/

18. சொல்லத் தெரியாத திறமை

குயவன் மட்டுமல்ல. தச்சன், பொற்கொல்லன் ,மீனவன் என்று எந்த குறிபிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவரும், அது தொடர்பான முறையான, குறிப்பிட்ட

News image
Updated On :9 செப்டம்பர் 2015, 12:44 pm

செ.சு.மலரடியான்

Story image

சென்ற அத்தியாயத்தில் பார்த்த குயவன் மட்டுமல்ல. தச்சன், பொற்கொல்லன் ,மீனவன் என்று எந்த குறிபிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறவரும், அந்தத் தொழில் தொடர்பான திறனை எப்படிப் பெறுகிறார்கள்?  அவர்களுக்கு முறையான   பாடத்திட்டம்கொண்டு எவரும் அதைச் சொல்லிக்கொடுப்பதில்லை.  குறிபிட்ட காலத்திற்கு முழுநேர கல்வியாக அதைக்  கற்காமலேயே அவர்களால் படிஅந்த திறனைப் பெற முடிகிறது?

அவர்களைப் போலவேதான்  கயிறு மேல் நடக்கும்  கழைக்கூத்தாடிகள், லாரி டேக்ஸி போன்ற பெரிய வாகனங்களை ஓட்டுபவர்களும். அவர்களுகெல்லாம் அந்த லாகவம் வந்தது எப்படி?  அவ்வளவு ஏன், மயானங்களில் பிணம் எரிப்பவர்கள் கூட,  கனத்த பிணத்தை கையில் இருக்கும் கழியால் லாவகமாக புரட்டிப் போட்டு எரிக்கிறார்களே, அந்தத் திறன், பாண்டித்தியம் அவர்கலுக்கு எங்கிருந்து வந்தது?

மொத்தத்தில் இவர்களில் எவரும் கற்றுக்கொள்வதற்காக எந்தத் தொழிற்பயிற்சிப் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகவில்லை. ஆனாலும் மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள்.

Story image

இவையெல்லாம் அனுபவத்தில் வருபவை என்று பதில் சொல்லலாம். அனுபவம் என்பது சரிதான். ஆனால் அனுபவம் என்றால் என்ன? அதன்மூலம் திறன்

வருவது எப்படி?

அனுபவம் என்பதும் கூட  ஒரு விஷயத்தை முறையாகப் படிப்பது போலத்தான். அனுபவம் கிடைக்கிற போது, அது தொடர்பான விவரங்கள் மூளையில் தொடர்ந்து பதியப்படுகின்றன. எந்த வேலையைச் செய்தாலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அதில் கவனம் போகிறது.  அதனால் அந்த செயல்பற்றிய  சிந்தனை உருவாகிறது. கற்றுக்கொள்வதற்காக, அதே வேலையைச் செய்பவரை கவனிக்கிறார்கள். ’சீனியர்’ரைப் பார்த்துக் கற்றுக்கொள்வது. இந்த செயலும்  அதே விஷயத்தைப் பற்றிய சிந்தனையை ஏற்படுத்துகிறது..

பாடத்திட்டமில்லைதான். முறையாக கற்றுத்தரும் ஆசிரியர்கள் இல்லைதான். ஆனாலும் அந்த திறன் மெல்ல மெல்ல அவர்களுக்கு வசப்படுகிறது. ’எறும்பு ஊரக் கல்லும் தேயும்’ என்று  ஒரு பழமொழி. கருங்கல் உறுதியானது. அதை உடைக்க வேண்டும் என்றால் கூர்மையான உளி வேண்டும். உடன் கனமான சுத்தியல் வேண்டும். தவிர, ஓங்கி அடிக்க வேண்டும். அப்படிப்பட்ட கருங்கல் , எறும்புகள் தொடர்ந்து அதன்மீது  ஊர்ந்தால் (போய் வந்தால்) நாளாவட்டத்தில் கொஞ்சம் தேய்ந்துபோகும்.

எறும்பு மிக எளிமையான  சிறிய உயிரினம். அதன் உடல் பூஞ்சயானது. கால்களோ மிக மிக சிறியன. பூவைவிடவும் எடை குறைவானவை. அப்படிப்பவை தொடர்ந்து ஊர்ந்தாலே, உறுதியான கருங்கல் கூடக் கொஞ்சம் தேயுமாம். எதைத் தொடர்ந்து செய்தாலும், எவ்வளவு சிறிய தாக்கம் கொடுக்க வல்லதாக இருந்தாலும் , தொடர்ந்து செய்யும் காரணத்தால் அதற்கு நிச்சயம் ஒரு விளைவு இருக்கும் என்று தெரிவிப்பதுதான் ’எறும்பு ஊரக் கல்லும் தேயும்’ என்பது.

