வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

32. சொர்க்கம் என்பது நமக்கு, சுத்தம் உள்ள நாடுதான்!

லீ ஆட்சிக்கு வந்தபோது, நாடு முழுக்க ஏராளமான குடிசைப் பகுதிகள். பார்க்கும் இடமெல்லாம் குப்பை, கூளங்கள்.

Updated On :14 நவம்பர் 2015, 9:18 am

லீ ஆட்சிக்கு வந்தபோது, நாடு முழுக்க ஏராளமான குடிசைப் பகுதிகள். பார்க்கும் இடமெல்லாம் குப்பை, கூளங்கள். பொது இடங்களில் காலைக் கடன்களை முடிக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள். வீடுகளுக்கு உள்ளே குழந்தைகளோடு சரிசமாக உலாவரும் பன்றிகள்…

சில சமயங்களில், சிங்கப்பூரை நினைக்கும்போது லீ மனத்துக்குள் வெட்கத்தால் தலை குனிவார். ஏகதேசம் ஆடு, மாடுகள், பன்றிகள்போல் என் சகோதர சகோதரிகள் வாழ்கிறார்களே என்று ரத்தக் கண்ணீர் விடுவார். குடிசையிலிருந்து அவர்களைக் குடியிருப்புகளுக்கு மாற்றினால், இந்த அவலத்தை மாற்றிவிடலாம் என்று ஆசைக் கனவுகள் கண்டார். ஆனால், இந்த ஆசைகள் கானல் நீராயின. சேரிகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், பன்றிகளையும் ஆடுகளையும் தங்களோடு குடியிருப்புகளுக்குக் கொண்டுவந்தார்கள். குடியிருப்புகளைச் சேரிகளாக்கிவிட்டார்கள்.

லீக்குப் புரிந்தது, சிங்கப்பூர் மக்கள் சுகாதாரமாக வாழத் தேவை, இடமாற்றமல்ல, மன மாற்றமே. இதற்கு, லீ கைகளில் எடுத்த ஆயுதம், பிரசாரம். ‘இயக்கங்கள்’ என்ற பெயரில் இவற்றை நடத்தினார்.

Story image

1959-ல், பதவியேற்ற சில மாதங்களிலேயே, ‘சிங்கப்பூரை சுத்தப்படுத்தும் இயக்கத்தை’ லீ தொடங்கினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள், ‘ஆசியாவிலேயே, சுத்தத்திலும் ஆரோக்கியத்திலும் முதன்மை பெற்ற நாடாக சிங்கப்பூரை மாற்றும் முயற்சியின் தொடக்கம் இது’ - பலன்கள் ஆச்சரியம் தந்தன.

இயக்கத்தின் ஆரம்ப வெற்றிகள், லீக்கும் அரசுக்கும் அளவில்லாத உற்சாகத்தைக் கொடுத்தன. இன்னும் பெரிய அளவுக்குச் சுத்தத்துக்கான முயற்சிகளை எடுத்துச்செல்ல அரசு முடிவு செய்தது. 1968-ல், தேசிய சுத்தத் திட்டம் ஒன்றை அரசு தீட்டியது. சுகாதார அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், கல்வி அமைச்சகம், கலாசார அமைச்சகம், பொதுப்பணித் துறை, நிறுவன, தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என, சமுதாயத்தின் பல்வேறு வகையினரும் இடம் பெற்றிருந்தார்கள்.

