவையே மறைச்சுடுமாம்’ என்று வர்ணிக்கிறாள் தோழி. ‘அதனால, சந்திரனே பழுப்பாத் தோணுமாம். தூரத்திலேர்ந்து பார்க்கறவங்களுக்கு மலைமேல கட்டின தேனடைமாதிரி அந்தச் சந்திரன் தெரியுமாம்!’

‘அதெல்லாம் சரி, அவனுக்கும் இவளுக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டது?’

தோழி நடந்ததைச் சொல்கிறாள். அவர்களுடைய காதலை விவரித்து ‘நீதான் எதாவது செஞ்சு அவங்களைச் சேர்த்துவைக்கணும்’ என்கிறாள்.

‘பார்க்கலாம்!’

‘அப்படியெல்லாம் சொல்லாதேம்மா, கண்டிப்பா அவங்களைச் சேர்த்துவைக்கணும்!’

‘இல்லாட்டி?’

‘நமக்குச் சாப்பாடே கிடைக்காது’ என்கிறாள் தோழி. ‘நீயே சொல்லும்மா, ஒருத்தர் ஆபத்துல இருக்கும்போது உதவி செஞ்சவங்களை மறக்கலாமா? அவங்களுக்குப் பதில் உதவி செய்யறதுதானே நம்ம பண்பாடு?’

‘அன்னிக்கு அவ ஆத்துல மூழ்கிப்போக இருந்தப்போ, அவன் காப்பாத்தினான், பதிலுக்கு நாம அவளை அவனுக்குக் கல்யாணம் செஞ்சுகொடுக்கணும். வேற யாருக்காவது அவளைப் பெண் பேசினா, நம்ம ஊர்ச் செடிகள்ல கிழங்கு விளையாது, மலையில தேன் வளராது, கொல்லையில தினையில கதிரே வராது, நாம பட்டினி கிடக்கவேண்டியதுதான்!’

தோழி இப்படி வேதனையோடு சொல்ல, தாய் குறும்போடு கேட்கிறாள், ‘அதெல்லாம் பரவாயில்லை, வேட்டையாடி மாமிசத்தைச் சாப்பிட்டுக்கலாம்!’

‘வேட்டைமட்டும் ஒழுங்கா நடந்துடுமாக்கும்!’ என்கிறாள் தோழி. ‘அம்மா, நல்லா யோசிச்சுப்பாரு, நம்ம ஊரு ஆம்பளைங்க ஒழுங்கா வேட்டையாடறாங்கன்னா அதுக்கு என்ன காரணம்?’

‘தெரியலையே!’

‘நம்ம ஊர்ப் பெண்கள்தான் காரணம்!’

‘அதெப்படி?’

‘ஒரு பொண்ணு நல்ல ஒழுக்கத்தோட, கணவனும் குடும்பமும்தான் தெய்வம்ன்னு நினைச்சு இருந்தா, அவளோட வீட்டுல இருக்கற ஆண்களோட அம்புகள் குறி தப்பாது!’ என்று விளக்குகிறாள் தோழி. ‘ஒருவேளை நீங்க என் சிநேகிதியை இன்னொருத்தருக்குக் கல்யாணம் செஞ்சுகொடுக்கலாம்ன்னு யோசிச்சாக்கூட, உங்க அம்புகளெல்லாம் குறி மாறி எங்கேயோ போயிடும், கிழங்கும் இல்லாம, தேனும் இல்லாம, பயிரும் இல்லாம, மாமிசமும் இல்லாம பட்டினி கிடக்கவேண்டியதுதான்!’

‘சரி, சாபம் கொடுத்தது போதும், என்ன செய்யலாம்ன்னு நான் பார்க்கறேன்’ என்கிறாள் தோழியின் தாய். அவள் தன்னுடைய தோழியிடம் சென்று பேசுகிறாள். காதலியின் தோழியின் தாயின் தோழி... அதாவது, காதலியின் தாய்!

