கயாவும் புத்தரும்… கூட்டுப்புழுவும்
எல்லா மாணவர்களுக்கும் கூட்டுப்புழுக்களை சேகரித்த நினைவு ஒன்று இருக்கும். கூட்டுப்புழு சேகரம் என்றாலே முதல் நினைவுக்கு வரும் செடி எருக்கம் செடியாகத்தான் இருக்கும்.


.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }எ
ல்லா மாணவர்களுக்கும் கூட்டுப்புழுக்களை சேகரித்த நினைவு ஒன்று இருக்கும். கூட்டுப்புழு சேகரம் என்றாலே முதல் நினைவுக்கு வரும் செடி எருக்கம் செடியாகத்தான் இருக்கும். அப்படி என்ன எருக்கம் செடிக்கும் பட்டாம்பூச்சிக்கும் நெருக்கம்? எருக்கம் செடிகளுக்கும் பட்டாம்பூச்சிகளுக்குமான உறவு குறித்து ஒரு உயிரியியலாளர் - ஆராய்ச்சி செய்தார். பவுல் எஹெர்லிச் (Paul Ehrlich) ஒரு விஷயத்தை கவனித்தார். பட்டாம்பூச்சிகளின் கூட்டுப்புழு அடுத்த கட்டத்தை அடைந்த பிறகு எருக்கம் இலைகளைத்தான் சாப்பிடுகிறது. இதை தடுக்க எருக்கம் செடிகள் சில மாற்றங்களை அடைந்தால் அதற்கு தகுந்தாற் போல பட்டாம்பூச்சிகளும் வேறு சில மாற்றங்களை அடைந்து கொள்கின்றன. ஒரு கட்டத்தில் எருக்கு இலைகளும் பட்டாம்பூச்சிகளும் ஒன்றுக்காக ஒன்று உருவானது போல ஒரு கச்சித உறவை அடைந்ததை அவர் கண்டார்.
கிழக்கு மெக்ஸிகோவில் புதர்ச்செடியாக வளரும் கருவேலம் தாவரங்கள் உண்டு. இவை தம்மை தாவர உண்ணிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள சில தகவமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. கசப்பான இலைகள், கடுமையான முட்கள் என. ஆனால் இவை எல்லாவற்றையும் விட சிறப்பான மற்றொரு தகவமைப்பு இந்த தாவரங்களில் உண்டு. அது என்னவென்றால், தம்மை பாதுகாக்க அங்குள்ள ஒருவகை எறும்புகளிடம் ஒரு உறவினை அவை ஏற்படுத்தியுள்ளன. எறும்புகளுக்கு ஏற்ற வகையில் தம்மை தகவமைத்து கொண்டுள்ளன இந்த தாவரங்கள். எறும்புகளோ பிற தாவர உண்ணிகள் இதை நெருங்காதபடி பார்த்து கொள்ள வேண்டும். பதிலாக நீர் கசிவு இல்லாத முட்கள் எறும்புகளின் வசிப்பிடங்களாயின. இலைகளின் நுனிகளில் சிறிய பருத்த அமைப்புகள் – எறும்புகளின் உணவாயின. மெதுவாக எறும்புகள் தங்கள் ஜாகையை கருவேல முட்களுக்கு மாற்றிக்கொண்டன. இருபத்து நான்கு மணிநேரமும் செடியை காவல் காத்தன. செடியை தாக்கும் எந்த விலங்கையும் அவை தாக்கின. விலங்குகளை மட்டும் அல்ல கருவேல புதரில் பற்றிப்படரும் பிற தாவரங்களை கூட அவை தாக்கின.
இணையான பரிணாம வளர்ச்சி என்பது இதுதான். இங்கு பரிணாம வளர்ச்சி அடைந்தது கருவேலமும் எறும்புகளும் அல்ல. அவற்றுக்கிடையேயான உறவுகளின் மாற்றமே இங்கு பரிணாம வளர்ச்சி.

