வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

33. எல்லோரும் நலம்வாழ…

பொது இடங்களில் எச்சில் துப்புவதை நிறுத்துதல், கை கழுவுதல், பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தமாக வைத்திருக்கும் இயக்கம்

Updated On :21 நவம்பர் 2015, 11:03 am

பொது இடங்களில் எச்சில் துப்புவதை நிறுத்துதல், கை கழுவுதல், பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தமாக வைத்திருக்கும் இயக்கம் (Let’s keep public toilets clean campaign), சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருப்போம் இயக்கம் (Keep Singapore Clean Campaign) என்று தொடங்கிய பிரச்சார இயக்கங்கள், அடுத்த கட்டமாக, பற்களின் ஆரோக்கியம் இயக்கம் (Dental Health Campaign) தேசீய இதய வாரம் (National Heart Week) எனச் சுத்தத்திலிருந்து உடல் ஆரோக்கியத்துக்கு முன்னேறின. புகைத் தடை, ஆரோக்கிய உணவுகள் என வரிசையாகத் திட்டமிட்டுத் தீட்டப்பட்ட இயக்கங்கள், மக்கள் உணராமலே, அவர்களை ஆரோக்கியத்தின் ஒவ்வொரு படியாக மேலே அழைத்துச் சென்றன.

இவை வரும் முன் தடுக்கும் முயற்சிகள். எத்தனைதான் சுத்தமும் சுகாதாரமுமாக இருந்தாலும், நோய்கள் வருவதைத் தடுக்கமுடியாது. அப்போது மருத்துவ வசதிகள் வேண்டும். 1960 – களில், சிங்கப்பூரில் எதுவுமே இல்லை - தேவையான மருத்துவர்கள் இல்லை, இருந்தவர்களிடம் திறமை இல்லை, நவீன மருத்துவக் கருவிகள் இல்லை, மருந்துகள் இல்லை.

அரசு மருத்துவமனை நகரத்தில் மட்டுமே இருந்தது, இங்கே மருத்துவ வசதிகள் இலவசம். வசதி கொண்டவர்கள் தனியார் மருத்துவ மனைகளுக்குப் போனார்கள். அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதியது. சிரமம் காரணமாக, புறநகர்ப் பகுதிகளிலும், கிராமங்களிலும் இருந்த மக்கள் மருத்துவ மனைகளுக்குப் போவதையே தவிர்த்தார்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடும் பழக்கம் வசதிகள் கொண்ட ஒரு சிலரிடமே இருந்தது. அரசு மருத்துவ மனைக்குப் பயணித்து. அங்கு நீள க்யூவில் நிற்கும் சிரமம் முக்கிய காரணம்.  

மக்களின் தேவைகளை, சிரமங்களைப் புரிந்துகொள்வதில். தீர்வு காண்பதில், லீ தனித்திறமை கொண்டவர். 1965 - இல், அரசாங்கம் பொது மருத்துவமனையின் கிளைகளைப் பல புறநகர்ப் பகுதிகளிலும், கிராமங்களிலும் திறந்தார். இங்கே, தடுப்பூசிகள் போடுதல், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, கர்ப்பிணிப் பெண்களுக்கான டெஸ்ட்கள், உணவு அறிவுரைகள், பல் மருத்துவம், முதலுதவி, சிறு நோய்களுக்குச் சிகிச்சை, காயங்களுக்குக் கட்டுப்போடுதல் போன்ற வசதிகள் தந்தார்கள். ஏராளமான அக்கம் பக்க மக்கள் வந்தார்கள். தொற்று நோய்கள் வராமல் தடுக்கப்பட்டன, வந்தால், பரவாமல் நிறுத்தப்பட்டன.  மக்களின் உடல்நலம் கணிசமாக முன்னேறியது. பெரிய உபாதைகளுக்கு மட்டுமே நகரத்தின் பொது மருத்துவமனைக்குப் போனார்கள். அங்கு, கூட்டம் குறைந்தது. மருத்துவர்கள் ஒவ்வோரு நோயாளியோடும் அதிக நேரம் செலவிட முடிந்தது, அதிகக் கவனத்தோடு சிகிச்சை தர முடிந்தது. நாடு முழுக்க மருத்துவச் சேவையின் தரம் உயர்ந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

Story image

அரசு மருத்துவமனைகள் தங்கள் சேவைகளையும், மருந்துகளையும் மக்களுக்கு இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தார்கள். மருத்துவச் செலவுகள் அரசாங்கத்தின் பொறுப்பு என்னும் இங்கிலாந்து நாட்டின் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டிருந்தது.  இந்தக் கொள்கை ஏழைகளுக்கு மாபெரும் உதவிக் கரம் என்று சிங்கப்பூருக்குத் திரும்பியபோது லீயும் நினைத்திருந்தார். ஆனால், அனுபவம் அவர் மனதை மாற்றியது. அரசு மருத்துவமனைகள் இயங்கும் விதத்தை லீ நேரடியாகக் கவனித்தார்.  நோயாளிகள் இங்கே வருவார்கள். இலவச மருந்துகளை வாங்கிக்கொள்வார்கள். இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். பிறகு மருந்தைக் குப்பைத்தொட்டியில் போடுவார்கள். தனியார் மருத்துவ மனைக்குப் போவார்கள். அரசுக்கு நஷ்டம். மக்களுக்கும் பலன் இல்லை. 