இந்த விஷயம் கேள்விப்பட்டதும் காதலியின் அண்ணன்கள் கோபப்படுகிறார்கள், வில்லையும் அம்பையும் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், சிறிது நேரத்தில் அவர்கள் மனம் மாறுகிறது. ‘ஏதோ சின்னப்பிள்ளைங்க, ஆசைப்பட்டுட்டாங்க, கல்யாணம் செஞ்சுடலாமே’ என்று யோசிக்கிறார்கள்.

தோழி ஆனந்தக் கூத்தாடுகிறாள். தலைவியைவிட, இந்த விஷயத்தில் அதிக மகிழ்ச்சி அவளுக்குதான். நேராக அவளிடம் சென்று, ‘என்னடி! உனக்குக் கல்யாணமாமே, மாப்பிள்ளை அவன்தானாமே!’ என்று குறும்பாகக் கேட்கிறாள்.

அதைக் கேட்டுக் காதலி நாணத்தோடு தலை குனிகிறாள். பிறகு, ‘ஏய், தவத்துலயே ரொம்பச் சிரமமான தவம் என்ன தெரியுமா?’ என்கிறாள்.

‘தெரியலையே, நீதான் சொல்லேன்!’

‘கல்யாணம்ன்னு தீர்மானமானப்புறம், கல்யாணநாள் வர்றவரைக்கும் அந்த வெட்கத்தைப் பொண்ணுங்க பொறுத்துக்கறாங்களே, அதுதான் ரொம்பக் கஷ்டமான தவம்’ என்று ஏங்குகிறாள் அவள், ‘சீக்கிரம் அந்த நாள் வந்தா நல்லாயிருக்கும்!’

‘ஏன்? என்ன அவசரம்?’

‘இப்ப அவனைக் கற்பனையிலதானே அணைக்கவேண்டியிருக்கு!’ என்கிறாள் அந்தக் காதலி, ‘கல்யாணம் ஆனப்புறம், அவனை நிஜமா அணைச்சு ஒண்ணுகூடலாமே!’

அந்தச் சேர்க்கை நிகழும் இடத்தையும் அவள் கற்பனையில் காண்கிறாள், ‘தினைவயல்ல வேங்கை மரங்கள் இருக்கே, அதோட மகரந்தப் பொடிகளெல்லாம் உதிர்ந்து, பாறைகள் நிறைஞ்ச முற்றத்துல கிடக்கும், அதனால அந்த முற்றம்முழுக்கப் பொன்மாதிரி ஒளிவிடும். அங்கேதான் நாங்க நனவுல ஒண்ணுகூடுவோம், அதுக்கப்புறம் கனவுல ஒண்ணுகூடவேண்டிய அவசியம் இருக்காது!’

‘அடியே, அது இருக்கட்டும், உன்னைப் பெண் கேட்டு அவன் வரும்போது, அவனை முன்னேபின்னே தெரியாதவமாதிரி நீ நடிப்பேதானே?’ என்கிறாள் தோழி.

‘ஆமா, அவன்மட்டும் என்னவாம்? என்னை இப்பதான் முதல்வாட்டி பார்க்கிறமாதிரி நல்லா நடிப்பான்!’

‘கவலைப்படாதே, நான் உங்களைக் காட்டிக்கொடுக்கமாட்டேன், எதுவும் தெரியாதமாதிரி நடந்துப்பேன்’ என்று சிரிக்கிறாள் தோழி. ‘அது சரி, கல்யாணப் பொண்ணு தலைகுனிஞ்சு உட்கார்ந்திருக்கணுமே, அவன் அழகைப் பார்க்காம எப்படி இருப்பே?’

’நான் பார்த்தால்தானா? நீ பார்த்துச் சொல்லமாட்டியா?’ என்கிறாள் காதலி. ‘அவனை நேருக்கு நேர் பார்க்கறதைவிட, அவன் அழகை இன்னொருத்தர் வர்ணிச்சுக் கேட்கறதுலதான் அதிக சந்தோஷம்!’