இதுதான் தொடர்ந்து செய்கிறவர்கள், அது தொடர்பான திறன் பெறுவதற்கும் காரணம்.  Practice makes man perfect என்பார்கள்.

குயவன், தச்சன், பொற்கொல்லன் போன்றோர் எல்லாம் சிறுவயதில் இருந்து ஒரே வேலையை தொடர்ந்து செய்ய, அவர்களை அறியாமல் அவர்கள் மூளையின் மீது அந்தக் குறிபிட்ட விவரத்தை எடுத்து எடுத்து வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த விவரங்கள் உள்ளே போகின்றன. மூளைக்குள் பயணிக்கின்றன. செழுமை பெறுகின்றன.

*

சுமார் 15   ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. திருச்சி பெல் நிறுவன ஊரகத்தில் மனமகிழ் மன்றம் என்று ஓரு அமைப்பு உண்டு. ஒரு பேஸ்கெட் பால் போட்டி. அதைத் துவக்கி வைக்க நிறுவனத்தின் பெர்சானல் துறைத் தலைவரும், மனமகிழ்மன்றத்தின் தலைவருமாக இருந்த திரு PL..எல். இராமனாதனை அழைத்திருந்தார்கள்.

மாலை மணி ஏழு. சுற்றிலும் ஓங்கி உயர்ந்து நின்றுகொண்டிருந்த ’பிளட் லைட்’  கள் ஆடுகளத்தின் மீது வெளிச்சத்தை அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தன.  பல்வேறு மாநிலங்களில் அமைந்திருந்திருக்கும் பெல் நிறுவனங்களில் வந்ததிருந்த குழுக்கள், அந்த ‘இண்டர் யூணிட் ’ போட்டியின் ஆரம்பவிழாவில்,  ஆடுகளத்தைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள்.

அதிகாரியை அழைத்து, அவர் கையில் சிவப்பு நிறப்பந்தைக் கொடுத்து, கூடையில் பந்தைப் போட்டு, போட்டியைத் துவக்கி வைக்குமாறு ஏற்பாட்டளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். அதைப்பற்றிய அறிவிப்பை மைக்கில் சொல்கிறார்கள்.

கூட்டம் கைதட்டுகிறது.

அதிகாரி PL..எல். இராமனாதன்  பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஆடுகளத்துக்குள் போகிறார். பந்தைத் தூக்கி கூடையை நோக்கி எறிகிறார். அட! பந்து கூடையில் விழாதது மட்டுமல்ல, கூடைக்கு அருகில் கூட போகவில்லை! தள்ளிப் போய்  விழுகிறது. சுற்றி இருந்த பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு. சில சிறுவர்கள் சத்தமாகச் சிரிக்கக் கூட சிரித்தார்கள். யாரோ ஒரு விளையாட்டு வீரர்,   கர்மசிரத்தையாக ஓடி பந்தை எடுத்து வந்து மீண்டும் அதிகாரியிடம் நீட்டுகிறார். இந்த முறை கொஞ்சம் அதிக முயற்சியுடனும் கூடுதல் கவனத்துடனும் எறிகிறார்  அதிகாரி.  கூடைக்கு கொஞ்சம் அருகில் போனதே தவிர..உள்ளே போகவில்லை. 

இன்னொருமுறையும் முயற்சித்தபின், அவர் அவரது தொடக்க உரையாற்றினார்.  ”சற்று முன்னதாகவே வந்துவிட்டதால், துவக்க விழாவிற்கு முன்பாக இதே ஆடுகளத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த சிலரை நான் பார்த்தேன். அவர்களில்  சில ஆட்டக்காரர்கள் பந்தை மிகச் சரியாக கூடைக்குள்  போடுவதைப் பார்த்தேன்..”  என்று தொடங்கி,  கூடைப்பந்து ஆடுகிறவர்களின் சிறப்பு என்ன என்பதைப் பற்றி மிக அழகாக விரிவாக ‘பேசினார்’.

