பானுமதி: 8. ஒன் உமன் ஆர்மி!
நமது மிகச் சிறந்த டாக்கிகளெல்லாம் வங்காளத்தில் இருந்து வந்தவையே. தமிழ் சினிமா என்று கூறுவதைவிட, தழுவல் சினிமா என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்.


நமது மிகச் சிறந்த டாக்கிகளெல்லாம் வங்காளத்தில் இருந்து வந்தவையே. தமிழ் சினிமா என்று கூறுவதைவிட, தழுவல் சினிமா என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
டாக்டர். நிரஞ்சன் குப்தாவுக்கு நன்றி! ஏவி.எம். படைப்பான அன்னை, ‘மாயா ம்ருகா’ என்ற பெயரில் நிரஞ்சன் எழுதிய நாடகம். வங்க மக்களிடையே மிகப் பிரமாதமான வரவேற்பைப் பெற்றது.
செல்வச் சீமாட்டி அக்கா சாவித்ரி. தனக்குப் பிள்ளைப்பேறு இல்லாததால், உடன்பிறந்த ஏழைத் தங்கை சீதாவின் குழந்தையைத் தத்தெடுக்கிறாள்.
‘என் பிள்ளையிடம் எக்காரணம் கொண்டும் ‘நான்தான் உன் தாய்’ என்று சொல்லிவிடாதே’ என்று தன் சகோதரியிடம் சத்தியமும் வாங்கிக்கொள்கிறாள்.
பெற்றவளை மகன் சந்திக்கவிடாமல் தடுக்கிறாள். நிஜம் வெளிப்பட்டு, தன் சுவீகாரப் புத்திரன், தங்கையிடமே போய்விடுவானோ என ஒவ்வொரு நொடியும் தவிக்கிறாள். முடிவில், உண்மை வெளிப்படுகிறது. திருக்குறள் போன்று ரத்தினச் சுருக்கமான இலக்கியம்!
முழு கவனம் செலுத்தி மெய்யப்பன் உருவாக்கிய உன்னதச் சித்திரம்! மறக்க முடியாத செல்லுலாயிட் காவியமாக, ‘அன்னை’ இன்றுவரை சின்னத்திரைகளில் பூரண நிலவாக ஒளி வீசி உலா வருகிறது.

86 ஆண்டு காலத் தமிழ் சினிமாவில், உண்மையாகவே ஒரு குறிஞ்சி மலர் ‘அன்னை’.
நடிப்பின் எல்லைக்கே சென்று, தாய்ப்பாசத்தில் உருகி, பிள்ளைக்காகப் போராடி வெற்றிபெறும் ‘சாவித்ரி’யாக பானுமதி வாழ்ந்து காட்டினார்.
சுயமரியாதைச் சுடர் பானுமதி, ஏவி.எம்.மின் ‘அன்னை’யை ஒழுங்காகப் பூர்த்திசெய்து தருவாரா? தினந்தோறும், திகிலோடு ஷூட்டிங் நடந்தது.
பானுமதியுடன் எஸ்.வி.ரங்காராவ், சவுகார் ஜானகி, சந்திரபாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் படப்பிடிப்பின் இடையில், அன்னை பட டைரக்டர்களான கிருஷ்ணன் - பஞ்சு இருவரையும் பானுமதி அழைத்தார்.
‘என்னடா இது அவஸ்தை! வேதாளம் மறுபடியும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறதோ?’ முன்பே, பானுமதியை ரத்னகுமார், நல்லதம்பி படங்களில் இயக்கியவர்கள்.
‘சார், இந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க எனக்கு இஷ்டமில்லை. என்னை கேன்ஸல் செய்துவிடுமாறு மிஸ்டர் செட்டியாரிடம் சொல்லிவிடுங்கள். இனிமேல், ஏவி.எம்.முக்குள் நான் வரமாட்டேன்’ என்றார். ஏவி.எம். முதலும் கடைசியுமாக அதிர்ந்தது.
பானுமதியால், தாங்கள் ரணப்பட்ட அனுபவத்தை 1977 ஜூலையில் ஒரு சினிமா இதழில் பதிவு செய்துள்ளனர்.