லீ இலவசங்களை வெறுப்பவர். மக்கள் அரசிடம் கையேந்தி நிற்பது அவரைப் பொறுத்தவரை, ஒருவிதப் பிச்சைக்காரத்தனம்.  இலவசங்களை லீ வெறுத்ததற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு - இலவசமாக நவரத்தினங்களையே தந்தாலும், மக்கள் மதிக்கமாட்டார்கள். ஓசிக்கு வாங்கிப் பழகுபவர்கள், தேசத்தை உறிஞ்சி வாழும் அட்டைகள், தன்னம்பிக்கை இல்லாத நடைப் பிணங்கள்.

ஆகவே, லீ எடுத்த முடிவு, அரசு மருத்துவமனைகளில் இனிமேல் இலவசச் சிகிச்சை கிடையாது. எத்தனை தரித்திர நாராயணனாக இருந்தாலும், 50 சென்ட் பணம் தரவேண்டும். ஏழை மக்கள் குமுறி எழுவார்கள் என்று எல்லோரும் எச்சரித்தார்கள்.  50 சென்ட் மிகச் சிறிய தொகை, அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று லீ நம்பினார். அவர் கணிப்பு மிகச் சரியாக இருந்தது. சில நாட்கள் முணுமுணுக்குப் பிறகு, இது வெறும் அடையாளக் கட்டணம்தான் என்று புரிந்துகொண்டார்கள், ஏற்றுக்கொண்டார்கள்.

Story image

தன்னுடையவும், தன் குடும்பத்துடையவும் மருத்துவச் செலவுகளுக்குக் குடிமக்கள்தாம் பணம் தரவேண்டும் என்பதில் லீ தெளிவாக இருந்தார். அதே சமயம், வசதி இல்லை என்னும் காரணத்துக்காக ஒரு சிங்கப்பூரியன்கூடத் தேவையான மருத்துவ வசதி பெற முடியாத நிலையில் இருக்கக்கூடாது.  என்ன செய்யலாம்? ஒரு குடிமகன் தனக்கும், தன் குடும்பத்துக்கும் சராசரியாக ஆண்டுக்கு எத்தனை மருத்துவச் செலவு செய்கிறான் என்று லீ அதிகாரிகளிடம் கணக்குப் போடச் சொன்னார். சாரசரி மருத்துவச் செலவு, வருமானத்தின் ஆறு சதவிகிதமாக இருந்தது.

1983 - இல், அரசாங்கம் தேசீய ஆரோக்கியத் திட்டத்தைப் (National Health Plan) பக்காவாக வடிவமைத்து வெளியிட்டது.  மருத்துவச் செலவுக்காக, அனைவரும், தங்கள் சேமநல நிதிக்கு ஒரு சதவிகித வருமானம் தரவேண்டும் என்னும் சட்டம் அடுத்த வருடம் வந்தது. மெடிஸேவ் (Medisave) என்னும் இந்த முறையினால், தங்கள் மருத்துவச் செலவுக்கு ஒவ்வொருவரும் பணம் சேமித்தார்கள். இதையும் தாண்டிச் செலவுகள் அதிகமானால், அந்த அதிகபட்சச் செலவை அரசாங்கம் ஏற்றது.  தங்கள் ஆரோக்கியம் அரசின் முழு உபயமல்ல, தங்களுடையவும் பொறுப்பு என்பதை இந்த ஒரு சதவிகிதம் மக்கள் மனங்களில் பதியவைத்தது. இன்றைய விதிகளின்படி, வருமானத்தில் 8 முதல் 10.50 சதவிகிதம்வரை தரலாம். 

பல நாடுகளில், மூத்த குடிமக்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றிருந்தது. அவர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்கும். அல்லது அவர்களுடைய உணவு, உடை, உறைவிடம் ஆகிய வசதிகளைத் தரும். இந்தச் சுமையைச் சிங்கப்பூர் அரசு ஏற்கக்கூடாது தாங்காது என்பது லீ முடிவு. சேமநல நிதியின் ஒரு பகுதியை, அரசு நிறுவனங்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்யவைத்தார். இந்த வருமானம் ஓய்வூதியம் கிடைக்க உதவியது. இவை அத்தனையுமே, இலவசங்களல்ல, யூனியன்கள் சேமநல நிதி மூலமாகத் தங்கள் கைகளே தங்களுக்குச் செய்துகொண்ட உதவி.    

