ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பானுமதி: 6. அம்மா... உங்க கூட டூ !

1957ல் பானுமதி நடித்த நாலு தமிழ்ப் படங்களிலும் நடிகர் திலகம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்தார். நான்கும் நாலு ரகம்.

News image
Updated On :1 ஜனவரி 2016, 9:21 am

பா. தீனதயாளன்

1957ல் பானுமதி நடித்த நாலு தமிழ்ப் படங்களிலும் நடிகர் திலகம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்தார். நான்கும் நாலு ரகம்.

பிப்ரவரி 27ல் வெளியானது மக்களைப் பெற்ற மகராசி. தமிழ் சினிமாவின் முதல் வட்டார மொழிச் சித்திரம்! நன்றாக வசூல் செய்தது. ஏறக்குறைய ‘தாய்க்குப் பின் தாரம்’ போலவே, குடும்பத் தகராறில் காதலர்கள் பிரிவதும் க்ளைமாக்சில் ஒன்று சேர்வதுமாக கதை.

கொங்கு நாட்டு பாஷை பேசும் செங்கோடனாக சிவாஜியும், அவரது முறைப்பெண் பொன்னுரங்கமாக பானுமதியும் நடித்தார்கள்.

‘போறவளே போறவளே பொன்னுரங்கம்’ டி.எம். சவுந்தரராஜனும் பானுமதியும் பாடிய மண் மணக்கும் காதல் கீதம்! மார்ச் 57ல் அதைப் பாடி அன்று வீதிகளில் எத்தனை பேர் டீசிங் கேஸில் மாட்டினரோ தெரியாது.

-----------------

பானுமதி அசோகனை ஹீரோவாக்கி மணமகன் தேவை என்ற படத்தைத் தொடங்கினார். பரணி பிக்சர்ஸ் தயாரிப்புகள் பொதுவாகவே மிகக் குறைந்த செலவில் உருவாகும். எதிலும் அகலக்கால் வைப்பது ஆகாது பானுமதிக்கு.

மணமகன் தேவை முழு நீள காமெடி ஃபிலிம். பானுமதி தன்னை மையப்படுத்தியே திரைக்கதையை உருவாக்கி இருந்தார். அவருக்கு முன் அசோகன் எம்மாத்திரம்! அதுவும் நாயகனாக...?

அசோகனை அப்புறப்படுத்தி விட்டு சிவாஜி கணேசனை தனக்கு ஜோடியாக்கினார். கணேசனும் பானுமதி மேல் உள்ள அபரிதமான மதிப்பின் காரணமாக, மணமகன் தேவையில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

கணேசனுடன், சந்திரபாபு, டி.ஆர். ராமச்சந்திரன், ஏ. கருணாநிதி என்று ஹாஸ்ய நடிகர்களும் நடித்தனர். பானுமதியின் தங்கையாக தேவிகா மணமகன் தேவை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

டைட்டிலில் தேவிகா என்று பெயர் வராது. பிரமீளா என்று போடுவார்கள். தேவிகாவின் ஒரிஜினல் பெயர் அது.

கொடுமையான கோடையில் ஜில்லிப்பாக மணமகன் தேவை மே 17ல் வெளியானது.

Story image

‘மணமகன் தேவை -‘ஸினோரிட்டா’ ஆங்கிலப்படத்தின் தழுவல் என்றது ஆனந்த விகடன் விமர்சனம். படத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் பானுமதியை வெகுவாகப் பாராட்டி எழுதியது.

சேகர் ‘கஷ்டமான வேஷத்தை பானுமதி இஷ்டமா நடிச்சிருக்கா. அவளே படம் எடுத்து ஆடியிருக்கா. ஸினோரிட்டா வைரம். இது இமிடேஷன். இட்லி சாம்பாருக்குப் பதில், கேக் சட்னி மாதிரி இருந்தது. நம்ம படமாகவே தெரியவில்லை. நம்ம ஊருக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தல்லே’.

சுந்தர் - ‘போகட்டும் டான்ஸ் ஏதாவது... ’

சேகர் - ‘பானுமதி டான்ஸ் ஆடாம இருப்பாளா’?

சுந்தர் - ‘சரி, பானுமதி பாட்டு எப்படி’?

சேகர் - ‘அதுக்கென்ன குறைச்சல்? ஸ்வரம் கூடப் பாடியிருக்கா. ஆனால் அதைக் காட்டிலும் அற்புதமா நடிச்சிருக்கா’.