‘அழகு, கவர்ச்சியைக் காட்டி, நாயகன் அல்லது நாயகிக்கு எதிராக இருப்பது மட்டும் வேம்ப் ரோல் அல்ல. முற்றிலும் மாறுபட்ட வகையில், இப்படியும் இருக்க முடியும் என்று அன்னையில் செய்துள்ளோம்.
பானுமதி ஏற்ற கேரக்டர், ‘வில்லி மீது அனுதாபம் ஏற்படுவதோ, வேம்ப் ஆக நடிப்பவர்களைக் கண்டு கண்ணீர் வடிக்கும்படிச் செய்வதோ முடியாது...’ என்பதை மாற்றி அமைத்தது.
எதையும் புரிந்துகொண்டு தன்னிச்சையாக நடிக்கக்கூடியவர் பானுமதி. உன்னதமான அவரது நடிப்பாற்றலால் அந்தக் கதாபாத்திரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டு, படம் பார்ப்பவர்கள் மனத்தை உருக்குமாறு செய்துவிட்டோம்.
பானுமதி எவ்வளவு பெரிய நடிகை. அதோடு மிகவும் புத்திசாலி! அந்தக் காட்சியில் தனக்கே முக்கியத்துவமும் பாராட்டும் கிடைக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக, பானுமதியின் ஒத்துழைப்பு குறைந்தது.
நாங்கள் எதிர்பார்க்காத இந்தச் செயல், பானுமதி மீது எங்களை ஆத்திரப்பட வைத்தது. எங்கள் எண்ணம் ஈடேறாத வகையில் அவரது நடவடிக்கைகள் அமைந்தன’ - கிருஷ்ணன் - பஞ்சு.
அடுத்து, தட்டுத் தடுமாறி, தயங்கிக்கொண்டே அப்பச்சியிடம் பானுமதியின் முடிவைத் தெரிவித்தார்கள்.
‘இத்தனை நாள்கள் அருமையாக நடித்து, அற்புதமாக ஒத்துழைத்த பானுமதி நடுவில் விலகுகிறேன் என்றால், அதற்கு ஏதாவது காரணம் இல்லாமல் இருக்காது. எதற்காக அவர் செட்டை விட்டுப் போனார்? அதை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு வாருங்கள்’ என்று சொல்லி, படைப்பாளிகளையும், வசனகர்த்தா கே.எஸ். கோபாலகிருஷ்ணனையும் பானுமதியின் வீட்டுக்கு அனுப்பினார்.
தூரம் அதிகமில்லை. ஏவி.எம்.முக்கு அடுத்தது பானுமதியின் பரணி ஸ்டுடியோ. அதன் உள்ளேயே, நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களாவில் பானுமதி குடியிருந்தார்.

பானுமதியை அவரது சொந்த வீட்டிலேயே சந்திக்கப்போவது குறித்து, அந்த மூன்று மீசைகளுக்கும் உதறல், அச்சம், பயம், நடுக்கம், தயக்கம், தடுமாற்றம், பதற்றம் அத்தனையும் முகத்தில் படர்ந்தது. ஏதோ தப்பு செய்துவிட்டு, ஹெட்மாஸ்டரிடம் சிக்கிக்கொண்ட பள்ளிப்பிள்ளைகளாக வியர்வையைத் துடைத்தார்கள்.
நல்லவேளை. அவர்கள் நினைத்த மாதிரி, 111 டிகிரி உச்சி வெய்யிலாக பானுமதி தகிக்கவில்லை. அவர்களுக்குக் குடிக்கக் குளிர்ச்சியாக பானங்கள் தந்து அன்புடன் உபசரித்தார்.
லேசாகத் தெம்பு வந்தது. ஆனாலும் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்கிற யோசனையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
வருஷக்கணக்கில் ஓடிய வெற்றிப்படங்களை வழங்கியவர்கள். பானுமதி என்கிற நடிப்புப் பிரவாகத்துக்கு அணை போட முடியாமல், அவர்கள் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தார்கள்.
பானுமதியே பேச்சை தொடங்கினார்.
‘என்ன விஷயமா வந்திருக்கீங்க...?’
மூவரில், பஞ்சு மெல்ல ஆரம்பித்தார்.
‘காலையில், நீங்கள் இனி அன்னையில் நடிக்கமாட்டேன் என்று சொன்னீர்கள். அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள செட்டியார் எங்களை அனுப்பி இருக்கிறார்...’
