தொ.பரமசிவனும் இளங்கோ அடிகளும்
அண்மையில் முனைவர் தொ.பரமசிவன் அவர்களை தமிழ் நாளேடு ஒன்று பேட்டி கண்டிருந்தது. தொ.பரமசிவன் நாட்டுப்புற இலக்கியம் என


.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }அ
ண்மையில் முனைவர் தொ.பரமசிவன் அவர்களை தமிழ் நாளேடு ஒன்று பேட்டி கண்டிருந்தது. தொ.பரமசிவன் நாட்டுப்புற இலக்கியம் என அடையாளப்படுத்தப்பட்ட இலக்கியம், மரபுகள் ஆகியவற்றை கள ஆய்வு செய்து அவற்றை மார்க்சிய சித்தாந்த கட்டமைப்பில் பொருத்தி அளிக்க வல்லவர். கூடவே கணிசமாக திராவிட இனவாத பார்வையும் அதில் கலந்திருக்கும். இவ்விதத்தில் அவர் முக்கியமானவர். அவரை பேட்டி காண்பவர் கேட்கிறார்: ‘அதிகரித்து வரும் வைதீக மரபின் தாக்கத்தினால் சிறு தெய்வ மரபுகள் அழிந்துவிடுமா?’ இந்த கேள்வியே முன்முடிவுகள் சார்ந்து கேட்கப்படும் கேள்வி. அதுவும் ஆதாரமற்ற முன்முடிவுகள். வைதீக மரபு என்பது வேறு ; ‘சிறுதெய்வ மரபு’ என்பது வேறு என்பது முதல் முன்முடிவு. இப்போது திடீரென வைதீக மரபு அதிகரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை அடுத்து கேள்வி முன்வைக்கிறது. இறுதியாக வைதீக மரபு என்பது ’சிறு தெய்வ மரபுகளை’ விழுங்கிவிடும் என்பது. இப்படி ஒரு கேள்வியின் அபத்தத்தையும் ஆதாரமின்மையையும் ஒரு களப்பணியாளர் என்ற அளவிலாவது தொ.பரமசிவன் வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்தால் அவரோ கேள்வியை போலவே அபத்தமான ஒரு பதிலை முன்வைக்கிறார்:
“உக்கிரம் பொருந்திய கையில் ஆயுதமேந்திய, அக்னி மகுடம் சூடிய தாய்த் தெய்வங்களை வைதீக மரபால் ஏற்றுக்கொள்ள முடியாது. மீனாட்சியம்மனைப் போல சாந்தசொரூபியாய் இருக்கும் தெய்வங்களைத்தான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். இதை ஒரு ‘மைக்ரோ பாலிடிக்ஸ்’ என்றுகூடச் சொல்லலாம். எல்லாப் பெருந்தெய்வங்களின் கோயில்களிலும் சிறுதெய்வங்களைக்கொண்டுவந்து குடியமர்த்துவதனாலேயே சிறுதெய்வங்களை பெருந்தெய்வங்கள் தின்று விடும் என்று அச்சப்படத் தேவையில்லை.“
முதலில் இந்த ‘வைதீக மரபு’ ‘சிறுதெய்வ மரபு’ என்பதே ஒரு அபத்தமான பாகுபாடு என்றுதான் சொல்லவேண்டும். வைதீகர்கள் இருக்கிறார்கள். வைதீக மரபு இருக்கிறது. அது எந்த பாரத மரபையும் போல எல்லாவித தெய்வங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பாரதத்தின் ஒவ்வொரு சமய-தத்துவ மரபுக்குள்ளும் சரி மரபுகளுக்கிடையேயும் சரி சமன்வயம் எனும் இயக்கம் தொடர்ந்து இயங்கியபடியே உள்ளது. இது மார்க்ஸியம் போன்றவை முன்வைக்கும் முரணியக்கத்தைக் காட்டிலும் ஆழமும் விரிவும் கொண்ட இயக்கம். இதை நாம் எல்லா மரபுகளுக்குள்ளும் மரபுகளுக்கிடையேயும் காணமுடியும்.