எடுத்துக்கொள்ளும் எதையும் மேலெழுந்தவாரியாக லீ செய்யமாட்டார். முழுக் கவனம், முழு அக்கறை. இந்த இயக்கங்களிலும் இப்படித்தான். மிகக் கவனத்தோடு, நுணுக்கத்தோடு வழிமுறைகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொரு இயக்கத்திலும் மூன்று படிநிலைகள். லீயும், அவரது சக அமைச்சர்களும், நாட்டைப் பாதிக்கும் ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அடுத்து, விளம்பர நிறுவனங்கள் துணையோடு போஸ்டர்கள், நோட்டீஸ்கள், பாடல்கள், கலை நிகழ்ச்சிகளை தயார் செய்வார்கள். மூன்றாம் அம்சமாக, நேரடித் தொடர்புகள், ஊடகங்கள் மூலமாக இந்தச் செய்தியை பொதுமக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். இவை அத்தனையிலும் லீ ஆர்வத்துடன் பங்கேற்றார். பெரும்பாலான இயக்கங்களைத் தொடங்கிவைத்தவர் அவர்தான். லீயே இவ்வளவு ஈடுபாடு காட்டுகிறாரே, ஆகவே இது மிக முக்கியமான சமாசாரம் என்று சாமானியனும் நினைத்தான். பொதுமக்கள் மனங்களில், இயக்கத்தின் செய்தி மிக ஆழமாகப் பதிய, லீயின் பங்கேற்பு முக்கியக் காரணம்.

அக்டோபர் 1. இயக்கத்தின் தொடக்க விழா. 1500 வி.ஐ.பி.கள் பங்கேற்றார்கள். லீ, சுத்தம் குறித்த தன் சித்தாந்தத்தை விளக்கினார், ‘சிங்கப்பூரை நாம் சுத்தமாக்கினால், நோய்கள் குறையும், ஆரோக்கியம் பெருகும், மக்கள் வாழ்க்கை இனிமையானதாகும், தொழில், சுற்றுலாத் துறைகள் வளரும். நம் நாடு பொருளாதார உயர்ச்சி காணும். நம் சமூகம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு தனி சிங்கப்பூரியனும் சுத்தமாக, சுகாதாரமாக வாழ வேண்டும். இதைச் சுமூகமாகச் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால், தேவைப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மூலமாக இதைச் சாதிக்கவும் தயங்கமாட்டோம்’.

Story image

ஒரு வாரத்துக்கு, சிங்கப்பூர் முழுவதும் பிரசாரப் புயல் அடித்தது. சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றின் அவசியத்தை விளக்கும் போஸ்டர்கள், நோட்டீஸ்கள், பதாகைகள், குட்டிப் புத்தகங்கள், ஸ்டிக்கர்கள் பல்லாயிரக்கணக்கில், ஆங்கிலம், மான்டரின், மலாய், தமிழ் என மக்களின் நான்கு மொழிகளிலும் தயாராயின. கடைகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிறுத்தங்கள், திரை அரங்கங்கள், சமூகக்கூடங்கள் என எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன. போஸ்டல் கவர்கள், சினிமா டிக்கெட்கள் ஆகியவற்றில், இயக்கத்தின் கோஷம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

சுகாதாரத் துறை அதிகாரிகளும், நிபுணர்களும், நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களுக்காக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தினார்கள். இளைய தலைமுறையினரின் மனத்தை மாற்றுவது வருங்கால முதலீடு. ஆகவே, மாணவர்கள் மேல் லீ தனிக் கவனம் காட்டினார். பொது இடங்களில் குப்பை போடக்கூடாது, அவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை மாணவர்கள் மனத்தில் அரசு அதிகாரிகள் ஆழமாகப் பதியவைத்தார்கள். பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி, இளம் நெஞ்சங்களில் ஈடுபாட்டை உருவாக்கினார்கள்.

வீடுகள், தொழிற்சாலைகள், வீடுகள், உணவகங்கள், கல்வி நிலையங்கள், பேருந்துகள், பொது இடங்களில் அரசு அதிகாரிகள் திடீர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டார்கள். இடங்களை சுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு அப்போதே பரிசுகள் தந்தார்கள். அதேசமயம், பொது இடங்களை அசுத்தப்படுத்தி, குப்பைகள் போட்டு ‘குற்றம்’ புரிந்தவர்களை கையும் களவுமாகப் பிடித்து போட்டோ எடுத்தார்கள். அவற்றை, நாளிதழ்களிலும் தொலைக்காட்சியிலும் அடிக்கடி காட்டி ‘அவமானப்படுத்தினார்கள்’.

அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து, ஏராளமானோர் மனம் மாறியது. ஆனால், சில விடாக்கொண்டர்கள் மாறவில்லை. அவர்கள் தண்டிக்கப்பட்டனர். சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீஸ் தனிப்படையினர் பொது இடங்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். அசுத்தம் செய்தவர்கள், குப்பை கொட்டியவர்களுக்கு, 500 சிங்கப்பூர் வெள்ளிகள் அபராதம் விதித்தனர். (இது அப்போதைக்குப் பெரிய தொகை.) ஒரு அரங்கத்தில், வரிசையில் நின்று இந்தத் தொகையைக் கட்ட வேண்டும். சுறுசுறுப்புக்கு பேர்போன சிங்கப்பூரில், இந்த அபாரத வசூலிப்பு, அதிக நேரம் நீடிக்கும் வகையில், மந்த கதியில் நடந்தது. குற்றமுள்ள நெஞ்சங்களின் குறுகுறுப்பு அதிகமாக வேண்டும் என்பதற்காகவே, திட்டமிட்டு செய்த தாமதம் இது.

1968-ன் இந்த முதல் சுத்த இயக்கம் மாபெரும் வெற்றிகண்டது. மாயாஜாலம் செய்ததுபோல், தெருக்கள் சுத்தமாயின. இதனால், இந்த இயக்கத்தை, ஒவ்வொரு வருடமும் தொடரும் விழாவாக அரசாங்கம் அறிவித்தது. அதே பாணியில் தொடர்ந்தன, நாடு தழுவிய பல சுத்த இயக்கங்கள் -

1969 - சிங்கப்பூரை சுத்தமாக, கொசுக்கள் இல்லாததாக மாற்றும் இயக்கம்

1970 - சிங்கப்பூரை சுத்தமாக, தூய்மைக்கேடு (Pollution) இல்லாததாக மாற்றும் இயக்கம்

1971 - மரம் நடும் இயக்கம்

1973 - நம் தண்ணீரைச் சுத்தமாக வைத்திருப்போம் இயக்கம்

1978 - கைகளைக் கழுவுங்கள் இயக்கம்

1979 - தொழிற்சாலைகளைச் சுத்தமாக வைத்திருப்போம் இயக்கம்

1983 - நம் கழிப்பிடங்களைச் சுத்தமாக வைத்திருப்போம் இயக்கம்

1984 - நம் பூங்காவைச் சுத்தமாக வைத்திருப்போம் இயக்கம்

1987 - சிங்கப்பூர் நதிகளைச் சுத்தமாக வைத்திருப்போம் இயக்கம்

1987 - பேருந்துகளையும், பேருந்து நிறுத்தங்களையும் சுத்தமாக வைத்திருப்போம் இயக்கம்

1990 முதல், ஒவ்வொரு வருடமும் - சுத்தம், பசுமை வாரம்.

மக்களிடையே சுகாதார உணர்வை ஊக்குவிக்க, உந்துதல் சக்தி தர, அரசாங்கம் பல போட்டிகளை நடத்துகிறது. சுகாதாரமான குடியிருப்புகள், டவுன்ஷிப்கள், கழிப்பிடங்கள் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள். அதே சமயம், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனையும் காத்திருக்கிறது.

இவற்றுள் சில இயக்கங்களை சிங்கப்பூர் தொடங்கியபோது, ‘எச்சில் துப்பாதே’, ‘கை கழுவு’ என்றெல்லாம் சொல்ல ஒரு இயக்கமா… நாட்டின் முதலமைச்சர் இந்தச் சில்லறை வேலைகளிலெல்லாம் நேரத்தை வீணாக்கலாமா என்றெல்லாம் பலர் கேலி செய்தார்கள். லீ அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. தன் நாட்டில் உள்ள குறைகள் என்ன, தன் மக்களுக்கு என்னென்ன தேவை என்று அவருக்குச் சந்தேகமே இல்லாமல் தெரியும்.