‘அப்படீன்னா சரி, வேற யாராவது வர்ணிக்கட்டும், நாம ரெண்டு பேரும் கேட்போம்’ என்று தோழி சொல்கிறாள். பிறகு, ‘விளையாடினது போதும், உங்க திருமண நாள் வரப்போகுது, இனிமே உனக்குப் பிரிவுத் துயரமே கிடையாது, பழைய அழகோட என்னிக்கும் மகிழ்ச்சியா இரு!’ என்று வாழ்த்துகிறாள்.

மிகச் சுவையான இந்த நாடகம், கலித்தொகையில் வருகிறது. இதனை எழுதியவர் கபிலர். காதலர்கள் முதன்முதலாகச் சந்தித்த காட்சி, அவர்களுக்குள் வரும் நேசம், அதில் தோழிக்கு இருக்கும் அக்கறை, அதனை ஊரார் ஏற்கமாட்டார்களோ என்று அவள் கோபப்படுவது, பின்னர் திருமணம் நிச்சயமானதும் தோழிகள் கற்பனையில் மூழ்கித் தங்களுக்குள் உரையாடுவது என அனைத்தும் இந்தப் பாடலில் அற்புதமாகப் பதிவாகியுள்ளன.

காமர் கடும்புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்,

தாமரைக் கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்

நீள் நாக நறும் தண்தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,

பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம்,

வருமுலை புணர்ந்தன என்பதனால், என் தோழி

அருமழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே.

அவனும்தான், ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்

வான் ஊர் மதியம்வரை சேரின், அவ் வரைத்

‘தேனின் இறால்’ என ஏணி இழைத்திருக்கும்

கான் அகல் நாடன் மகன்.

சிறுகுடியீரே, சிறுகுடியீரே,

வள்ளி கீழ்விழா, வரைமிசைத் தேன் தொடா,

கொல்லை குரல் வாங்கி ஈனா, மலை வாழ்நர்

அல்ல புரிந்து ஒழுகலான்.

காந்தள் கடி கமழும் கண் வாங்கு இரும் சிலம்பின்

வாங்கு அமை மென்தோள் குறவர் மடமகளிர்

தாம் பிழையார்; கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்

தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்

என ஆங்கு,

அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட

என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்.

அவரும் தெரிகணை நோக்கிச் சிலை நோக்கிக் கண் சேந்து

ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி,

‘இருவர்கண் குற்றமும் இல்லையால்’ என்று

தெருமந்து சாய்த்தார் தலை.

தெரிஇழாய்! நீயும் நின் கேளும் புணர,

வரைஉறை தெய்வம் உவப்ப, உவந்து

குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள்

கொண்டு நிலை பாடிக் காண்.

நல்லாய்,

நன்னாள் தலைவரும் எல்லை, நமர் மலைத்

தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்!

புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்

நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?

நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே,

கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்

பண்டு அறியாதீர்போல் படர்கிற்பீர்மன்கொல்லோ!

பண்டு அறியாதீர்போல் படர்ந்தீர் பழம் கேண்மை

கண்டு அறியாதேபோல் கரக்கிற்பென்மன்கொல்லோ!

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்,

கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ?

என்னைமன், நின் கண்ணால் காண்பென்மன் யான்,

நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன!

நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇத்

தகைமிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக,

வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும்

மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்கச்

சேய்உயர் வெற்பனும் வந்தனன்,

பூ எழில் உண்கணும் பொலிக மா இனியே!

அதே கலித்தொகையிலிருந்து இன்னொரு சுவையான காதல் நாடகம். இதனை எழுதியவர் நல்லுருத்திரனார்.

ஓர் இளம் பெண். எருமைக்கன்றை மேய்த்துக்கொண்டு தோட்டத்துக்குச் செல்கிறாள்.

திடீரென்று ஓர் இளைஞன் அவளை வழிமறிக்கிறான். அவள் பிடித்துவைத்திருந்த கன்றின் தாம்புக்கயிறைப் பிடித்து இழுக்கிறான்.