கதையிலே ஒரே பெண் இரண்டு வேஷத்திலே நடிச்சிருக்காள் என்பதை, அவள் மாதிரி வேறு யாராலும் நடித்திருக்க முடியாது. பரிசு பெற்ற நடிகையில்லையா’?

சுந்தர் - ‘போதும்டா ! ஒரேயடியா பானுமதியையே புகழ்ந்து கொண்டிருக்காதே. என்னடா பானுமதியைப் பத்தி பக்கம் பக்கமா சொன்னே, சிவாஜி கணேசன் எப்படியிருக்கார்? ’

சேகர் - ‘ஏதோ வர்றார்,பேசறார், போறார் அவ்வளவுதான்.’

சந்தர் - ‘ஏன், நல்லா நடிக்கலியா?’

சேகர் - ‘அதுக்கு ஸ்கோப் இல்ல. கதை அப்படி. தனக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது என்பதற்காகத்தானே பானுமதி இந்தக் கதையையே தேர்ந்தெடுத்திருக்கா!’

சந்தர் - ‘ஓ, அப்படியா கதை. நாளைக்கு எங்க கிராமத்துக்குப் போறேன். அங்க பார்த்துடறேன்.’

சேகர் - ‘டேய், இந்தப் படம் கிராமத்திலே எல்லாம் ஓடாது. பார்க்கிறதுன்னா இங்கேயே பார்த்து விடு!’

------------------------------------------
ஒரே படத்தில் பத்தாயிரம் அடிகள் எம்.ஜி.ஆருடன் நடித்து முடித்து விட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து அதே டாக்கியில் சிவாஜியுடன் நடித்த வித்தியாசமான அனுபவம் பானுமதிக்கு ஏற்பட்டது.

ஏராளமான வெற்றிச் சித்திரங்களின் கதாசிரியர், வசனகர்த்தா, ‘வாங்க மச்சான் வாங்க’, ‘சொக்கா போட்ட நவாபு, ஜாலிலோ ஜிம்கானா...’ போன்ற சூப்பர் ஹிட் குத்துப் பாடல்களின் ‘பிதா மகன்’ தஞ்சை ராமையாதாஸ். ஆரூர்தாஸின் ஆசான்! அவரது தயாரிப்பு ராணி லலிதாங்கி.

எம்.ஜி.ஆர். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து,

‘ஆண்டவனே இல்லையே தில்லை தாண்டவனே உன் போல் ஆண்டவனே இல்லையே’ என்று பாடி நடிக்க வேண்டும்.

‘மூட நம்பிக்கை கருத்துகள் வருகிறது. தி.மு.க. கொள்கைகளுக்கு விரோதமாக நடிக்க மாட்டேன்’ என்று விலகி விட்டார்.

எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட மோதலினால் நின்று போனவை நிறையவே உண்டு. ‘புரட்சி நடிகரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்...!’ என்று ராமையாதாஸூக்கும் ரகசிய எச்சரிக்கைகள் வந்தன.

வற்றாத தனது தமிழ்ப் புலமை மீது சபதம் செய்து, அதே படத்தை சிவாஜியை வைத்து எடுத்து முடித்து வெற்றி கண்டார் ராமையா தாஸ்.

எம்.ஜி.ஆருக்கு எதிரான சவாலில் ராமையா தாஸ் ஜெயிக்க ஒத்துழைத்தவர் பானுமதி .

பானுமதியைத் தவிர வேறு நாயகி லலிதாங்கியில் நடித்து இருந்தால், எம்.ஜி.ஆருக்குப் பயந்து அவர்கள் அதில் தொடர்ந்து நடிக்காமல் போயிருப்பார்கள். அல்லது எம்.ஜி.ஆரே நடிக்காதே என்று சொல்லி தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

அது முடியாமல் போகவே ‘நான் நடித்த கதையில் எப்படி சிவாஜியை வைத்து மீண்டும் எடுக்கலாம்...?’ என்று ராமையாதாஸூக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

ராமையாதாஸ் தமிழால் தக்கப் பதில் தந்தார். ‘நீங்கள் நடித்தது லலிதாங்கி. நான் தயாரித்துக் கொண்டிருப்பது ராணி லலிதாங்கி’.