Story image

உதாரணமாக, ‘எச்சில் துப்புவதற்கு எதிரான இயக்கம்’. அன்று, கார் ஓட்டிச்செல்லும் டிரைவர்கள், பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள், ஷாப்பிங் போவோர், சாலைகளில் நடப்போர் என எல்லோரும், பொது இடங்களில் எச்சில் துப்புவது பாரம்பரியப் பழக்கமாகியிருந்தது. இதனால், வியாதிகள் பரவும், பொதுநலம் பாதிக்கப்படும், தாங்கள் செய்வது நாகரிகமற்ற, அருவருப்பான செயல் என்கிற உணர்வு, அறிவு ஒருவருக்குமே இருக்கவில்லை. இந்தத் தேசிய ‘நோயில்’ இருந்து நாட்டை விடுவிப்பதுதான் லீயின் முக்கியக் குறிக்கோள்.

எச்சில் துப்புவதால் பரவும் நோய்கள் பற்றி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. லீக்கு இரண்டு அணுகுமுறைகள் உண்டு. நயமான பேச்சால், இனிமையான அணுகுமுறையால் மக்கள் மனங்களை மாற்ற முயற்சி செய்வார். இதற்கு இணங்காதவர்கள் மேல் சட்டம் பாயும், அபராதங்கள் விழும். சிங்கப்பூரில் இருந்து, ரோட்டில் எச்சில் துப்பும் பழக்கம் காணாமல்போனது இப்படித்தான்.

இதேபோல். சூயிங் கம் சாப்பிடுவது நாடளாவிய (கெட்ட) பழக்கமாக இருந்தது. சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை, மென்று முடித்த சூயிங் கம்மை, வீடுகளின் சுவர்கள், கதவுகள், லிஃப்ட்கள், சாவித் துவாரங்கள், தபால் பெட்டிகள், பேருந்துகள், ரயில்கள், பொதுக் கழிப்பறைகள் என சகல இடங்களிலும் ஒட்டிவைப்பார்கள், அல்லது துப்பிவிட்டுப் போவார்கள். கண்றாவிக் காட்சி. அரசின் தடுப்பு முயற்சிகள் எதுவும் அதிகப் பலன் தரவில்லை.

1987-ல், இதில் அதிரடி மாற்றம் கொண்டுவர வேண்டிய அவசியம் வந்தது. பெரும்பான்மை மக்களுக்கான துரிதப் போக்குவரத்து (Mass Rapid Transit System) என்னும் துரித ரயில் முறை தொடங்கியது. இந்த ரயில்களில் சென்சார்கள் இருந்தன. சில விஷமிகள், நுண் உணர்வு கொண்ட இந்த சென்சார்கள் மேல் சூயிங் கம் ஒட்டினார்கள். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவர்களை அரசாங்கம் கைது செய்தது. அபராதம் விதித்தது. ஆனால், குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்வது சுலபமாக இல்லை. ஆகவே, 1993-ல் சூயிங் கம்மையே அரசாங்கம் தடை செய்தது*. சூயிங் கம் வைத்திருந்தாலோ, சாப்பிட்டாலோ, அபராதமும் தண்டனையும் உண்டு. இது குடிமக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளுக்கும்தான்.

Story image

சூயிங் கம் தடைக்குப் பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள். வெளிநாட்டு சூயிங் கம் கம்பெனிகள் கடுமையாக எதிர்த்தன. ஊடகங்கள் எதேச்சாதிகாரச் செயல் என வர்ணித்தன. இங்கிலாந்தின் பிரபல ஊடகக் குழுமமான பி.பி.சி. (B.B.C) நிருபர், சூயிங் கம் மெல்வது கற்பனை வளத்தைப் பெருக்குகிறது. லீயின் முரட்டுத்தனமான சட்டம் இதைப் பாதிக்கும் என்று குறை சொன்னார். இதற்கு லீயின் பதில், ‘ஏதாவது மென்றால்தான் கற்பனை வளரும் என்றால், வாழைப்பழத்தை மெல்லுங்கள். உங்கள் ஆரோக்கியத்துக்கும் அது நல்லது’.