அவள் சீறுகிறாள், ‘யோவ், உனக்கென்ன பைத்தியமா? வழியை விடு.’

‘ம்ஹூம், நான் வழி விடமாட்டேன்’ என்கிறான் அவன்.

‘அப்போ நான் எப்படிப் போறது?’

‘உன்னோட எருமைக்கன்றை யாராவது வழிமறிச்சா அது என்ன செய்யும்?’

‘முட்டித் தள்ளிட்டுப் போகும்!’

‘அந்தமாதிரி நீயும் என்னைப் பிடிச்சுத் தள்ளிட்டுப் போ!’

‘ச்சீ, இதென்ன பேச்சு?’ என்கிறாள் அவள். ‘ஒழுங்கா எனக்கு வழியை விடு.’

‘மாட்டேன். என்ன செய்வே?’

‘நீ சொன்னமாதிரி எருமைக்கன்றுகிட்ட யாராவது வம்பு செஞ்சா அதோட தாய் பார்த்துகிட்டுச் சும்மா நிக்குமா?’ கிண்டலாகச் சிரிக்கிறாள் அவள். ‘யார்டா அது என் கன்னுகிட்ட வம்பு பண்றதுன்னு அது வந்து முட்டும். அதுமாதிரி, நீ இப்ப தொடர்ந்து கலாட்டா செஞ்சா, எங்கம்மா வந்துடுவாங்க!’

‘வரட்டுமே’ என்கிறான் அவன். ‘உங்கம்மா என்ன? இந்த நாட்டு அரசனே வந்தாலும் நான் பயப்படமாட்டேன்.’

‘இப்ப உனக்கு என்னதான் வேணும்?’

‘நீதான் வேணும். உன் அன்புமட்டும் இருந்தாப் போதும், நான் யாரையும் எதிர்த்து நிப்பேன்!’

’யோவ், உனக்கு வெட்கமே கிடையாதா? என்ன புத்தி சொன்னாலும் புரியாதா?’ என்று சலித்துக்கொள்கிறாள் அவள், ’நான் எத்தனை பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசுறே, எவ்ளோ மழை பெஞ்சாலும் ஆடாம அசையாம நிக்குற மாட்டைப்போல முரண்டு பிடிக்கறே! உன் தொல்லை தாங்கலை!’

அடுத்த வரியில்தான் ட்விஸ்ட். இவ்வளவு தூரம் அவனைத் திட்டிவிட்டு அவள் சொல்கிறாள், ‘என்னை இதோட விட்டுடுவியா? இல்லைன்னா, நாளைக்கு நான் பால் கறக்கற பாத்திரத்தோட பசுவைத் தேடி வயலுக்குப் போவேனே, அப்பவும் வந்து இதேமாதிரி ‘தொந்தரவு’ செய்வியா?’

இப்போது சொல்லுங்கள், இங்கே நடந்தது ஈவ் டீஸிங்கா? அல்லது காதல் நாடகமா?

பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம்

தாம்பின் ஒருதலை பற்றினை, ஈங்கு எம்மை

முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா! நீ

என்னையே முற்றாய்? விடு.

விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர்மண்டும்

கடுவய நாகுபோல் நோக்கித் தொடுவாயில்

நீங்கிச் சினவுவாய் மற்று.

நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கதஈற்றாச் சென்று ஆங்கு

வன்கண்ணல் ஆய்வு அரல் ஓம்பு.

யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின்

கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,

நீ அருளி நல்கப் பெறின்.

நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇக்

கனைபெயல் ஏற்றின் தலைசாய்த்து, எனையதூஉம்

மாறு எதிர்கூறி, மயக்குப் படுகுவாய்!

கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும்

வருவையால், நாண் இலி நீ!

கிராமத்துக் காதலர்கள் இருவர். சந்திக்கும் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்.

அவள் சொல்கிறாள், ‘ராத்திரி நேரத்துல எங்க வீட்டு வாசல்ல வந்து கோழிமாதிரி சத்தம் போடு, நான் வந்துடறேன்.’

‘உடனே வருவியா?’