உக்கிரமான தெய்வ வடிவம் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். கறுப்பான ஆனைத் தோலை உரித்து தன் உடலில் போர்த்தி கொண்டு நிற்கிறது அந்த பெண் தெய்வம். அவள் இடுப்பில் இருப்பதோ காட்டுப்புலியின் தோல். அவள் எதன் மேல் நிற்கிறாள் என்று பார்த்தாலோ காட்டு எருமையின் கருப்பு தலை மீது நிற்கிறாள். சர்வ நிச்சயமாக உக்கிரமான வடிவம்தான். அதுவும் கானகத்துக்கே உரிய அம்சங்கள் கொண்ட பெண். அவள்.

இனி மற்றொரு பெண் தெய்வம். தேவர்களும் அசுரர்களும் சண்டை செய்கிறார்களாம். தேவர்கள் வென்றுவிட்டார்களாம். அவர்களுக்கு அகந்தை வந்து விட்டதாம். அப்போது ஒரு யட்சன் அங்கே வருகிறான். அவன் யார் என தெரியாமல் அவனிடம் வரும் ஒவ்வொரு தேவனிடமும் அந்த யட்சன் ஒரு புல்லைக் காட்டி அதனிடம் தன் ஆற்றலை காட்டும்படி கேட்கிறான். அக்னியால் அந்த புல்லை எரிக்க முடியவில்லை. வாயுவால் அதனை ஊதித்தள்ள இயலவில்லை…ஒவ்வொரு தேவனும் தோற்றுத் திரும்ப, இறுதியில் இந்திரன் வருகிறான். அங்கே ஒரு பெண்ணை பார்க்கிறான். அழகிய பெண். அவள் தேவர்களின் வெற்றி என்பது அவர்களால் ஏற்பட்டது அல்ல பிரம்மத்தால் என்பதை உணர்த்துகிறாள். அவள் உமா ஹைமவதி. இந்திரன் முதலான தேவர்கள் கொண்ட வேதங்கள் ஒரு எல்லையில் முடிவடைய இறுதியில் ஏற்படும் பிரம்மம் குறித்த அனுபமும் அறிவும் ஒரு பெண் தெய்வமாக உருவகிக்கப்படுகின்றன. வேதத்தின் அந்தமாக விளங்கும் பிரம்ம அறிவின் பிரம்மானுபவத்தின் ஞானச் சுடராக விளங்கும் பெண்.
இந்த இரு தெய்வங்களை தொ.பரமசிவன் எளிதாக வகைப்படுத்திவிடக் கூடும். ஒன்று ’உக்கிரம் பொருந்திய தாய் தெய்வம்’ மற்றொன்றோ ’சாந்த சொரூபியான வைதீக தெய்வம்’. ஒன்றோடொன்று எப்படி இணையும்? முனைவர் தொ. பரமசிவனும் அவர் உருவாக்கிய அறிதல் பார்வையும் முடியாது என்றுதான் சொல்லும். ஏனென்றால் அவரது அறிதல் உருவாகிய ஐரோப்பியத்தில் இன்றும் பாகன் (pagan) நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளும் நிறுவன கிறிஸ்தவத்தின் இறையியலும் வெவ்வேறாகத்தான் நிற்கின்றன. அவற்றுக்கிடையேயான ஊடுபாடுகள் உரசல்களாகவும் நிறுவனம் நாட்டுப்புறத்தை விழுங்கும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன. உதாரணமாக பாகன் (pagan) பெண் தெய்வத்தை கிறிஸ்தவம் மேரியாக்கும். ஆனால் பழமையான சமயத்தில் அவள் முழுமுதல் தெய்வமாக இருப்பாள். நிறுவன கிறிஸ்தவத்திலோ அவள் ஆகச்சிறந்த மன்றாடிக் கேட்டுக்கொள்ளும் பெண் : ஏசுவின் மானுடத்தாய் மட்டும்தான். பல கிறிஸ்தவ அடியார்கள் பாகனீய தெய்வ அம்சங்களை இப்படி உள்ளிழுத்து கொண்டு உருவானவர்கள். அவர்களின் அற்புத செயல்களும் அவ்வாறுதான். ஆனால் அவர்கள் தெய்வங்கள் அல்ல. அடியார்கள் மட்டுமே. ஒன்று உள்ளிழு அல்லது அழித்துவிடு: இதுதான் மேற்கத்திய உலகில் நிறுவன மதத்துக்கும் நாட்டார் மரபுகளுக்கும் நடந்து கொண்டிருந்திருக்கிறது. அதே அறிதல் சட்டகம் இன்று நம் தெய்வங்களை பார்ப்பதில் கொண்டு வரப்படுகிறது.