சூயிங் கம் மெல்வது, சாக்லெட் உறை போன்ற குப்பைகள் போடுவது, புகைப்பிடிப்பது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தியபின் ஃப்ளஷ் செய்யாமல் போவது போன்ற பொது இடங்களை அசுத்தம் செய்யும், அசிங்கப்படுத்தும் எல்லாச் செயல்களுக்கும் கடுமையான தண்டனைகள் தொடங்கின.**

முதல் முறை குற்றம் செய்தால் 2000 வெள்ளி அபராதம். இரண்டாம் முறை அதே தவறைச் செய்தால் 4000 வெள்ளி அபராதம். அப்படியும் திருந்தாவிட்டால், மூன்றாம் முறை 10,000 வெள்ளி அபராதம். இவற்றோடு, 12 மணி நேரங்கள் பொது இடங்களைச் சுத்தம் செய்யும் தண்டனையும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சமூக நல விரோதிகள், சமுதாய அமைதியைக் கெடுக்கும் செயல்களிலும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தாலும், அபராதம், சிறைத் தண்டனை ஆகியவற்றோடு இன்னொரு தண்டனையும் உண்டு, அது, பிரம்படி. பொது இடங்கள், தனியார் குடியிருப்புகள், வீடுகள் ஆகிய இடங்களில் கிறுக்குதல், கோஷங்கள் எழுதுதல், போஸ்டர்கள் ஒட்டுதல், கொடியேற்றுதல், பதாகைகள் கட்டுதல் ஆகியவையும் சமூகவிரோதச் செயல்களாகக் கருதப்படுகின்றன. அவற்றுக்கும், திருட்டு, விபசாரம், கற்பழிப்பு போன்ற 30 வகை குற்றங்களுக்கும், பிரம்படி தண்டனை உண்டு. விளாசி, உடலை ரத்தக்களறி ஆக்கிவிடுவார்கள்.***

சிங்கப்பூரின் சுகாதாரத்தைப் பாதித்துக்கொண்டிருந்த இன்னொரு அம்சம், கையேந்தி பவன்கள். மலிவான விலையில் சுவையான உணவு வழங்கியதால், அங்கே மக்கள், குறிப்பாக ஏழை மக்கள் மொய்த்தார்கள். அவர்கள் மட்டுமா, ஈக்களும் மொய்த்தன. எங்கும் எலிகள் நர்த்தனம். உணவுகளும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படவில்லை. இந்த விடுதிகளைச் சோதனை செய்து லைசென்ஸ் வழங்கினால், பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்று அரசாங்கம் நினைத்தது. முயற்சி செய்தார்கள். தீர்வு கிடைக்கவில்லை. கையேந்தி பவன்களை அகற்ற முடிவெடுத்தார்கள். மனிதநேயம் குறுக்கே வந்தது. இந்தக் கடைகள், பல நூறு மக்களின் வாழ்வாதாரம். கடைகளை மூடினால், ஏழைகளுக்குச் சகாய விலை உணவு கிடைப்பதும் பாதிக்கப்படும்.

ஆகவே 1985-ல், Picnic Food Court என்னும் உணவுமையத்தை அரசாங்கமே தொடங்கியது. ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அரங்கில், ஸ்டால்கள். குடிக்கவும் சமையலுக்கும் சுத்தமான தண்ணீர். கழிவுநீர் வெளியேற்ற வசதி. இந்த ஸ்டால்களை, அரசாங்கம் குறைந்த வாடகையில் வழங்கியது. சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட பலவகை உணவுகளின் விற்பனை விலையை அரசு நிர்ணயித்தது. இந்த மையங்கள் பிரபலமாயின. இதனால், 1994 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில், 15 மையங்களை அரசாங்கம் தொடங்கியது. சுமார் 2000 உணவுவிடுதிகள் இவற்றில் இருக்கின்றன. ரோட்டோர கையேந்தி பவன்கள் கிடையாது. இதேபோல், தெரு வியாபாரிகளும் அகற்றப்பட்டுவிட்டார்கள்.

