சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலவித்தில் ஆல்ஒடுங்கி…

அண்மையில் ரோமன் கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்ஸிஸ் ஒரு அறிவிப்பை செய்தார்.

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 5:08 am

அரவிந்தன் நீலகண்டன்

.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; } 

ண்மையில் ரோமன் கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்ஸிஸ் ஒரு அறிவிப்பை செய்தார். ‘பரிணாமம் என்பதே படைப்பை எதிர்நோக்குகிறது’. (Evolution presupposes Creation). எனவே, பரிணாமம் என்பதும், இறைவன் உயிர்களைப் படைத்தான் என்பதையும், எதிர் எதிர் நிலைபாடுகளாகப் பார்க்க வேண்டியதில்லை என்பது அவரது கருத்து. மத அடிப்படைவாதிகள், பரிணாமமே பொய் என்றும், படைப்பு அறிவியல் என்கிற ஒரு சமாசாரத்தை பள்ளிப் பாடத்திட்டங்களில் நுழைக்க வேண்டும் என்றும் போராடிக்கொண்டிருக்கிற மேற்கத்திய நாடுகளில், இப்படி ஒரு நிலைபாடு நல்ல ஒரு முன்னேற்றம்தான்.

Story image

போப்பின் இந்த நிலைபாட்டுக்கு நூறு ஆண்டுகளுக்கும் முன்னால் சுவாமி விவேகானந்தர் ஒரு கருத்தை சொல்கிறார் - Evolution presupposes involution. அதென்ன இன்வல்யூஷன்? இது, இந்தியத் தத்துவ மரபிலிருந்து வரக்கூடிய ஒரு முக்கியமான பார்வை. சத்காரியவாதம் என்று சொல்வார்கள். காரண-காரியம் என்பதை பொதுவாக ஒரு நேர்கோட்டில் நாம் உருவகிக்கிறோம். பால் என்பது தயிராகிறது. எள்ளில் இருந்து எண்ணெய் வருகிறது. இதிலெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. அது காரியமாக மாறுகிறது. எந்த ஒரு காரியத்துக்கும், காரணம் என்பது கட்டாயமாக இருந்தாக வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் இந்தியாவில், சாங்கிய மரபு இந்தக் காரண - காரிய தொடர்பில், மற்றொரு பிணைப்பை ஏற்படுத்தியது. காரணத்தில் காரியம் ஏற்கெனவே அடங்கியிருக்கிறது. அதாவது, மண்ணில் இருந்து பானை வருகிறதென்றால், பானை ஏற்கெனவே மண்ணில் ஒடுங்கிய ஒரு சாத்தியமாக இருக்கிறது.

எனவே, நாம் பார்க்கும் இந்தப் பரந்து விரிந்த உலகின் உயிரினங்கள் அனைத்தும், உலகில் என்றைக்கோ எப்போதோ தோன்றிய மீச்சிறிய நுண்ணுயிர்களில் சாத்தியங்களாக ஒடுங்கி இருந்திருக்கின்றன. ஆலவித்தில் ஆல் ஒடுங்கி இருப்பதுபோல். எனவே, பரிணாமம் ஒடுங்கிய வித்தின் விரிதல். சார்ல்ஸ் டார்வின் தமது புகழ்பெற்ற ‘உயிரினங்களின் தோற்றம்’ (Origin of Species) நூலை முடிக்கும்போது, கவித்துவ நடையுடன் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் – ‘உயிரை இப்படிப் பார்ப்பதில் ஒரு மகோன்னதம் உள்ளது. வெகுசில வடிவங்களில் அல்லது ஒரு வடிவில் பல்வேறு ஆற்றல்களும் சுவாசமளிக்கப்பட்டு (with its several powers, having been originally breathed into a few forms or into one), இந்தப் புவியீர்ப்பு விசையால் சுற்றிவரும் (மிக நெடிய காலகட்டத்தின்)போது, இன்று நாம் காணும், மிகவும் அழகிய மிகவும் அதிசயமான உயிர்கள் அனைத்தும் பரிணமித்துள்ளன’.