‘யாருக்குப் பாசம் அதிகம்? பிள்ளையைப் பெற்றவளுக்கா, இல்லை வளர்த்தவளுக்கா. இதானே அன்னை கதையோட மெயின் மேட்டர்?’ என்று சீரியஸாக கேட்டார் பானுமதி.
‘இன்னிக்கு என்ன சீன் எடுத்தீங்க...? அதுல சவுகார் ஜானகி கடைசியா பேசின டயலாக் என்ன?’
‘‘என் புருஷன் உயிருக்குப் போராடிட்டு இருக்கிறப்ப, நீ என் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு வெளியூர் போறதா சொல்லி கிளம்பிப்போனியே... அப்ப, நான்தாண்டா உன்னைப் பெத்த அம்மான்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நான் பெத்த புள்ள உன்கூட வந்திருப்பானா...?
அந்த நேரத்தில்கூட என் தாய்ப்பாசத்தை அடக்கிக்கொண்டேனே. அவன் என் பிள்ளைன்னு சொல்லிக்க, அதைவிடவா எனக்கு ஒரு சந்தர்ப்பம் வரப்போகுது..!’’
‘எனக்குத் தங்கையா நடிக்கிற சவுகார் ஜானகி. அந்த வசனங்களை அற்புதமான பாவத்தோட சொல்லி அனாயாசமா நடிச்சிட்டாங்க. நான் அதுக்கு ஈடுகொடுக்க முடியாம சிலை மாதிரி நின்னுட்டேன். அதோட அந்தக் காட்சியை நீங்க முடிச்சிட்டீங்க.
‘இனிமே படத்துல என் அக்கா கேரக்டர் நிக்கவே நிக்காது. அது காலையிலேயே சவுகார் நடிப்புல சுக்கு நூறாயிடுச்சி.
‘அடுத்து என்னதான் நான் உசுர கொடுத்து நடிச்சாலும், படத்துல அது எடுபடாது. அங்கேயே என் கேரக்டர் டம்மியாயிடுச்சி. அக்காவா நான் தொடர்ந்து நடிச்சி, இனிமே எந்தப் பிரயோசனமும் கிடையாது’.
பானுமதி, சாமி வந்தவர்போல் ஓர் ஆட்டம் ஆடித் தீர்த்ததும், மூன்று வேட்டிகளும் சுனாமியில் அவிழ்ந்ததுபோல், பிரக்ஞையற்றுப் போனார்கள்.
நிஜத்தில், தன் சாதூர்யமான வாதத்தால், அம்மூவரையும் பானுமதி கொன்றேவிட்டார்.
இன்றோடு அன்னை அவ்வளவுதானா? தமிழ் சினிமாவுக்கே மகுடம் சூட்டப்போகும் உன்னத சித்திரத்தை உறையில் போட்டு மூடிவிடச் சொல்லுகிறாரா பானுமதி...?
பஞ்சுவுக்குப் பற்றி எரிந்தது. ஆனாலும், தேன் தடவிய சொற்களால் பானுமதிக்கு உடுக்கை அடித்தார்.
‘மேற்கொண்டு அன்னையை உயர்த்திக் காண்பிக்க என்ன செய்யலாம். அதையும் நீங்களே சொல்லுங்கள்...?’
‘இப்ப நான் சொல்லப்போறதை நீங்க நல்லா புரிஞ்சிக்கணும். ‘அன்னை’ நீங்க நினைக்கிற மாதிரி சக்ஸஸ் ஆகணும்னா, என் கேரக்டர் நிச்சயம் ஜெயிச்சாகணும். சவுகாராடோ தங்கச்சி வேஷத்துக்கு முன்னால என் ரோல் தோத்துச்சின்னா, மொத்தப் படமும் சின்னாபின்னமாகி ஃபெயிலியர் ஆயிடும்.
‘ஜானகி பேசின வசனத்துக்கு மேலே, நிறைய ஸ்கோப்புள்ள டயலாக்கை பேசி நான் பதிலடி கொடுத்தால் ஒழிய, ஜனங்க ரசிக்க மாட்டாங்க’.
பானுமதியின் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால், அதற்கு ஏற்கெனவே அமைத்த திரைக்கதையில் சாத்தியம் கிடையாது. புதிதாக யோசிக்க வேண்டும்.