Story image

ராணி லலிதாங்கி செப்டம்பர் 21ல் வெளியானது.

இத்தனை கலாட்டாக்களும் தெரிந்தவர் தி.மு.க. தலைவர் அண்ணா. ராணி லலிதாங்கியில் சிவாஜி ஆடிய பரதத்தைப் பார்த்து மனமாரத் தன் நண்பர்களிடம் பாராட்டினார்.

----------

யார் கண் பட்டதோ தெரியவில்லை. மணமகன் தேவையில் என்ன இடையூறு நேர்ந்ததோ...?

பானுமதியும் நடிகர் திலகமும் அம்பிகாபதி படப்பிடிப்பில் டூ விட்டுக் கொண்டார்கள். அதை நேரில் பார்த்த கதாசிரியர் மா. லட்சுமணன் எழுதியவை:

‘நள்ளிரவில் அந்தப்புரத்தில் அம்பிகாபதி நூல் ஏணியின் வழியாக ஏறி, அமராவதியின் அறைக்கு வருவார்.

தடைகளை மீறி காதலர்கள் சந்திக்கும் போது காதல் எல்லை தாண்டும். கண்கள் குளமாகும். உடல் எங்கும் பரவசம் புகுந்தோடும்.

இந்தக் காட்சியை சிவாஜியிடம் சொன்ன போது,

‘நல்ல சீன் தான். ஆனால் நான் நூலேணி வழியா மாடிக்கு வந்து, ‘அமராவதி’ன்னு சொல்லி காதலோடு நெருங்கறேன்னு வெச்சுக்குங்க, அடுத்த ஸ்டெப்பா அவங்க கைகளை என் கைகளோடு சேர்த்துப் பிடிச்சிருக்கிறேன்னு வெச்சுக்குங்க...

அதுக்குள்ள அமராவதியா நடிக்குற அந்தம்மா,

‘வெடுக்குன்னு’ கையை உதறிடுவாங்க. அதை விட நான் கையைப் பிடிக்காமலே ‘ஆக்ட்’ பண்ணிடறேன் என்றார்.

‘இருங்க அந்தம்மா (பானுமதி) கிட்டயும் பேசிட்டு வந்துடறோம்’ என்றேன்.

நேராக பானுமதியிடம் போனேன். ‘ அம்மா... படத்துல முக்கியமான உணர்வு பூர்வமான சீன் இது. ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ...’ மாதிரி அந்த சீன் அமையணும். அது உங்க ரெண்டு பேரோட நடிப்பில் தான் இருக்கு.

அந்த சீன்ல வர்றது சிவாஜியும் பானுமதியும் இல்ல. அம்பிகாபதியும் அமராவதியும்’ என்றேன்.

‘நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்.’

மறுநாள் ஒரே டேக்கில் அந்தக் காட்சி ஓகே ஆனது.

தங்களுக்கிடையேயான சிற்சில பேதங்களை மறந்து, சிவாஜியும் பானுமதியும் அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்தார்கள்.’

அம்பிகாபதி 1957 தீபாவளிக்கு வெளியானது. ஜி.ராமநாதனின் அதி அற்புதமான கர்நாடக இசை வெள்ளத்தில் ‘மாசிலா நிலவே,’ சோகத்துக்குரிய முகாரி ராகத்தில் வாடா மலரே தமிழ்த் தேனே! என்று இரு டூயட்கள். பானுமதி பிரமாதமாக பாடி இருந்தார்.

தவிர படத்தில் இடம் பெற்ற கண்ணதாசனின் ஒரே பாடல், ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே!’ பானுமதியின் குரலில் இன்றும் உங்கள் விருப்பத்தில் இடம் பிடிக்கிறது.

அந்தப் பாடலை பானுமதி பாட திரையில் ஆடியவர் ராஜ சுலோசனா. பானுமதி பயங்கர பிசி. இருவரையும் சேர்த்துப் பாடலை எடுக்க முடியாத சூழல். ராஜ சுலோசனாவின் நாட்டியத்தைத் தனியே படமாக்கி இணைத்தார்கள்.

Story image

1939 முதல் 18 வருடங்களாக தென்னகத்தில் தனிக்காட்டு ராணியாக வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவர் பானுமதி. மெல்ல மெல்ல அவரிடம் பருவம் பறி போனது.