ஒருநாள். லீ தன் அலுவலக ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். சாலையில் கூட்டம் கூட்டமாக மாடுகள் போய்க்கொண்டிருந்தன. வேகமாக வந்த ஒரு கார் மோதியதில், பசு ஒன்று அடிபட்டு இறந்தது. மாடுகள் வளர்த்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். மேய்ச்சலுக்காக மாடுகளைத் தெருக்களில் அலையவிட்டுக்கொண்டிருந்தனர்.

ரோடுகளில் திரியும் கால்நடைகள், சுகாதாரத்துக்கும் போக்குவரத்துக்கும் பிரச்னையாக இருப்பதை லீ உணர்ந்தார். ஜனவரி 31, 1965-க்குப் பிறகு, சாலைகளில் திரியும் காலநடைகள் அத்தனையும் இறைச்சிக்கூடத்துக்குப் போகும் என்று எச்சரித்தார். இந்தக் கெடுவை மீறிய மாடுகள், இறைச்சிக்கூடத்தில் இறுதிமூச்சு விட்டன. 1965 டிசம்பரில், சிங்கப்பூர் சாலைகளில் ஒரு ஆடு, மாடுகூட இல்லை.

மாடுகளைப்போல், இன்னொரு பிரச்னை, பன்றிகள். சீனர்கள், பன்றிக்கறிப் பிரியர்கள். எல்லா வீடுகளிலும் பன்றிகள் கட்டாயம் இருக்கும். பலர், பன்றிப் பண்ணைகளை தொழிலாகவே நடத்தினார்கள். 1974-ல், நாடு முழுக்க 9,000 பன்றிப் பண்ணைகள். இவற்றில், ஏழரை லட்சம் பன்றிகள். மருந்துக்குக்கூட சுகாதாரம் என்பதே இல்லை. கழிவுகள், பொதுச் சாக்கடைகளில் கலந்தன. லீ, ஐ.நா. சபையின் உதவியை நாடினார். பொங்கோல் (Punggol) என்னும் இடத்தில், நவீனமான சுகாதார வசதிகளுடன் கூடிய பன்றிப் பண்ணையை அரசாங்கம் நிறுவியது. தனியார்கள் இங்கே வந்தாக வேண்டும் என்று அரசாங்கம் நிர்ப்பந்தம் செய்தது. இரண்டே வருடங்களில், ஆறாயிரத்துக்கும் அதிகமான பண்ணைக்காரர்கள், பொங்கோலில் அடைக்கலம் ஆயினர். விரைவில், அங்கு இருந்த வசதிகளைப் பார்த்து மற்றவர்களும் வந்தார்கள். பன்றிகள் பிரச்னை போயே போச்.

Story image

1980-1988 காலகட்டத்தில், சிங்கப்பூரின் கலாசாரம், வெளியுறவு ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்த தனபாலன் சொன்னார் – ‘சுத்தமான சிங்கப்பூர் என்பது தானாகவே நிகழ்ந்ததல்ல. கடும் உழைப்பால் நடந்தது. திட்டமிட்ட இயக்கமும், பிரசாரமும், இந்த முயற்சியின் முக்கிய அம்சங்கள்’.

நாட்டைச் சுகாதாரமானதாக ஆக்கியவுடன், லீ அடுத்த படிநிலைக்குப் போனார். சிங்கப்பூரில் பார்க்கும் இடமெல்லாம் புல்வெளிகள், பூங்காக்கள், நிழல் தரும் மரங்கள், சிரிக்கும் பூக்கள் என்று அழகு கொஞ்ச வேண்டும். இதற்காக, 1971 நவம்பர் மாதம், மரம் நடும் இயக்கம் தொடங்கினார். இந்தப் பாரம்பரியம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் தொடர்கிறது. இதுவரை, பல லட்சம் மரங்கள் நடப்பட்டு, வேரூன்றி, கிளைகள் பரப்பி, விழுதுகள் விட்டுவிட்டன. இதைவிட முக்கியமாக, இளைய தலைமுறையினர் மனங்களில், மரங்கள், பசுமை ஆகியவை பற்றிய சிந்தனை விதைக்கப்பட்டுவிட்டது.

