சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தீட்சிதர், கோகுல்ராஜ், நியாண்டர்தல் டிஎன்ஏ

இந்த வாரம் தமிழ்நாட்டில் இரண்டு கொடு மரணங்கள் நிகழ்ந்தன. கும்பகோணத்தில் கோயில் குருக்களான மணிகண்டன் தீட்சிதர் ஒரு நிச்சயதார்த்த

News image
Updated On :27 ஜூன் 2015, 11:44 am

அரவிந்தன் நீலகண்டன்

.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }
ந்த வாரம் தமிழ்நாட்டில் இரண்டு கொடு மரணங்கள் நிகழ்ந்தன. கும்பகோணத்தில் கோயில் குருக்களான மணிகண்டன் தீட்சிதர் ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை என கூறிய காரணத்தால் அடித்து உதைக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரும் பாமக கட்சியைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. அண்மையில் சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த ரவுடிகளால் தன் பேத்தியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட காரணத்துக்காக ஒரு பிராமண பெரியவர் தலையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.

இதற்கிடையே நாமக்கல்லில் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் என்பவர் தன் காதலியை சந்திக்க திருச்செங்கோடு வந்துவிட்டு திரும்பும் போது நான்கு பேரால் பின் தொடரப்பட்டிருக்கிறார். அதன் பின்னர்  கொலை செய்யப்பட்ட அவரது பிணம் ரயில்வே தண்டவாளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் தமிழ்நாட்டை உலுக்கிய இளவரசன் ‘தற்கொலை’ போலவே இந்த கொலையும் நடந்திருக்கிறது. கோகுல்ராஜும் தலித் இளைஞர்.

இந்த கொலைகளில் உள்ள விஷயங்கள் தமிழ்நாட்டின் விசித்திர விஷமயமான பொதுபுத்தி ஒன்றை காட்டுகின்றன. இந்த கொலைகளில் ஒன்றுக்கு பொங்கி எழும் போராளிகள் மற்றதற்கு பொங்கி எழ மாட்டார்கள். ஆனால் இந்த இரண்டு கொலைகளையும் செய்த மனநிலை – அல்லது மனநோய் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதான்.

தமிழ்நாட்டின் பொதுபுத்திக்கு பிராம்மணர்களையும் தலித்துகளையும் ‘அன்னியர்களாக’ பார்க்க கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. பிராம்மணர்கள் ‘ஆரியர்கள்’, ‘கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆடு மாடு மேய்க்கும் கும்பல்’; தலித்துகளோ ஈ.வெ.ராமசாமியின் வார்த்தைகளில் ‘நம்மில் கீழ்த்தர மக்கள்’ ‘நம்’ ‘சமுதாய எதிரிகள்’. ஈ.வெ.ராமசாமியின் இந்த மனநிலை ஒருவிதத்தில் தமிழ்நாட்டைப் பீடித்திருக்கும் திராவிட கட்சிகளின் மனநிலைதான். என்னதான் தன்னை திராவிட கட்சி அல்ல என்று பாமக சொன்னாலும் தலித் வெறுப்பு என்பது ஒரு அரசியல் விஷயமாக ஈ.வெ.ராமசாமியிடமிருந்து அதற்கு வந்துவிடும். என்னதான் தலித் அரசியல் என விசிக பேசினாலும், பாபா சாகேப் அம்பேத்கரிடம் இல்லாத, இனரீதியிலான பிராமண வெறுப்பு என்பது விசிகவிடம் வந்துவிடும்.

பிராமணர்களும் சரி தலித்துகளும் சரி எவ்விதத்திலும் அன்னியர் அல்ல என்பதும் அவர்கள் அன்னியப்பட்டு நிற்கும் சூழ்நிலை இந்த சமுதாய ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதாக இருக்கமுடியாது என்பதையும் கூற வேண்டிய நிலையில் இருப்பவை இந்துத்துவ இயக்கங்களாகத்தான் இருக்கமுடியும். தர்க்கரீதியாக அப்படித்தான் தோன்றும். ஆனால் அதிசயமான விஷயம் என்னவென்றால் அண்மைகாலங்களில் திராவிட கட்சிகளுக்கும் பாமக போன்ற சாதி கட்சிகளுக்கும் இணையாக சாதியத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு கருத்தியலை தமிழ்நாட்டு இந்துத்துவ இயக்கங்கள் முன்வைத்திருக்கின்றன. சாதி மறுப்பு திருமணங்களை எதிர்ப்பது, சாதி ரீதியிலான அமைப்புகளை ஆதரிப்பது ஆகியவற்றை வெளிப்படையாக செய்யும் ஒரு போக்கினை நாம் காண்கிறோம்.