1954ல் மலைக்கள்ளன் படத்தில் ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ பாடல் காட்சி. பாவாடை தாவணியில் பானுமதி குதிரை மீது ஏறி சவாரி செய்த படி இருக்க, எம்.ஜி.ஆர். லகானைப் பற்றி அழைத்து வருவார். தியேட்டரில் அதைப் பார்த்ததும் கொல்லென்று சிரிப்புச் சத்தம் எழும்.

1957ல் ‘ஆனந்த விகடன்’ சினிமா விமர்சனங்கள் வெளிப்படையாக பானுமதி ‘நேற்றுப்பூ’ என்பதைச் சுட்டிக் காட்டின.

‘மக்களைப் பெற்ற மகராசி’ பற்றி எழுதுகையில்:

‘மீனாட்சி அம்மாள்- அந்தப் பொம்புளை பேர் என்ன? பானுமதியா? முகத்தைப் பார்த்தாக் கொஞ்சம் வயசானா மாதிரி தெரியுது; இருந்தாலும் அவ ஆடறதும்... ஓடறதும்... குதிக்கறதும்...

கணேசன் வண்டி ஓட்டிக்கிட்டு வருது. பானுமதி குறுக்கே வரா. ஒருத்தருக்கு ஒருத்தர் தகராறு செய்றாங்க. ‘உன் சர்கோஸெல்லாம் நம்ம கிட்டே காட்டாதே’ன்னு செங்கோடன் சொல்றதும், ‘உன் பயாஸ்கோப்பெல்லாம் நம்ம கிட்டேப் பேசாதே’ன்னு அந்தம்மா சொன்னதும் நல்லா இருந்துச்சு.’

ராணி லலிதாங்கி விமர்சனத்தில்

முனுசாமி- ‘பானுமதி நல்லா நடிச்சிருப்பாங்களே!’

மாணிக்கம்-‘பெண்கள் எத்தனை வயசு வரைக்கும் ஹீரோயினா நடிக்கலாம் அண்ணே?’

முனுசாமி- ‘சினிமாவிலே தான் பெண்களுக்கு வயசே கிடையாதே!’

அம்பிகாபதி விமர்சனத்தில் இன்னும் கடுமையாகச் சாடியது:

முனுசாமி - ‘குலோத்துங்க சோழன் மகள் குலேபகாவலி ஆட்டம் டிரஸ் பண்ணிகிட்டு வந்து நிக்குது. ரெண்டு பேரும் கூச்சமில்லாமே நெருங்கிப் பழகறாங்க! தாயும் மகனும் கொஞ்சி விளையாடற மாதிரி இருந்துச்சு.’

மாணிக்கம் - ‘போங்கண்ணே! உங்களுக்கு வயசாயிடுச்சி. சிவாஜி- பானுமதி ஜோடியைக் கூட குறை கூற ஆரம்பிச்சிட்டிங்க.’

--------------

நடிகர் திலகமும் நடிப்பின் இலக்கணமும் இணைந்து பத்துப் படங்களில் நடித்திருக்கிறார்கள். அவை

1.கள்வனின் காதலி 2.தெனாலி ராமன் 3.ரங்கோன் ராதா 4.மக்களைப் பெற்ற மகராசி 5.மணமகன் தேவை 6.ராணி லலிதாங்கி 7.அம்பிகாபதி 8.சாரங்கதாரா 9.ராஜ பக்தி 10. அறிவாளி

1955ல் கள்வனின் காதலி, 1956ல் ரங்கோன் ராதா, 1957ல் அம்பிகாபதி என்று மூன்று தீபாவளிகளில் தொடர்ந்து சாதனை முத்திரை பதித்து, ஹாட்ரிக் அடித்த ஒரே சினிமா ஜோடி அவர்கள் மாத்திரமே!

பானுமதி பிறப்பால் ஆந்திரத்தின் ஆளுமை மிக்க மங்கை ! இருந்தும், 1997ல் இந்திய சுதந்தரப் பொன் விழாவின் போது அவரது நேர் காணலில் என்னிடம்,

‘ஏ. நாகேஸ்வர ராவை விட சிவாஜிக்குத்தான் தாதா சாகிப் பால்கே விருதை முன்னதாக வழங்கியிருக்க வேண்டும். இத்தகைய உயர்ந்த விருதுகளை கலைஞர்கள் நல்ல ஆரோக்யத்தோடு வாழும் நிலையிலேயே வழங்க வேண்டும்.’ அவர்கள் உடல் நலிவுற்ற பின்பு கருணையோடு வழங்கத் தேவையில்லை’ என்று மிக வீரியமாக சிவாஜிக்காக ஓங்கிக் குரல் கொடுத்தார்.