ஒன்றோடொன்று இணைந்த பரிணாம வளர்ச்சி – ஒன்றின்றி மற்றொன்று இல்லை – எருக்கம் இலைகளின் சில மாற்றங்கள் பட்டாம்பூச்சியின் கூட்டுப்புழுவும் கம்பிளிப்புழுவும் இல்லாமல் பொருளற்றவை. கருவேல செடியின் சில தகவமைப்புகளுக்கு எறும்புகள் இல்லாமல் பொருளில்லை. அப்படியே எறும்புகளின் சில தகவமைப்புகளுக்கு கருவேலமின்றி பொருளில்லை. ஆக ஒரு உயிரினத்தின் பரிணாமம் என்பது அதனை மட்டும் மையம் கொண்டதன்று. அவை பல உறவு பிணைப்புகளின் பரிணாமம். இதை சக-பரிணாமம் (co-evolution) என்று சொல்கிறார்கள்.
பவுல் எஹெர்லிச்சின் மாணவர் ஸ்டீவர்ட் பிராண்ட். இவரும் உயிரியலாளர்தான். இவர் சகபரிணாம நிகழ்வுகளை சேகரித்தார். அவற்றை வெளியிடும் ஒரு இதழையும் ஆரம்பித்தார். அதன் பெயர் – Coevolution. டார்வின் இத்தகைய ஒரு பரிணாம இயக்கத்தை தொட்டு சென்றிருந்தார்… ‘உயிரினங்கள் ஒன்றோடொன்று உள்ள உறவுக்குத் தகுந்தாற் போல தங்கள் உறுப்புகளை தகவமைப்பது’ குறித்து அவர் சொல்லியிருந்தார். ஆனால் சகபரிணாமம் என்கிற வார்த்தையை 1958 இல் மோட் என்பவர்தான் பயன்படுத்தியிருந்தார்.
இந்த சக-பரிணாமம் என்பது உண்மையில் ஒரு அடிப்படை பார்வை மாற்றத்தை அளிக்க வல்லது. உதாரணமாக பூனை எலியை பிடிக்கும். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் பூனைக்கு எலியை பிடிக்கும் எந்த மரபார்ந்த இயல்பும் கிடையாது. அதன் ஜீன்களில் ’எலியை பிடி’ என்று சொல்கிற ஜீன் கிடையாது. ஆனால் பூனையின் தன்னியல்பில் ஒரு விளையாட்டுத்தனம் உண்டு. அதன் தன்னியல்பில் கற்கும் திறன் உண்டு. ஆக, பூனை எலியை பிடிக்க அதனைத் தூண்டி கற்க வைப்பது எலிதான். ரோஸ் ஆஷ்பி (Ross Ashby) என்கிற கணினிவியலாளர் இதை சொல்கிறார். எந்த சூழ்நிலையில் இதை சொல்கிறார் என்பது சுவாரசியமானது. கணினிகளுக்கு சொல்லி கொடுத்தால் அவற்றால் தன்னியல்பாக கற்றுக்கொள்ள முடியுமா? செயற்கை அறிவை உருவாக்க முடியுமா இந்த கேள்விகளை குறித்து ஆராயும் போது அவர் இதை சொல்கிறார்.
இந்த சகபரிணாம உறவுகள் டார்வினிய பரிணாம அறிவியலை முற்றிலும் புதுமையாக காண வைக்கின்றன. ‘வலியது வாழும்’ (survival of the fittest) என பொதுவாக அறியப்படுவது டார்வினிய பரிணாமம். ஆனால் சகபரிணாம நோக்கில் அது முற்றிலும் வேறுவிதமாக மாறுகிறது.

இங்கு கிரிகாரி பேட்ஸன் (Gregory Bateson 1904-1980) குறித்து பேசியே ஆக வேண்டும். பேட்ஸன் பலவாகவும் இருந்தவர்: மானுடவியலாளராக, சைபர்னெடிக்ஸ்டாக,… முக்கியமாக அவர் உயிரியலுக்கு ஒரு தத்துவார்த்த பார்வையை தந்தார். இன்னும் விவாதிக்கப்படும் இன்னும் முழுமையாக விரித்தெடுக்கப்படாததாக அது உள்ளது. அவர் சகபரிணாமம் டார்வினிய பரிணாம வளர்ச்சிக்கு அளிக்கும் பார்வை மாற்றத்தைக் கூறுகிறார். குதிரையின் பரிணாம வளர்ச்சியையும் அது தின்னும் புல்லின் பரிணாம வளர்ச்சியையும் எடுத்துக் கொள்ளுங்கள். ‘பரிணாமம் அடைந்தது குதிரையோ அது தின்னும் புல்லோ அல்ல. அவற்றுக்கு இரண்டுக்கும் இடையில் இருந்த உறவே பரிணாம மாற்றம் அடைந்தது.”