சாதி என்பது ஒரு சமுதாய யதார்த்தம். அதன் விளைவாக சமுதாயம் பொருளாதார ரீதியில் தொழில் ரீதியில் பிளவுண்டு தேங்கி கிடக்கிறது. இதன் விளைவுகள் சில தொழில்முனைவோர் சில குறிப்பிட்ட சமுதாய தீவுகளாக தங்கள் தொழில்களை செய்கிறார்கள். சேமிப்புகள் சாதி சார்ந்து நடைபெறுகின்றன. இவை சாதியை ‘சமுதாய மூலதனமாக’ காட்ட பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்து ‘கலப்பு திருமணங்கள்’ எதிர்ப்பு நியாயப்படுத்தப்படுகிறது. இறுதியாக இந்துத்துவம் என்பதே ஏதோ சாதி என்கிற கட்டமைப்பில்தான் வாழ்கிறது என்கிற ஒரு எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இளவரசன், கோகுல்ராஜ் மரணங்களுக்கு ஒரு வலுவான கண்டனத்தை இந்துத்துவ பார்வையில் வைக்க இந்துத்துவ இயக்கங்கள் முன்வருவதில்லை. அப்படியே அரிதாக அறிக்கை வந்தாலும் கூட ஏதோ ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ போன்ற அறிக்கைகள். இணையத்தில் வலம் வரும் பல நியோ-இந்துத்துவர்கள் சாதி அமைப்புக்கு மரபணுவியல் சார்ந்தும் யூஜெனிக்ஸ் என்கிற போலி அறிவியல் சார்ந்தும் விளக்கம் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு சாதியையும் ஒவ்வொரு உயிரின வகையாக (species) பார்க்கும் விதத்தையும் காண முடிகிறது. ‘குலதூய்மை’ ‘ரத்த தூய்மை’ என்றெல்லாம் முழக்கங்கள் எழுவதையும் காணலாம். ஒரு மேல்சாதி சங்க பத்திரிகை தன்னுடைய அட்டை படத்திலேயே தண்ணீரும் எண்ணெயும் ஒன்றாகாமல் நிற்கும் ஒரு படத்தை போட்டு சாதி தாண்டிய திருமணங்களை மறுத்திருந்தது. மறுபக்கம் இதை மூலதனமாக வைத்து இந்து மத வெறுப்பை கக்கும் அமைப்புகள். இந்த சீழ்நிலையில்தான் நாம் சில அடிப்படைகளை பார்க்க வேண்டி உள்ளது.    