சிவாஜியுடனானத் தனது அரிதார அனுபவங்களை இனிக்க இனிக்க சுவாரஸ்யமாக கூறியுள்ளார் பானுமதி:

Story image

‘பலதரப்பட்ட படங்களில் நான் நீண்ட காலமாக வெவ்வேறு நடிகர்களுடன் நடித்து வந்திருக்கிறேன். எல்லா ஹீரோவும் என் கிட்டே நெருங்கப் பயப்படுவாங்க. ஏன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட என் கிட்ட மரியாதையோட ஒரு தூரத்திலதான் இருப்பாங்க.

30 வயசிலேயே நான் என்னை விடப் பெரியவங்களுக்கும் ‘அம்மா’ ஆயிட்டேன். ‘சரி, இதுவும் ரொம்ப சவுகரியமா போச்சுன்னு’ நெனச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் சிவாஜியும் என்னை ‘அம்மா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சார்.

சிவாஜி நான் நடித்த ஸ்வர்க்கஸீமா படத்தை 18 தடவை பார்த்தாராம். அதை சந்தோஷமாகச் சொல்லி, என்னையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். சிவாஜி என்னை விடச் சின்னவர். அவரைத் ‘தம்பி’ என்று தான் அழைப்பேன்.

எனது இந்த நெடிய அனுபவத்தில் சிவாஜி கணேசன் போன்ற திறமை மிக்க நடிகரை நான் சந்தித்ததே இல்லை.

சிவாஜி கணேசன் ஒரு பிறவி நடிகர். மாறுபட்ட உணர்ச்சிகளை மின்னல் வேகத்தில் மாற்றி வெளிக்காட்டக் கூடிய அபூர்வ ஆற்றல் பெற்றவர்.

கணேசனுடன் நான் நடித்த படங்களில் ‘மக்களைப் பெற்ற மகராசி, ரங்கோன் ராதா’ இரண்டையும் என்னால் மறக்கவே முடியாது.

குறிப்பாக ரங்கோன் ராதாவில் எங்கள் இருவர் மீதே முழுக்கவனம் செலுத்திப் படமாக்கினார்கள். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர், ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரங்களைப் புரிந்து கொண்டு நடிக்க ஆரம்பிக்கும் போது, செட்டில் வேலை செய்பவர்கள் எங்கள் நடிப்பைக் கண்டு ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுவே அவர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்து விடும்.

Story image

நான் எந்தப் படத்தோட ஷூட்டிங் என்றாலும் கொஞ்சம் லேட்டாகத்தான் போவேன். அதை சிவாஜி பல படங்களில் கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் எங்க கம்பெனி தயாரித்த மணமகன் தேவை படத்தில் நானும் சிவாஜியும் நடித்தோம்.

அன்றைய படப்பிடிப்புக்கு சிவாஜி உள்பட எல்லாரும் வந்தாச்சு.வழக்கம் போல் நான் மட்டும் லேட். அப்ப சிவாஜி என் கணவர் கிட்ட, ‘அம்மா மத்த கம்பெனி ஷூட்டிங்குக்குத்தான் லேட்டா வராங்கன்னு பார்த்தா, உங்க கம்பெனிக்குமில்ல லேட்டா வராங்க’ என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார்.

அதை சிரித்துக் கொண்டே என் கணவர் என்னிடம் சொல்ல, நான் வாய் விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

எனக்கு கிடைச்ச அபூர்வ சிநேகிதி சிவாஜி மனைவி கமலா அம்மாள். அவங்களுக்கு என் மேல் ரொம்ப அபிமானம் உண்டு. எனக்கும் அவங்கன்னா பிரியம்.

இந்த அன்பு அதுவரைக்கும் எந்த சினிமாக் கலைஞர் வீட்டுக்கும் போகாத என்னை சிவாஜி வீட்டுக்கு போக வைத்தது. சிவாஜி உடல் நலம் இல்லாம இருந்தப்போ போய்ப் பார்த்து நலம் விசாரிச்சேன். எப்பவும் எனக்கு நல்ல சிநேகிதி கமலா அம்மாள் தான்.’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.