Story image

ஆமாம். அங்கே கூடியிருந்த அத்தனை வீரர்களும் வியக்கும் வண்ணம், ஆடுகிறவர்களின்  வேகமாக ஓடும் கால்கள், விடாமல் பந்தை தரையில் தட்டிக்கொண்டேயிருக்கும் அவர்களது கைகள், ஏனைய வீரர்கள் எங்கே இருக்கிறார்கள், களத்தில் எங்கே வாய்ப்பு இருக்கிறது என்று அங்கும் இங்கும் வேகவேகமாக அலைபாயும் அவர்களது கண்கள், தேவைப்படும் நேரம் சரியாக திசை மாறும் அவர்களது இடைவிடாத ஓட்டம், தேவையான உயர்த்திற்கு சரியாக எம்பும் அவர்கள் உடல் , இவை எல்லாவற்றுக்கும் இடையே நிகழும் அற்புதமான ’கோ- ஆர்டினேஷன்’ என்று அவர் அந்த ஆட்டத்தைப் புட்டுப் புட்டு வைத்தார். பலத்த கைதட்டல்.

அந்த ஆட்டத்தின் மிகச் சிறந்த வீரரைப் பேசச் சொல்லியிருந்தால் அவரால் கூட அப்படி பேசியிருக்க முடியுமா என்பது சந்தேகமே.

அவர் பேசியது அத்தனையும் உண்மை. ஏதும் மிகைப்படுத்தப்படவில்லை. அவர் விவரித்த அத்தனையும் அந்த வீரர்கள் சடுதியில் நிகழ்த்திய அதிசயம்தான்.  அந்தக் கூடைப் பந்து வீரர்கள் மட்டுமல்ல. இதே வேகமும், லாகவகமும், நேர்த்தியும் ஏனைய ஆட்டங்களான ஹாக்கி,  கால் பந்து, கிரிக்கெட், ட்ன்னிஸ்  போன்ற விளையாட்டு வீரர்களிடமும் காணலாம்.

Story image



எந்த சிறந்த விளையாட்டு வீரரும்ஆட்ட நேரத்தில், மேலே அந்த அதிகாரி விவரித்து போல, ஆட்டத்தில் அந்த கணத்தில்   என்ன தேவையோ அதை நொடிப்பொழுதிற்கும் குறைவான நேரத்தில் (Split Seconds) சிந்தித்து,  முடிவெடுத்து, முடிவை உடம்பிற்குச் சொல்லி, அதை  செயல்படுத்திவிடுவர்கள்.

இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது? இவற்றை எல்லாம் நீங்கள் எப்படிச் செய்தீர்கள் என்று அவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பு சொல்லுவது போல, ’இப்படி இப்படி, இது முதலில் இது அடுத்து  இவ்வளவு நேரம்’ என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். காரணம், அவர்களால் விவரிக்க முடியாது. காரணம், அது எப்படி நிகழந்து என்பது அவர்களுக்கே தெரியாது. வேண்டுமானால்  இன்னொருமுறை செய்துகாட்டுவார்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் அவர்களால் செய்ய முடியும். ஆனால் எப்படி செய்தார்கள் என்று சொல்ல முடியாது!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

குயவனிடம் கேளுங்கள் என்ன நிகழ்கிறது, எப்படி லாவகமாக பானை செய்வது என்று.. சொல்லத்தெரியாது. ஆனால் செய்துகாட்டுவார். தச்சனிடம், ஆட்டக்காரகளிடம் என்று எவரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார்க்கலாம். எல்லாம் பழக்கம் என்பார்கள். விலாவாரியாக, எழுதிக்கொண்டு வேறு ஒருவர் செய்துவிடக் கூட அளவு விவரங்கள் தரமுடியது. எப்படி கவிதை எழுதுவது என்று  ஒரு Standard Operating procedure  எழுதிவிட முடியுமா என்ன? இப்படிப்பட்ட திறமைகள்  பற்றி உலகத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். தொடர்ந்து  ஆராய்ந்தும் வருகிறார்கள்.  இந்த செய்திறன்.. ஸெய்ய முடிந்த ஆனால் செய்பவராலேயே விவரிக்க  முடியாத திறனுக்குப்  பெயர்………..டேசிட் நாலட்ஜ். Tacit Knowledge. வெளிப்படையாக தெரிகிற, தெரிவிக்கக்கூடிய, சொல்லிக்கொடுக்க கூடிய அறிவுத்திறன் என்பது   Explicit Knowledge.  இதை தமிழில் சொல்லுவதென்றால் வெளிப்படையான அல்லது வெளித்தெரிகிற அறிவு என்று சொல்லலாம். இதுவே சரியான விளக்கமல்ல.

இதற்கு மாறான அறிவுதான் நாம் மேலே பார்த்த பலரிடமும் இருப்பது. அதை டேசிட் நாலெட்ஜ் (Tacit Knowledge ) என்று சொல்கிறார்கள்.

சுவாரசியமாக இருக்கிறது அல்லவா! தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.