‘ஏன்ய்யா, காளை கனைப்பைக் கேட்டா பசு உடனே எழுந்து வராதா? அந்தமாதிரி நான் ஓடி வந்துடுவேன்.’

சாமம் அறிஞ்சு

தலைவாசலிலே வந்துநின்னு

கோழிபோலக் கூவு ராசா, உன்

குரல்மதித்து நான் வந்திடுவேன்.

கடப்பாலில் வந்துநின்னு

காளை கனைக்குமின்னா,

எங்கிருந்தபோதும் நாகு

எழுந்துவரமாட்டாதோ!

இன்றைக்குப் பெருநகரங்களில் காணும் இடமெல்லாம் காதலர்கள் சந்திக்கும் இடங்களாகவே உள்ளன. இந்தச் சூழலில் இதுபோன்ற தனிமை இடம் தேடும் ‘பழைய’ பாடல்கள் நகைப்புக்கு இடம் தரலாம்.

அதேசமயம் ஒளிந்து ஒளிந்து காதலிப்பதில் ஒரு ரகசிய சுகம் இருக்கிறது என்பார்கள் அந்தப் ‘பழைய’ காதலர்கள். ‘ஹாய் டாட், ஹாய் மாம், மீட் மை பாய்ஃப்ரெண்ட், நாங்க சினிமா போய்ட்டு வர்றோம், அப்புறமாப் பார்க்கலாம்’ என்று சகஜமாக அறிமுகப்படுத்தும் காதலில் வேறு பல சுகங்கள் இருப்பினும், இது சாத்தியப்படாதுதான்!

அந்த ரகசியக் காதலில் இன்னொரு நன்மையும் உண்டு. யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்கிற பயத்தில், அல்லது, அவர்கள் பார்த்து அவமானமாகப் பேசத் தொடங்கிவிட்டார்களே என்ற அவமானத்தில் திருமண ஏற்பாடுகளை விரைவாக்குவார்கள். காதல் வெளிச்சத்துக்கு வரும். தமிழ் இலக்கணப்படி ‘களவு’க் காதல் ‘கற்பு’க் காதலாக மாறும்.

இந்த இரு சொற்களுமே சுவையானவை. ‘களவு’ என்றால், திருட்டு என்ற அர்த்தத்தில்தான் நாம் புரிந்துவைத்திருக்கிறோம். ஊராருக்குத் தெரியாமல் காதலிப்பதும் கிட்டத்தட்ட அந்தமாதிரியான ஒரு விஷயம்தானே!

‘கற்பு’ என்ற சொல்லை உடல்சார்ந்து பார்க்கவேண்டியதில்லை. உறுதி என்ற பொருளில்தான் இது பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். திருமணத்துக்குப்பின் இருவரும் எப்படி வாழவேண்டும் என்கிற நெறிகளைப் பெரியவர்களிடமிருந்து கணவனும் மனைவியும் ‘கற்கிற’ காரணத்தால், அது ‘கற்பு வாழ்க்கை’.

ஏற்கெனவே வெளிச்சத்தில் உள்ள நவீன காதல் இதை எப்படிப் பார்க்கும்? இங்கே ‘களவு’ என்ற பேச்சே இல்லை. ஆகவே, யாரும் தூற்றிப் பேசப்போவதில்லை, அவர்களுக்குக் கவலைப்பட்டுத் திருமணம் நிகழப்போவதில்லை. இந்தச் சூழ்நிலையில் திருமணத்துக்கு எது தூண்டுதலாகும்? அல்லது, ‘இதெல்லாம் பழம்பேச்சு’ என்று கண்மணிகளும் கண்ணன்களும் ’கற்பு’க்கே, அதாவது, திருமணத்துக்கே ’நாட் ஓகே’ என்று சொல்லிவிடுவார்களோ? களவு, கற்பு என்பவை நவீன காதலில் எப்படி மாறுகின்றன என்பதுபற்றிப் புதிய கவிதைகள்தான் எழுதப்படவேண்டும்!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com