டார்வினுக்கு பின்னர் வளர்ந்த பரிணாம அறிவியல் முழுக்க முழுக்க உயிரினங்களை மையப்படுத்தி பரிணாமத்தை ஆராய்ச்சி செய்து வந்தது. சூழலியல் என்பது ஏறக்குறைய ஒரு தனி அறிவியல் புலமாக இருந்தது. இந்த சூழலில் உயிரினங்களுக்கிடையே உள்ள உறவுகளையும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்குமான உறவுகளையும் ஆராய்ச்சி செய்து அவற்றின் மூலமாக பரிணாமத்தையே வரையறை செய்வதென்பது நிச்சயமாக ஒரு கடுமையான பார்வை மாற்றம்தான். அதனை செய்வதற்கு போனால் போகட்டும் என்று ஒரு விளிம்பு இடத்தை உயிரியலில் கொடுத்திருந்தார்கள்.


ஆனால் ஜேம்ஸ் லவ்லாக் என்கிற இயற்பியலாளரும் லின் மர்குலிஸ் என்கிற உயிரியலாளரும் ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியை மட்டுமல்ல பூமியின் வளர்ச்சியையும் இப்படிப் பார்க்கலாம் என்று சொன்னார்கள். உயிரினங்களின் பரிணாமம் என்பதை அவற்றின் சூழலிலிருந்து பிரிக்க முடியாது. உயிரின் பரிணாமம் என்பதே அதற்கும் அதன் சூழலுக்குமான உறவுகளின் பரிணாம வளர்ச்சிதான். என்றால் உயிர்கள் வளர்ச்சி அடைவது போலவே அதனை சுற்றியுள்ள சூழலும் வளர்ச்சி அடைய வேண்டுமல்லவா? ஆம் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. நாம் பார்க்கும் பூமி இப்படி எண்ணற்ற சகபரிணாம இழைகளால் பின்னப்பட்ட ஒன்றுதான்.
நம் எளிய செல்லை எடுத்துக் கொள்வோம். அதற்குள் மைட்டோகாண்ட்ரியா என்கிற ஒரு உறுப்பு இருக்கிறது. இதற்கென்று தனியாக டி.என்.ஏ இருக்கிறது. இந்த டி.என்.ஏ வட்டமாக உள்ளது – மிக பழமையான நுண்ணுயிரிகளில் இருப்பது போல. லின் மர்குலிஸ் மைட்டோகாண்ட்ரியா என்பது பழைய ஒரு செல் உயிரினங்களுடன் இணைந்து ஒரு உறவை உருவாக்கிக் கொண்ட மற்றொரு நுண்ணுயிரி என்று சொன்னார். ஆக ஒரு செல் கூட ஒற்றை உயிரினம் அல்ல… ஒன்றுக்கு மேற்பட்ட உயிரினங்களின் உறவுகளால் ஏற்படும் ஒத்திசைவு… அப்போது நீங்களும் நானும்? பல்லாயிரம் கோடி நுண்ணுயிரிகள் நமக்குள் இருக்கின்றன. அவற்றின் ஒத்திசைவுதான் நாம். நீங்கள் ஒரு தனி ஆத்மா இல்லை. தனி உயிர் இல்லை. பல்லாயிரம் கோடி உயிரிகளின் உறவுகளின் ஒத்திசைவு… அந்த ஒவ்வொரு உயிரியும் அவற்றுக்குள் எத்தனை எத்தனையோ உறவுகளின் ஒத்திசைவு…
மாற்று திசையில் ஒட்டுமொத்த பூமியும் ஒரே அதி உயிர் அமைப்பு என கொள்ளலாம். இதை மர்குலிஸும் லவ்லாக்கும் கூறிய போது பெரும் எதிர்ப்பு அறிவியல் உலகில் ஏற்பட்டது, மிக கடுமையாக அவர்கள் விமர்சிக்கப்பட்டார்கள். உயிரியலாளர்களுக்கு இன்னும் எரிச்சல் ஏற்படுத்துவது போல லவ்லாக்கும் மர்குலிஸும் தங்கள் கோட்பாட்டுக்கு கயா (Gaia) என பழைய பேகன் (pagan) பூமிதாய் தெய்வத்தின் பெயரை கொடுத்திருந்தார்கள்.
