ஜக்கிவாசுதேவின் யோகாவும் காந்தியின் ராட்டையும்
‘யோகா’ மூலமாக மதம் உள்ளே புகுத்தப்படுகிறது என்று குரல்கள் எழுந்துள்ளன. மற்றொரு பக்கம் ‘யோகா’ என்பது ஒரு தொழில்நுட்பம் – மனம் சார்ந்த தொழில்நுட்பம் அவ்வளவுதான்,


‘யோகா’ மூலமாக மதம் உள்ளே புகுத்தப்படுகிறது என்று குரல்கள் எழுந்துள்ளன. மற்றொரு பக்கம் ‘யோகா’ என்பது ஒரு தொழில்நுட்பம் – மனம் சார்ந்த தொழில்நுட்பம் அவ்வளவுதான், அதற்கு மதமே கிடையாது என்று மறுகுரல்களும் எழுகின்றன. உதாரணமாக, சமீபகாலங்களில் பிரபலமாகியுள்ள கார்ப்பரேட் குருவான ஜக்கி வாசுதேவ் கூறுகிறார் - ‘புவியீர்ப்பைக் கண்டுபிடித்த நியூட்டன் வாழ்ந்த பண்பாடு கிறிஸ்தவப் பண்பாடு என்பதால், புவியீர்ப்பை கிறிஸ்தவம் என்று சொல்வதுபோலத்தான் யோகா என்பதை இந்து என்று சொல்வதும்’.

இந்த நிலைப்பாடு எந்த அளவு சரி?
‘யோகா’ ஒரு தொழில்நுட்பமா என்பதற்குள் போவதற்கு முன்னால், ஒரு வாதத்துக்கு அதை தொழில்நுட்பம் என்றே எடுத்துக்கொள்வோம். தொழில்நுட்பங்கள், அதை பயன்படுத்துவோரின் நம்பிக்கை குறித்து கவலை கொள்ளாதவை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், என்ன தொழில்நுட்பத்தை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்பது உங்கள் மதிப்பீடுகளைப் பொறுத்த விஷயமாகும். எந்த வகையான தொழில்நுட்பத்தை நீங்கள் வடிவமைக்கிறீர்கள் என்பதும், உங்கள் ஆழமான மதிப்பீடுகளைச் சார்ந்த ஒரு விஷயமாகும். மதிப்பீடு என்பது உங்கள் அக ஆன்மிக உலகினைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஒரு விஷயமாகும்.
இதை தெள்ளத்தெளிவாக உணர்ந்திருந்தவர் காந்தி.
தொழில்நுட்பம் குறித்த காந்தியின் கருத்துகளை இன்றைக்குப் படிக்கும் ஒருவருக்கு, அவர் தொழில்நுட்ப விரோதி என்றுகூட தோன்றலாம். ஆனால் அன்றைய அறிவியல், காந்தியின் தொழில்நுட்பப் பார்வைக்கு ஏற்ப வளரவில்லை என்பதுதான் உண்மை.