1923 இல் விநாயக தாமோதர சாவர்க்கர் எழுதிய ‘இந்துத்துவத்தின் அடிப்படைகள்’ என்பதுதான் இந்துத்துவத்தின் முதன்மை வரையறை நூல். அன்றைய காலகட்டத்தில் சாதிக்குள்தான் திருமணங்கள் நடக்க வேண்டும் என்று வலியுறுத்திய சாதியவாதிகள் அதுதான் இந்துமதம் என்றே கூறிவந்தனர். இந்த சூழ்நிலையில் சாவர்க்கர் எழுதினார்: கலப்பில்லாத சாதி என்று எதுவுமே கிடையாது. நீங்கள் என்னதான் அக-திருமண முறைகளுக்காக தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றினாலும் சமூக கட்டுப்பாடுகள் விதித்தாலும் பாலின ஈர்ப்பு என்பது அவற்றை விட அதிக சக்தி வாய்ந்ததாக அமையும். எனவே சாவர்க்கரை பொறுத்தவரையில் சாதிக்குள்ளேயான அக-திருமண முறை என்பது இயற்கைக்கு எதிரானது. சாவர்க்கர் இதை தெளிவாக கூறுகிறார் – குலத்தூய்மை என்பதெல்லாம் கற்பிதங்கள் மட்டும்தான். பொய்யான கற்பிதங்கள். ‘சமபந்தி என்ன… சாதிகளுக்கு இடையேயான திருமணங்களே ஆதரிக்கப்பட வேண்டும்.’ என்கிறார் சாவர்க்கர். பிராந்தியங்களுக்கிடையே சாதிகளுக்கு இடையே எங்கெல்லாம் திருமணங்கள் நடைபெறுவதில்லையோ அங்கெல்லாம் அவை நடத்தப்படவேண்டும். எங்கே அவை ஏற்கனவே நடைபெறுகின்றனவோ  அத்தகைய திருமணங்கள் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இறுதியாக ஒரு எச்சரிக்கையை சாவர்க்கர் கூறுகிறார், எந்த கரம் இத்தகைய திருமணங்களை எதிர்க்கிறதோ அது தற்கொலை செய்து கொள்ளும் கரம். ஆம் சாதியத்தைத் தாண்டி செய்யப்படும் திருமணங்களை எதிர்க்கும் போக்கு சமுதாய தற்கொலையே அன்றி வேறில்லை. 

Story image

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி வந்த போது மற்றொரு செய்தி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலிருந்து மானுடத்தை வந்தடைந்தது. நம் மானுட பரிணாம வளர்ச்சியின் மற்றொரு கிளையான நியாண்டர்தல் மனிதர்களுடன் நம் மானுட இனத்தவர் உறவுகள் கொண்டிருந்தனர். ஆப்பிரிக்கரல்லாத – அதாவது ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேவந்த- மானுடரனைவரின் ஜீனோம்களிலும் 1-3 சதவிகிதம் நியாண்டர்தல் கலப்பு உள்ளது. ஆனால் தற்போது ரோமேனியாவில் கிடைத்த ஒரு 40,000 ஆண்டுகள் பழமையான மானுட தாடை எலும்பு அம்மனிதன் 4-6 தலைமுறை முன்னர் நியாண்டர்தல் முன்னோர் கொண்டவன் என காட்டுகிறது.

இந்நிலையில் எவர் தன்னை தூய இனத்தவன் என உரிமை கொண்டாட முடியும்? அதே போல நம்முடைய பண்பாடும் பல ஆற்றொழுக்கான கலப்புகளை கொண்டதுதான். நம்முடைய ஜாதகம் பார்க்கும் பழக்கம் நமக்கு கிரேக்கர்களிடமிருந்து வந்திருக்கலாம். வேத காலத்தில் வானவியல் இருந்தது – வேதத்தின் அங்கமாக ஜோதிஷம் என கூறப்பட்டது அதுதான். ஆனால் கிரேக்கர்களிடமிருந்துதான் நமக்கு விண்மீன்களால், கிரகங்கள் கோள்களால் நம் விதி நிர்ணயிக்கப்படுகிறது என்கிற நம்பிக்கையும் அத்தகைய ஒரு அறிதல் முறையும் வந்தது. இதை சுவாமி விவேகானந்தரிலிருந்து வானவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் வரை கூறி வருகின்றனர். நம்முடைய மிக பழமையான தொன்மங்களில் சிலவற்றின் ஆக பழமையான வடிவங்கள் எகிப்திய தொன்மங்களிலிருந்து நம்மை வந்தடைந்தவை. அது போலவே நம்முடைய தொன்மங்கள் பிற பண்பாடுகளுக்கு சென்றிருக்கின்றன. ஆனால் பாரத பண்பாட்டின் தனித்தன்மை என்பது இந்த பன்மைகளையெல்லாம் அழித்துவிடாமல் காப்பாற்றியதுதான். இங்குள்ள அனைத்து சமயங்களும் அவற்றின் அத்தனை பன்மைத்தன்மைகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு சமய பிரிவும் தன்னை ‘தூய’ ஒன்றாக கருத முடியாது.