ஆனால் மெல்ல மெல்ல கயா சூழலியலாளர்களின் அறிதல் சட்டகமாகியது. பொது மக்கள் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உயிருள்ள பூமி என எளிதாக மனதில் பதிந்தது. ஆனால் இன்னும் ஆழமாக கயா சொல்வது அதை மட்டுமல்ல… கயா என்பது எண்ணிலி உயிர்த்துவ உறவுகளின் ஒத்திசைவு. கயா என்பது ஒரு உருண்டை பந்து அல்ல… ஒரு பெரும் நடன இயக்கம்.

கயா என பூமி அளாவிய உயிர் தொடங்கி ஓரின செல்கள் கொண்ட உயிரினங்கள் வரை இந்த உறவு இழைகள் இணைந்த அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன? அவற்றுக்குள் எப்படி செய்தி பரிமாற்றம் நடக்கிறது? இவற்றை இன்றைக்கு அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்.. இந்த இயற்கை உறவுகளின் அடிப்படையில் நாம் இயந்திரங்களை அமைக்கலாமா? இந்த இயற்கை உறவுகளில் செய்தி பரிமாற்றம் எப்படி நிகழ்கிறது? அதன் அடிப்படையில் நம் கணினி வலைகளை எப்படி திறம்பட அமைக்கலாம்? என ஆரம்பித்து நம் நகர கழிவுகளை அகற்றுவதில் இந்த உயிரியல் கோட்பாடுகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது வரை – யோசிக்கிறார்கள்.
இங்கும் ஒரு தத்துவ சட்டகம் தேவைப்படுகிறது. குறிப்பாக இத்தகைய உயிரியல் அமைப்புகளை ஆராய்ச்சி செய்யும் சைபர்னெடிக்ஸ்ட்கள் பௌத்த தத்துவத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். பேட்ஸன்,ப்ரிட்ஜாப் கேப்ரா, ஜோன்னா மேசி என எல்லாருக்கும் இந்த ஈர்ப்பு இருப்பதை காணலாம். உதாரணமாக ஜோன்னா மேசி 1991 இல் ’Mutual Causality in Buddhism and General Systems Theory’ என்கிற நூலை வெளியிட்டார். அதென்ன ’Mutual Causality’? பிரதீத்ய சமுத்பாதம் என்கிற பௌத்த கோட்பாடு அது. தமிழில் ’சார்பு தோற்றம்’ என சொல்லலாம்.
சம்யுத்த நிகாயத்தில் புத்தர் சொல்கிறார் :
இது இருக்கிறது. ஏனென்றால் அது இருக்கிறது.
இது இல்லை ஏனென்றால் அது இல்லை.
இது இல்லாமல் போகிறது ஏனென்றால் அது இல்லாமல் போகிறது.
இதை புத்தர் சொல்லவில்லை:
மானுடம் இருக்கிறது. ஏனென்றால் இயற்கையுடனான அதன் பிணைப்புகள் இருக்கின்றன.
மானுடம் இல்லை. ஏனென்றால் அவை இல்லை.
மானுடம் இல்லாமல் போகிறது. ஏனென்றால் அவை இல்லாமல் போகின்றன.
எல்லா உயிரினங்களின் இருப்புக்கும் அவற்றின் பரிணாம வளர்ச்சிக்கும் பொருந்தும் வரிகள் இவை. நம் உயிரியலின் எதிர்காலம் … அரிஸ்டாட்டிலிய உயிரியல் சட்டகத்திலிருந்து பௌத்த-வேதாந்த உயிரியல் சட்டகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்… இதில் நம் பங்களிப்பு என்னவாக இருக்கும்? இதற்கு பங்களிக்கும் விதமாக நம் உயிரியல் கல்வி மாற்றமடைந்திருக்கிறதா… கசப்பான கேள்விகளுடனேயே இதையும் முடிக்க வேண்டியுள்ளது.
[பிரதீத்ய சமுத்பாதம் குறித்து: http://solvanam.com/?p=24834]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...