‘தங்கையான ஜானகி, தாய்ப் பாசத்தின் வீரியத்தைக் கொட்டித் தீர்த்த பின்பு, அக்கா பானுமதி பேசி ஜெயிக்க என்ன இருக்கிறது...! எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்றார் பஞ்சு, நிதானமாக.
பானுமதி விடவில்லை.
‘எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கோபாலகிருஷ்ணனால் இன்னும் சிந்தித்து நன்றாக எழுத முடியும். நீங்க அனுமதிச்சா, அவரிடமிருந்து அக்காவுக்கான டயலாக் பேப்பரை நான் வரவழைத்துக் காட்டுகிறேன்’.
‘சண்டிராணியாகி’ பானுமதி சவால் விட்டார். ஏவி.எம்.முக்கு பானுமதியின் ஃபோனிலிருந்தே தகவல் போனது. மெய்யப்பனுக்கு இழந்த ஐஸ்வர்யம் திரும்பி வந்ததைப்போல் இருந்தது.
கோலிவுட்டில் மிகப்பெரிய கர்வி, மகா திமிர் பிடித்தவர், அகம்பாவம் நிறைந்தவர், ஆணவக்காரி என்று எல்லோராலும் சகஜமாக விமர்சிக்கப்பட்டவர் சாட்தாத் பானுமதி.
கதாசிரியருக்குக் கற்பனைச் சிறகுகள் விரிய வேண்டும் என்பதற்காக, மிகச் சிறந்த திரை ஆவணம் ஒன்று உருவாக வேண்டும் என மெனக்கெட்டு,
‘உங்களுக்கு என்ன தேவை என்றாலும் சொல்லுங்கள். என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். நல்ல விஷயம் வந்தாக வேண்டும்’ என்று சொல்லி,
கோபாலகிருஷ்ணனிடம், காபி, வெற்றிலைப் பாக்கு, மூக்குப் பொடி இம்மூன்றையும் தனது கைகளாலேயே எடுத்து மாறி மாறி நீட்டி, அவரை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்.
மெய்யப்பன் உள்பட அவரது மொத்த சகாக்களும், அதுவரையில் சரித்திரம் காணாத மிக அபூர்வமான காட்சியைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.
‘அன்னை’ செட்டில் மீண்டும் லைட்ஸ் ஆன்.

‘ஒரு தாய் பல பிள்ளைகளைப் பெறலாம். அத்தனை பேருக்கும் தனது அன்பையும் பாசத்தையும் பகிர்ந்தளிக்கலாம். அப்படியொரு சக்தி மாதாவுக்கு உண்டு.
‘ஆனால், ஒரு பிள்ளைக்கு இரண்டு அம்மாக்கள் இருக்கவே முடியாது. அவர்கள் இருவராகப் பொழியும் நேசத்தை, ஒற்றை மகனால் சுமக்கவே முடியாது.
‘அந்தப் பிள்ளை ஜீவனோடு நடமாட வேண்டுமானால், ஒரே ஒரு தாயார் மட்டுமே இருக்க முடியும். அந்த ஒரே ஒரு அம்மா நம்மில் யார், நீயா… நானா...? என்பதை நீயே முடிவெடுத்துக்கொள்’.
மனக்கொந்தளிப்பில் உண்டான அனல் விநாடிகளின் உச்சக்கட்டத்தில், அக்கா பானுமதியின் எரிமலைத் தாக்குதலால், தங்கை சவுகார் ஜானகி திடுக்கிட்டு நின்றுவிடுவதாக அக்காட்சி முடிந்தது.
கோபாலகிருஷ்ணன் எழுதிய வசனங்களை தெளிவு, தீர்க்கம், அழுத்தம் திருத்தமாக, ஆவேசத்துடன் பேசி நடித்த பானுமதியை, செட்டியார் உள்பட ஒட்டுமொத்த அரங்கமும் கைத்தட்டல்களால் உள்ளம் குளிரச் செய்தது.
1962, டிசம்பர் 15. வெலிங்டன் தியேட்டரில், முந்தானைகள் கண்ணீர் மழையில் முழுக்க நனைந்தன. அழுது அழுது தாய்க்குலங்களின் கண்களும் முகமும் சிவந்தன.