காந்தியிடமே, அவர் தொழில்நுட்பத்துக்கு எதிரானவரா என கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதில் முக்கியமானது - ‘மனித உடலே ஒரு அருமையான இயந்திர அமைப்பு என்கிறபோது, நான் எப்படி இயந்திரங்களுக்கு எதிரானவனாக இருக்க முடியும்? ராட்டையும் ஒரு இயந்திரம்தான். ஏன், பல்குத்தும் குச்சியும்கூட ஒரு இயந்திரம்தான்’.
இங்கு அவர் கூறுவது, மனித உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கும் பார்வை அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். அவருக்கு வாய்த்த மொழி, அவரது கோட்பாட்டுக்கு ஏற்ப அமைந்திடவில்லை. அவர் ஆதரிக்கும் இயந்திரங்கள், முதலீட்டையும் ஆற்றலையும் அதிகமாகக் கோராத எளிமையான உயிர்த்துவம் கொண்ட இயந்திரங்களை. குவித்தன்மையற்ற (decentralized) தொழில்நுட்பத்தை காந்தி முன்வைக்கிறார். மேலும், அனைத்து பண்பாடுகளின் மீதும் மேற்கத்திய உலகம் சுமத்திய தொழில்நுட்ப ஒற்றைத்தன்மையைத் தாண்டி அவரால் சிந்திக்க முடிந்தது. அவர் தொழில்நுட்பப் பன்மையை (technological pluralism) கோரினார். சுற்றுச்சூழல், அடிப்படை மானுடத் தேவை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு வடிவமைக்கப்படும் தொழில்நுட்பத்தை அவர் பேசினார். எனவேதான், அத்தகைய கட்டுமான தொழில்நுட்பத்தை முன்வைத்த லாரிபேக்கரை அவரால் ஊக்குவிக்க முடிந்தது.
இந்தத் தொழில்நுட்பப் பன்மைக்கும், குவித்தன்மையற்ற தொழில்நுட்பத்துக்கும் அடிப்படையான ஆன்மிக மதிப்பீடுகள் உண்டு. ஜோசப் கர்னீலியஸ் குமரப்பா முதல் ஷுமேக்கர் வரை அதை விரிவாகப் பேசியிருக்கிறார்கள். நியூட்டானிய மதிப்பீடுகள் சார்ந்த தொழில்நுட்பத்தில் இருந்து மாறுபட்டவை அவை என்பதை ப்ரிட்ஜாப் கேப்ரா பேசுகிறார். உடல் உழைப்பு என்பதே தெய்வசாபம் என்கிற மனமண்டலத்தில் இருந்து உருவாகும் தொழில்நுட்பங்களுக்கும்; உடல் உழைப்பு என்பது முக்திக்கான சாதனை என்கிற அறிதலில் இருந்து மலரும் தொழில்நுட்பங்களுக்கும் வேறுபாடு உண்டு.
ஆக, ஒரு தொழில்நுட்பம் உருவாக்கப்படுவதிலும் சரி, அதை பயன்படுத்துவதிலும் சரி, மதிப்பீடுகளுக்கு ஆதாரமான மைய இடம் உண்டு. அது, மதிப்பீடுகளற்ற வெற்றிடத்தில் உருவாகக்கூடியதல்ல.
யோகம் என்பது ஒரு தொழில்நுட்பம் அல்ல. அதை ஒரு அக தொழில்நுட்பமாக குறுக்கக்கூடியவர்கள் ஒரு உண்மையை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அது ஒரு அக அறிதல் முறை. எந்த அறிதல் முறையையும் போல யோகமும் ஒரு பிரபஞ்ச தரிசனத்தை முன்வைக்கிறது. அந்த தரிசனம் வேதாந்தம் பௌத்தம் ஆகியவற்றுக்கு பொருந்துவது போல வேறுசில உலகப்பார்வைகளுக்கு பொருந்தாது.
இதற்கான உதாரணமாக பரிணாம அறிவியலையே எடுத்துக்கொள்ளலாம். பரிணாமம் ஒரு அறிவியலா என்று கேட்டால், நிச்சயமாக அறிவியல்தான். ஆனால், அதற்கு பாகனிய வேர்கள் உள்ளன. அனாக்ஸிமாண்டர் (Anaximander - கிமு 5-ம் நூற்றாண்டு) போன்ற கிரேக்க பாகனிய தத்துவஞானிகள் பரிணாமவாதிகள். சாங்கிய தரிசனம், பரிணாமத்தை பாரதிய சமயங்கள் அனைத்திலும் முக்கிய ஒரு அம்சமாக மாற்றியது. மத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவருக்கோ இஸ்லாமியருக்கோ பரிணாம அறிவியல் கஷ்டம் அளிக்கலாம்.
புகழ்பெற்ற உயிரியலாளர் JBS ஹால்டேன் ஒருமுறை கூறினார் – ‘டார்வின், மேற்கத்திய நாடுகளை இந்து மதத்துக்கு மதம் மாற்றிவிட்டார் என என் மனைவி தெளிவாகக் கூறுவாள். இது ஒரு மிகைப்படுத்தல் என்றாலும், உண்மைக்கு அருகாமையில் உள்ள ஒரு விஷயம்தான்’.