Story image

சத்காரியவாதம் அல்லது ’உள்ளொடுங்கி’ (involution) பின்னர் பரிணமிக்கும் இயக்கம் குறித்த ஒரு பார்வையை, தன்னை அறியாமலேயே டார்வின் வந்தடையும் இடம் இது. 

இந்தியத் தத்துவ மரபில், சாங்கியத்தினை உள்வாங்காமல் வளர்ந்த ஞான மரபுகள் இல்லை என்று சொல்லலாம். வேதாந்தமும் சரி, பௌத்தமும் சரி -  சாங்கியத்துடன் உரையாடியே வளர்ந்தன. இது குறித்து, எழுத்தாளர் ஜெயமோகன் பல இடங்களில் விரிவாகவே எழுதியிருக்கிறார். இப்படி, காரண-காரிய தொடர்பினை ஒற்றைக் கோடாகப் பார்க்காமல், ஒன்றில் மற்றொன்று இருப்பதாகப் பார்த்த பார்வை, தத்துவ அறிதலில் ஒரு பெரிய தாவல் என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு, பரிணாம அறிவியலை நம் நாட்டில் பண்பாட்டு அதிர்ச்சியோ அல்லது நம்பிக்கை பிரச்னையோ இல்லாமல் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதென்றால், அதற்கு இந்தச் சாங்கிய சத்காரியவாத அடிப்படைதான் காரணம்.

சத்காரியவாதம் நமக்குப் பல அறிதல் சாளரங்களைத் திறக்க முடியும். சிக்கலான மனவியல் ஆச்சரியங்களுக்கு நமக்கு தீர்வு சொல்ல முடியும். காரணமும் காரியமும் பல இடங்களில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடப்பதை, நவீன அறிவியல் கண்டு வருகிறது.

பெஞ்சமின் லிபெட் புகழ்பெற்ற மனவியலாளர். இவர் ஒரு முக்கியமான பரிசோதனையைச் செய்தார். ஒரு கடிகார முள். அது சுற்றிக்கொண்டிருக்கும். அதை தாங்கள் விரும்பும் ஏதோ ஒரு நேரத்தில் நிறுத்த வேண்டும். கடிகாரத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதனை நிறுத்தும் பொத்தானை அமுக்க வேண்டும். ‘இப்போது நிறுத்த வேண்டும்’ என்று முடிவெடுக்கும் தருணத்தை, இந்தப் பரிசோதனையில் பங்கு பெறுவோர் குறித்துக்கொள்வார்கள். கூடவே, இந்தப் பரிசோதனையில் ஈடுபடுகிறவர்களின் மூளையில் ஏற்படும் readiness potential என்கிற ஒரு சமாசாரத்தையும் அதே நேரத்தில் கருவிகளில் பதிவு செய்வார்கள். அதாவது ஒரு செயலை செய்ய முடிவு எடுக்கும்போது, மூளையில் ‘மோட்டார் கார்டெக்ஸ்’ (motor cortex) பகுதியில், மின் அழுத்தங்கள் சூல் கொள்ள ஆரம்பிக்கும். இதைப் பதிவு செய்ய முடியும். இதையே Readiness potential என்று கூறுவார்கள்.

Story image

இப்போது, இந்த readiness potential என்பது ஒருவர் பொத்தானை அழுத்த வேண்டும் என்கிற முடிவு செய்த பின்னர் ஏற்பட வேண்டும். அதாவது, செயல்பட வேண்டும் என்று ஒருவர் எடுக்கிற முடிவு என்பது, காரணம். இந்தச் செயல்படுத்தும் மின்னழுத்தம் - readiness potential - மூளையின் மோட்டார் கார்டெக்ஸ் பகுதியில் ஏற்படுவது, காரியம். ஆனால், லிபெட் கண்டுபிடித்தது என்னவென்றால், ஒரு மனிதர் தான் தானாக ஒரு செயலைச் செய்ய முடிவு எடுத்ததாக உணரும் தருணத்துக்கு முன்னரே இந்த readiness potential உருவாக ஆரம்பித்துவிடுகிறது. Free will என்கிற தன்னிச்சையான செயல்படும் தன்மை மனிதனுக்கு இருக்கிறதா இல்லையா என்பது மேற்கத்திய தத்துவ உலகின் ஆழமான விவாதங்களில் ஒன்று. இதற்கு, மூளை நரம்பியல் ஆராய்ச்சி முதல் சட்ட – தார்மிகப் பிரச்னைகள் வரை நீளக்கூடிய ஒரு விஷயம்.