யுவதிகள், கிழவிகள் என்றெல்லாம் விதிவிலக்கு கிடையாது. அங்குமாத்திரம் அல்ல. ஒட்டுமொத்த தமிழக மகளிரும், ஒரேயடியாக பானுமதி நடித்த அன்னை படத்தைப் பார்த்துவிட்டு பகிரங்கமாகவே விம்மினர்.
சிவாஜி - சாவித்ரிக்கு எப்படி பாசமலரோ, அப்படி பானுமதிக்கு அன்னை. பாசமலரிலாவது இரு திலகங்களும் வெற்றியைப் பகிர்ந்துகொண்டார்கள். அன்னை, ஒன் உமன் ஆர்மி!
அதிலும், வளர்ப்பு மகன் விபத்துக்குள்ளாகி வீட்டிலேயே சிகிச்சை பெறும் நேரத்தில் - பானுமதியின் நடிப்பு, இனி வரும் நூற்றாண்டுகளுக்கும் கட்டாயக் கலைப்பாடம்!
1. உறங்கும் பிள்ளையின் காதுகளில் சத்தம் விழக்கூடாது என்று டக்டக் பூட்ஸுடன் வரும் நர்ஸை, சிடுசிடுப்புடன் விரலைக் காட்டி வெளியேற்றுவதும்…
2. ரயில் சத்தம் கேட்கக் கூடாது என்று மெல்லப் போய் ஜன்னலைச் சாத்திவிட்டு வருவதும்…
3. கடிகாரத்தில் டிக் டிக் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு, அடி மேல் அடி வைத்துச் சென்று, பெண்டுலத்தை நிறுத்திவிட்டு வருவதுமாக…
‘பானுமதி, நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை’ என்று பேரறிஞர் அண்ணாவை வாயார மனமார சொல்லவைத்தார்.
‘சிவாஜிக்கு ஈடு யார் என்று எங்கெங்கோ தேடினோமே, இதோ நான் இருக்கிறேன் என்கிறார் பானுமதி. க்ளைமாக்ஸில் மகனுக்கு உண்மை தெரியும்போது, தூணைப் பிடித்துக்கொண்டு அழுகிறாரே… அந்த ஒரு இடத்தில்தான் நடிப்பை மறந்துவிட்டார். அன்னை மெல்ல ஊர்கிறாள். ஆனால், பானுமதி வேகமாக உயர்ந்துவிட்டார்’
என்று ‘குமுதம்’ தனது அன்னை பட விமர்சனத்தில், பானுமதியை சிகரத்தில் தூக்கி நிறுத்தியது.

அவர்கள் மாத்திரம்தானா?
அன்னையின் ஹிந்திப் பதிப்பில், எஸ்.வி. ரங்காராவ் வேடத்தில் நடிக்க வந்தவர், வடக்கின் பிரபல குணச்சித்திர நடிகர் பால்ராஜ் சஹானி. அன்னை படத்தைப் பார்த்துவிட்டு, பானுமதிக்கு அவர் கடிதம் எழுதினார்.
‘அன்னை படத்தை நான் பார்ப்பது இது மூன்றாவது முறையோ என்னவோ. எனக்குத் தமிழ் மொழி தெரியாவிட்டாலும், இன்னும் ஒரு டஜன் தடவையாவது அன்னை படத்தைப் பார்ப்பேன் - உங்களது சிறப்பான நடிப்புக்காகத்தான்.
‘நீங்கள் வேறு படங்களில் இதைவிடச் சிறப்பாக நடித்து வரலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அன்னை படத்தில் உங்கள் நடிப்பு சிறப்பானது மட்டுமல்ல; மிக மிக உயர்வானது.
‘அநேக காட்சிகளில் வாய் திறந்து வசனம் எதுவும் பேசாமல், பார்வையாலும், நடை உடை பாவனைகளாலும் நீங்கள் வழங்கியிருக்கும் நடிப்பு பற்றி தரமான விமர்சகன் ஒரு புத்தகமே எழுதலாம். எனது பாராட்டுதல்கள் மட்டும் உங்கள் நடிப்புக்கு ஒரு பரிசாகி விடாது. மேல் நாட்டுப் படங்களில்கூட, மிக அபூர்வமாகத்தான் இம்மாதிரியான உயர்தரமான நடிப்பை நான் பார்க்க முடிந்திருக்கிறது’.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...