சுத்தம், சுகாதாரம், பசுமைச் சூழல். அற்புதக் கனவுகள். வீடுகளையும், பொது இடங்களையும் சுத்தமாக, பசுமையாக வைத்துக்கொள்வதில் மக்கள் பெருமைப்பட்டார்கள். இதில் ஒரு நடைமுறைப் பிரச்னை வந்தது. தண்ணீர்த் தட்டுப்பாடு. சிங்கப்பூரில் கிடைத்த தண்ணீர், நாட்டின் தாகத்தில் பாதியை மட்டுமே தணித்தது. ஆனால், நிதர்சன நிஜங்கள், கனவுகளைக் கலைக்க லீ அனுமதிக்கமாட்டார். தடைகளா? தாண்டுவோம். தாண்டுவதற்குத்தானே தடைகள்.

சிங்கப்பூர் நான்குமுனைத் திட்டம் தீட்டினார்கள்.

1. இறக்குமதி - மலேஷியாவிலிருந்து குடிநீரை விலைக்கு வாங்குவதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 1961 ஒப்பந்தம் - 50 வருடத் தண்ணீர் சப்ளைக்கு. 1962 ஒப்பந்தம் - 2061 வரையிலான 99 வருடங்களுக்கு. நாட்டின் சுமார் 40 சதவிகிதத் தேவையை இந்த இரு ஒப்பந்தங்களும் பூர்த்தி செய்யும்.

2. மழைநீர் சேமிப்பு - கால்வாய்கள், அணைகள், நீர்த்தேக்கங்கள் மூலமாக, மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது. 20 சதவிகிதத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

3. கழிவுநீர் சுத்திகரிப்பு - இவை, கழிவுநீரைக் குடிநீராக மாற்றும் மையங்கள். 2002-ல், முதல் சுத்திகரிப்பு ஆலை வந்தது. இன்று, நான்கு ஆலைகள் இருக்கின்றன. சிங்கப்பூரின் தேவையில் 30 சதவிகிதத்தை தீர்க்கின்றன.

4. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் - 2005-ல், இந்தச் சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டது. இந்த முறையில், தண்ணீர் தயாரிப்புச் செலவு மிக அதிகம். 10 சதவிகிதத் தேவைக்கு இந்த முறை உதவுகிறது.

Stockholm International Water Institute என்னும் ஸ்வீடன் நாட்டு அமைப்பு, வித்தியாசமான சிந்தனையில் தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நாட்டுக்கு, ஒவ்வொரு வருடமும் பரிசு தருகிறது. 2007-ல் கெளரவிக்கப்பட்ட நாடு, சிங்கப்பூர்.

2060-ல், தண்ணீர்த் தேவையில் தன்னிறைவை எட்டுவது சிங்கப்பூரின் இலக்கு. நிச்சயம் சாதித்துவிடுவார்கள். ‘முடியாது’ என்னும் வார்த்தை சிங்கப்பூர் அகராதியில் கிடையாதே?

* இப்போது, மென்று தின்னும் சூயிங் கம்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. மென்று துப்பும் சூயிங் கம்களுக்குத் தடை தொடர்கிறது.

** இவை மட்டுமல்ல. போக்குவரத்து விதிகளை மீறுதல், போதை மருந்துகள் வைத்திருத்தல், சாப்பிடுதல், ஓரினச் சேர்க்கை ஆகியவையும் தண்டிக்கப்படும் குற்றங்கள்.

*** சமூக நல விரோதிகளைத் தண்டிக்க மட்டுமல்லாமல், ராணுவத்திலும், ஏன் வீடுகளிலும் கட்டுப்பாட்டை வளர்க்க, பிரம்பு பயன்படுகிறது. பிளாஸ்டிக் கைப்பிடி வைத்த பிரம்புகளைப் பல சிங்கப்பூர் கடைகளில் பார்க்கலாம்.


(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.