இந்தப் பரிசோதனையின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களும் இன்று உருவாகியுள்ளன. இந்தப் பரிசோதனையின் முடிவுகள், கேள்விக்குள்ளாக்கவும் படுகின்றன. குறிப்பாக, தத்துவவாதியான டேனியல் டெனட், லிபெட்டின் பரிசோதனைகளைக் கூர்மையாக விமரிசிப்பவர்.

Story image

ஆனால், இந்தத் தத்துவப் பிரச்னைகளின் அடிப்படையில் இருப்பது என்ன என்று பாருங்கள். ஏதாவது ஒன்றை (மூளையின் செயல்பாடு அல்லது தன்னிச்சையான எண்ணம்) காரணமாகவும், மற்றொன்றை காரியமாகவும் எடுப்பதால் ஏற்படும் பிரச்னை. ஆனால், இங்கே சத்காரியவாதத்தைப் பொருத்தினால், இந்தப் பிரச்னை மறைந்துவிடுவதைப் பார்க்கலாம். இருமை என்பதில் இருந்து இருமை பார்வை உலகை எப்படிப் பார்க்கிறது? இரண்டு விஷயங்களை எடுத்துக்கொண்டால், அவை – அந்த இரு விஷயங்கள் தனித்தனியானவை – எதிர் எதிரானவை – ஒரே ஒரு விதத்தில் மட்டும்தான் இணைந்திருக்க முடிந்தவை. காரணம், காரியத்தை உருவாக்குகிறது. எது காரணம், எது காரியம் என்பதைக் கண்டுபிடித்தால் முடிந்தது விஷயம். இந்தப் பார்வையிலிருந்து நம்மை மேலும் ஆழமான ஒரு பார்வைக்கு நகர்த்துகிறது சத்காரியவாதம். காரணத்தில் ஏற்கெனவே காரியம் என்பது அடங்கியிருக்கிறது. ஆலமரம், ஆலவிதையில் அடங்கியிருப்பதைப்போல். ஒவ்வொரு காரணத்திலும் காரியங்கள் அடங்கியிருக்கின்றன. நம் அறிதல் என்பதே அந்தக் காரியங்களை வெளிக்கொண்டு வருவதுதான்.

வேதாந்தம், சத்காரியவாதத்தை தனதாக்கும்போது, மற்றொரு அழகைச் சேர்க்கிறது. உண்மையில், நாமரூப பேதங்கள் மட்டுமே ஏற்படுகின்றன. இங்கு காரணம், காரியமாகவே மாறிவிடுவதில்லை. கயிற்றரவு என்பது தோற்றம் மட்டுமே. கயிறு, பாம்பாக மாறிவிடவில்லை. டேவிட் போம் போன்ற இயற்பியலாளர்களின் பிரபஞ்ச பார்வை, வேதாந்த சத்காரிய பார்வைக்கு அருகில் வருவது. காலம் என்பது நேர்க்கோட்டில் பயணிப்பதில்லை என்பதை கணக்கில் எடுத்தால், மிகவும் நுண்ணிய பரிணாமங்களில் வேதாந்திகளின் சத்காரியவாதம் முக்கியமுடையதாகிறது.

Story image

சத்காரியவாதம் சாங்கியம், மானுட அறிதலுக்கு அளித்த ஒரு கூரிய கருவி. நம் கல்வி அமைப்பில், மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய அறிதல் கருவிகள் சத்காரியவாதம், சப்தபங்கி ஆகிய அறிதல் முறைகள். பௌதீக அறிவியல் மட்டுமல்ல, சமூகவியல், மனவியல் இவை அனைத்திலும் பார்வை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தேடுதலுக்கான புதிய புலங்களைக் கண்டடைய இயலும். காவிமயத்தை கடுமையாக எதிர்க்கும் இந்திய இடதுசாரிகளுக்குமேகூட இந்தப் பார்வை மாற்றத்தால், உண்மையான பலன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. (ஒருவேளை அதனால்தான் அவர்கள் எதிர்க்கிறார்களோ?).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.