பாரதத்தில் தொடர்ந்து நிலை வேறு. நாம் மேலே பாரத்த இரண்டு பெண் தெய்வங்களையும் எடுத்துக் கொள்வோம். உக்கிரமான காட்டுப் பெண் தெய்வம்: ஆனை தோலை போர்த்தி புலியின் தோலை இடையில் கட்டி கானகத்து காட்டெருமையின் கரும் தலையில் நிற்கும் பெண் தெய்வம். தேவர்களுக்கு அவர்களுக்கு அப்பால் அவர்களுக்குள் இருக்கும் பிரம்ம அறிவை வேதத்தின் முடிவாக காட்டும் பெண் தெய்வம்.
இரண்டையும் உயிர்த்துவத்துடன் இணைக்க முடியும் என்பதையும் இணைந்திருக்கின்றன என்பதையும் காட்டுகிறார் இளங்கோ அடிகள். அதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் சூழல் அபரிமிதமான சூழல். கானகத்தில் நடக்கும் வேட்டுவ சடங்கொன்றில் அதை இணைக்கிறார்.
ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய் ;
மேலே இருக்கும் இரு வரிகளும் நாம் பார்த்த உக்கிரமான காட்டு பெண் தெய்வம். அடுத்த இரு வரிகளுமோ கேன உபநிடதத்தில் வரும் வானோர் வணங்கும் வேதாந்த பெண் தெய்வம்.
மார்க்ஸியம் உட்பட மேற்கத்திய அறிதல் சட்டகங்களிலேயே பழகிய நம் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களுக்கு இது பிரச்சனையான விஷயம்தான். இதெற்கெல்லாம் உற்பத்தி உறவுகள் சார்ந்த மேல்கட்டமைப்புகள், முரணியங்கியல் விளக்கங்கள், ஆரிய திராவிட இனவாத கோட்பாடுகளை கண்டுபிடிக்க வேண்டும். கோசாம்பி முதல் பரமசிவன் வரை செய்வார்கள். கோசாம்பி ஆராய்ச்சி தரவுகளைத் தேடிக் கோர்த்து செய்வார். பரமசிவன் அதை ஒரு அரசியல் கோஷமாக முன்வைப்பார்.