ஆக இனமோ பண்பாடோ சாதியோ குலமோ நாம் அனைவருமே கலப்பினத்தவர்தான். சாவர்க்கரிடமே மீண்டும் வருவோம். அவர் கூறுகிறார்:

ஒரு மனிதன் பெருமையாக எதையாவது சொல்லிக் கொள்ளலாம் என்றால் அனைத்து மானுடத்தின் ரத்தமும் ஒருவரது ரத்தக்குழாய்களில் ஓடுகின்றன என்பதைத்தான். வடதுருவம் முதல் தென்துருவம் வரை மானுடத்தின் அடிப்படை ஒருமை என்பதுதான் சாஸ்வதமான உண்மை. மற்றபடி அனைத்து பிரிவுகளும் சார்புடையவைதாம்.

Story image

நாம் அனைவருமே இந்த மண்ணின் மைந்தர்கள்தாம். நாம் அனைவருமே (ஆப்பிரிக்காவிலிருந்து) வந்தேறிகள்தாம். மொழித்தூய்மை இனத்தூய்மை குலத்தூய்மை சாதி தூய்மை பண்பாட்டுத் தூய்மை பேசுகிறவர்கள் அறியாமையில் உழல்கிறவர்கள். ஆதிக்கங்களை எதிர்க்கும் போது கலப்புகளை ஆதரிப்பது இந்துத்துவத்தின் அடிப்படை அம்சம். இதை சாவர்க்கர் எழுதிய போது மானுடமே இனவாத இருளில் இருந்தது. 1920கள் ஏன் 40களில் கூட தங்களை சர்வதேசவாதிகளாக காட்டிக் கொண்டவர்களிடம் கூட இனவாதம் இருக்கத்தான் செய்தது. உதாரணமாக பண்டித ஜவஹர்லால் நேரு என்னதான் ஐரோப்பிய தன்மை கொண்ட சர்வதேசியம் பேசினாலும் பிரபுத்துவ தன்மையும் குலாச்சாரமும் கொண்ட இனமாக தாம் கருதியவர்களை அண்ணாந்துதான் பார்த்தார். (நேரு எழுதினார் ”There is an aristocracy and well-bredness about the Chinese that is impressive”, 1935) ஒருவேளை திபெத்தினை சீனா கபளீகரம் செய்யப்போகிறது என்பதை டாக்டர்.அம்பேத்கர் முதல் வல்லபாய் படேல் வரை முன்னெச்சரிக்கை செய்தும் நேரு கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு ஹான் சீன பிரபுத்துவ குல மேன்மை திபெத்தியர்களுக்கு இல்லை என நேரு நினைத்ததும் அவரது மார்க்சிய மயக்கம் போலவே காரணமாக இருந்திருக்கலாம். ‘நம்மில் கீழானவர்கள்’ என ஈ.வெ.ராமசாமி தலித்துகளை கருதியது அவரது கீழ்வெண்மணி அறிக்கையில் தலித்துகளை எரித்தவர்களை கண்டிக்காமல், அவர்களை கூலி உயர்வுக்கு போராட தூண்டியவர்களை கண்டிக்க வைத்தது போல. இதன் நீட்சிதான் பழ.கருப்பையா போன்றவர்கள் சாதியமற்ற திருமணங்களை எதிர்த்து சாதி வெறியுடன் ஒரு புறமும் திராவிட இனவாத வெறியுடன் இந்து மத வெறுப்புடன் மறுபுறமும் இயங்குவது.

எனவே இந்துத்துவர்கள் முன்னால் உள்ள கேள்வி உண்மையில் இதுதான்: தெள்ளத்தெளிவாக, சாதிய இன வேற்றுமைகளை தகர்த்து மானுட ஒற்றுமையை போற்றும் அதே நேரத்தில் பண்பாட்டு பன்மையை ஏற்கும் சாவர்க்கரிய கருத்தியலை  ஏற்று முன்னெடுப்பார்களா அல்லது குறுகிய சாதிய சௌகரியங்களையே தங்கள் கோட்பாடாகக் கொண்டு சிறிய வட்டங்களுக்குள் தங்களை அடைத்துக் கொள்வார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.