ஆபிரகாமிய அடிப்படைவாதத்திலோ பரிணாமத்துக்கு இடமில்லை. ஆகவே, பரிணாம அறிவியல் என்பது அறிவியல் என்பதுடன், நிச்சயமாக படைப்புவாத மதநம்பிக்கைக்கு எதிரானது. அதே நேரத்தில், பாகனீய உலகப்பார்வைக்கு அருகாமையிலும் உள்ளது. ஒரு இந்து வேதாந்தி அல்லது ஒரு கிரேக்க பாகன் (pagan) அல்லது அலெக்ஸாண்ட்ரியாவைச் சார்ந்த நியோ-பிளேட்டோனியவாதி, நிச்சயமாக பரிணாம அறிவியலுடன் இணக்கம் காண முடியும்.
அதற்காக, பரிணாம அறிவியலை நாம் பள்ளிக்கூடங்களில் இருந்து ஒழித்துவிட முடியுமா? அல்லது அதை மதச்சார்பின்மைக்கு எதிரானது என கூறிவிட முடியுமா?
யோகாவையும் நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும். அது ஒரு தொழில்நுட்பம் என்று ஆன்மிக வெற்றிடத்தில் அதை வைக்க முடியாது. அது என் மத நம்பிக்கைக்கு எதிரானது; எனவே, கல்விச்சாலைகளில் அதை அனுமதிக்கக்கூடாது என்று கூறவும் முடியாது. யோகம், பாரதப் பண்பாட்டில் வேர் கொண்ட ஓர் ஆன்மிக உலகப் பார்வையை அளிக்கிறது. வெறும் தனி மனித உடல், மனம் ஆகியவற்றைத் தாண்டி அது நீட்சி கொண்டதாகவும் இருக்கிறது.
காந்தியின் தொழில்நுட்பப் பார்வைக்கு அவரது அத்வைத ஆன்மிகம் அடிப்படையாக இருந்தது. பேராசிரியர் முல்போர்ட் சிப்லே (Mulford Sibley), க்வாக்கர் எனும் கிறிஸ்தவ ஆன்மிகக் குழுமத்தைச் சார்ந்தவர். அமைதிப் போராளி. தொழில்நுட்பம் குறித்த காந்தியின் சிந்தனைகளைப் பேசும் அவர், காந்தியின் அத்வைத ஆன்மிகத்தில் அவற்றின் வேர்கள் இருப்பதைச் சுட்டுகிறார் – ‘ஆத்ம தன்னுணர்வு நம்மை அனைத்து உயிர்களுடனும் ஒன்ற வைக்கிறது. அது நம்மை இயற்கையுடனான ஒருமையுணர்வை உணரவைக்கிறது. இதுவே காந்தியின் தொழில்நுட்பம் குறித்த பார்வையை உருவாக்குகிறது’.

காந்திய மேற்கோள்களில் இருந்தே இதை நாம் சுட்டமுடியும் என்றாலும், ஒரு கிறிஸ்தவ க்வாக்கர் பேராசிரியர் இதை உணர்ந்திருக்கிறார் என்பதை ஏன் இங்கே சொல்லவேண்டி உள்ளது? ஒரு குறிப்பிட்ட ஆன்மிகப் பண்பாடு சார்ந்து உருவான ஒரு அம்சத்தை, மதம் கடந்த ஆன்மிக மனிதநேயத்துடன் அரவணைப்பதே மானுடத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சி என்பதைப் காட்டத்தான்.
இன்று, காந்திய தொழில்நுட்பம் என்பது நிச்சயமாக வளங்குன்றா வளர்ச்சியில் (sustainable development) மைய இடம் வகிக்கிறது. ஆனால், அது பண்பாட்டு வெற்றிடத்திலோ அல்லது தற்செயலாக பூகோளம் சார்ந்தோ உருவாகவில்லை.
யோகாவுக்கும் இது பொருந்தும்.
தொழில்நுட்பம், அறிதல் முறை, மெய்யியல் என்பவற்றுக்கான தொடர்பை கார்ப்பரேட் ஆன்மிக வியாபாரிகளைவிட, குஜராத்தில் இருந்து வரும் அரசியல் தலைவர்களான காந்தியும் மோடியும் ஆழமாகவே அறிந்திருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. ஐயமிருந்தால், பின்வரும் விஷயத்தைக் கவனியுங்கள்.

இன்றைய சர்வதேச யோகா தினம், ஐக்கிய நாடுகள் சபையில் யோகாவைக் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதன் விளைவாக வந்தது. அந்த உரையில் பாரதப் பிரதமர் கூறினார் – ‘யோகாவை உடல் சார்ந்த ஒரு பயிற்சியாக மட்டும் கருதக்கூடாது. அது உலகுடனும் இயற்கையுடனும் இணைந்து விரிவடைவதற்கான ஒரு வழி. அது நம் வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். நம்மில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது, புவியின் தட்பவெப்ப மாற்றங்களுக்கு எதிரான நம் முயற்சிகளுக்கு உதவும்’.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...