ஆனால் மறைகளின் மேல் பாதம் பதித்து நிற்கும் வேதாந்த பெண் தெய்வமும் மகிடன் தலை மீது நிற்கும் கானக பெண் தெய்வமும் தொடர்ந்து பாரத மரபில் பிரகாசிக்கிறார்கள். வேதங்கள் கீழிருக்க மேலே முழு ஞான ஒளியாக நிற்கும் பெண் தெய்வத்தை பாரத மரபு ஒரு ஆழ்ந்த படிமமாக வார்த்தெடுத்திருக்கிறது.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்துக் கொள்ளலாம். லலிதா தேவியின் ஆயிரம் பெயர்களை சொல்வது அது. தேவி – என்பது முழுமையான அறிவுநிலை (consciousness) என்பதையும் சஹஸ்ரநாமம் சொல்கிறது. தன்னறிவின் விழிப்பு-கனவு-ஆழ் உறக்க நிலைகள் அனைத்தும் தேவியின் பெயர்களாக சொல்லப்படுகின்றன (பெயர்கள்: 256-262) இதை சொல்லிவிட்ட பின்னர் ’ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீ க்ருத பாதாப்ஜ தூளிகா’ என்று 289 ஆவது பெயர் சொல்லப்படுகிறது. வேதத்தை அன்னையாக உருவகித்து வேத அன்னையின் தலையில் இருக்கும் ஸிந்தூரம் தேவியின் பாத தூளி என்கிறது இது. அபிராமிபட்டரை எடுத்து கொள்வோம். அபிராமி அந்தாதியில் மறைநூலை சிலம்பாக அணிந்தவள் (’வேதப் பரிபுரையே’) என்றும் வேதங்களை பீடமாக்கி அதன் மேல் நிற்பவள் (’கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம்’) என்றும் கூறுகிறார்.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திலிருந்தே மற்றொரு எடுத்துக்காட்டையும் கூறலாம். தேவியின் பல்வரிசைகள் இரண்டும் சுத்த வித்தையே முளைத்தாற் போல இருக்கிறதாம் (25) இதில் ஒரு சாத்விகமான தெய்வ முகத்தை பார்க்கிறோம். ஆனால் 488 ஆவது பெயரில் அவள் கோரைப்பற்களுடன் விளங்குபவள் (488) என்று சொல்லப்படுகிறாள். தொ.பரமசிவன் போன்றவர்கள் இதை எப்படி விளக்குவார்கள்? வைதீக மரபு கோரைப்பற்கள் கொண்ட ஒரு நாட்டார் தெய்வத்தை விழுங்கி ஏப்பம் விட்டதன் அடையாளமாக இதை காணக்கூடும். இப்படி பல அபத்தமான முடிவுகளுக்கு தவறான அறிதல் சட்டகங்களுக்குள் தரவுகளை அடைக்கும் பேராசிரியர்கள் நமக்கு ஏராளமாகவே இருக்கிறார்கள்.
எனவேதான் இளங்கோ அடிகள் மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் ஈவெராமசாமியையும் விட நம் மரபை நம் பண்பாட்டு பரிணாமத்தை அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் முக்கியமானவராகிறார்.
இளங்கோ அடிகள் உண்மையில் வேட்டுவவரியில் நம் சமூக அறிஞர்களுக்கு ஒரு அழகான ஆழமான அறிதல் சட்டகத்தை அளித்திருக்கிறார். எப்படி சமன்வயம் பன்மைகளுக்கு மத்தியில் ஒரு சமன்வயத்தை உருவாக்குகிறது என்பதே அது. எல்லாமே வேதத்தில் இருந்து வந்தது என்றோ அல்லது ’நாட்டார்’ சமயங்களே அவைதீக சமயங்கள் என்பதோ ஒரு தவறான புரிதலில் இருந்து எழுவது. ‘நாட்டார்’ தெய்வ/ வைதீக தெய்வ அல்லது சிறு தெய்வ/பெரு தெய்வ பாகுபாடுகள் இந்திய சூழலில் அதன் பண்பாட்டு வரலாற்றையும் பரிணாம வளர்ச்சியையும் அறிந்திட ஏற்ற சட்டகங்கள் அல்ல. மாறாக சமன்வய இயக்கத்தை நம் சமுதாய பரிணாம வளர்ச்சியில் நம் பண்பாட்டு வெளிப்பாடுகளில் காண்பதென்பது நமக்கு இயல்பாக ஏற்படும் அறிதலாக அமையும். அதுவே உண்மைக்கும் அருகாமையில் இருக்கும்.
அடுத்த முறை பகவதி கோவில் திருவிழாவுக்கு போவதற்கு முன் நிச்சயமாக வேட்டுவ-வரியை படித்துவிடுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...