Medisave திட்டம் கவராத சில செலவினங்களுக்கு உதவ, 1990 - இல் Medishield வந்தது. நோயாளிகளின் வருமானத்துக்கு ஏற்ப, மருத்துவச் செலவுகளில் 80 சதவிகிதம் வரை அரசாங்கம் தருகிறது. இந்த 20 சதவிகிதம்கூடத் தர இயலாத ஏழைகளுக்காக, 1993 - இல் அரசு. Medifund என்னும் திட்டம் கொண்டுவந்தார்கள்.  அரசோடு, தனியாரும் பல மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டங்கள் அளிக்கிறார்கள். 

மருத்துவ வசதிகளைப் பெருக்க, தனியாரும் மருத்துவமனைகள் தொடங்க அரசு உத்வேகம் தந்தது. அரசுக்கும், தனியாருக்குமிடையே போட்டி. இரு தரப்பாரும் சிகிச்சைத் தரத்தை உயர்த்தினார்கள், கட்டணங்களைக் குறைத்தார்கள். மருத்துவமனைகளுக்குப் போனால், எத்தனை பணம் செலவாகும் என்பது புரியாத புதிராக இருந்த நிலை மாறியது. ஒவ்வொரு வித அறுவைச் சிகிற்சைக்கும் எவ்வளவு செலவு என்று மருத்துவமனைகள் தங்கள் இணையதளங்களில் அறிவிக்கும் முறை தொடங்கியது, தொடர்கிறது.

இத்தகைய புதுமையான அணுகுமுறைகளால், மக்கள் உடல்நலம் காப்பதில், சிங்கப்பூர் எத்தகைய சிகரங்கள் தொட்டிருக்கிறார்கள் தெரியுமா? நாட்டின் உடல்நலக் குறியீடுளாக, உலக சுகாதார நிறுவனம் பயன்படுத்தும் சில அளவுகோல்களின்படி விவரங்கள் இதோ:

ஆயுள் எதிர்பார்ப்பு

ஆண்கள் - 81 வருடங்கள் (1990 - 73 வருடங்களாக இருந்தது.)

பெண்கள் - 85 வருடங்கள் (1990 - 78 வருடங்களாக இருந்தது.)

பிரசவத்தின்போது குழந்தைகள் மரணம்

ஆயிரத்தில் 1.1 குழந்தை. (1990 - இல், ஆயிரத்தில் 4 குழந்தைகளாக இருந்தது.)

ஒன்றிலிருந்து ஐந்து வயது வரை குழந்தைகள் மரணம்

ஆயிரத்தில் 2.2 குழந்தைகள். (1990 - இல், ஆயிரத்தில் 6.2 குழந்தைகளாக இருந்தது.)

ஐந்து வயதில் குழந்தைகள் மரணம்

ஆயிரத்தில் 2.8 குழந்தைகள். (1990 - இல், ஆயிரத்தில் 7.7 குழந்தைகளாக இருந்தது.)

பிரசவத்தில் தாய்மார்கள் மரணம்

லட்சத்துக்கு 6 பேர். (1990 - இல், லட்சத்துக்கு 8 பேர்.)

தொற்று நோய்களால் மரணம்

2000 - ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை. ஹெச்.ஐ.வி, மலேரியா, தட்டம்மை ஆகிய நோய்களால் ஒரு இழப்புக்கூட இல்லை. தட்டம்மை, போலியோ, பொன்னுக்கு வீங்கி, மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்கள் முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டன. காசநோய். தொழுநோய் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.   

மருத்துவர்கள் எண்ணிக்கை

500 பேருக்கு ஒருவர்.

செவிலியர்கள் எண்ணிக்கை

174 பேருக்கு ஒருவர்

சுத்தக் குடிநீர், சுகாதார வசதிகள்

Story image

குடிமக்கள் அத்தனை பேருக்கும் சுத்தக் குடிநீர் வசதி இருக்கிறது. சுகாதார வசதிகள் 99 சதவிகிதத்தினருக்கு இருக்கிறது, மிச்சம் ஒரு சதவிகிதத்தினரைப் போய்ச் சேரவேண்டும்.

Bloomberg என்னும் பிரபல ஊடக நிறுவனம் 2014 - இல், சிங்கப்பூரின் உடல்நலத் திட்டங்களுக்கு உலகின் முதல் இடம் தந்திருக்கிறது. சுமார் 50 வருடங்களுக்கு முன்னால், அடிமட்டத்திலிருந்த மருத்துவ வசதிகளை இத்தனை தூரம் உயர்த்தியிருப்பது ஒரு விதச் சாதனை என்றால், குறைந்த செலவில் இதைச் செய்து முடித்திருப்பது அதைவிடப் பெரிய சாதனை. அமெரிக்காவோடு ஒப்பிட்டால், கால்பங்கு செலவு: ஐரோப்பிய நாடுகளின் செலவில் அரைப் பங்கு.   

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.